கணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்

கணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்

 

கணவன் மனைவி இணையாது… தனித்த நிலையில் தவத்தின் மூலம் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் முனித் தன்மை என்பதே விஷத் தன்மை கொண்டது. ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது.

1.பெண் பால் என்ற நிலையில் இணைந்து வரப்படும் போது தான்
2.விஷத்தின் தன்மை ஒடுக்கி
3.ஒரு துடிப்பின் நிலையாக இயங்கி
4.அணுவின் சக்தி பெறக்கூடிய தகுதி பெறும்.

இதையெல்லாம் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

ஏனென்றால் கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி… ஒரே எண்ணத்துடன் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் எண்ணங்கள் கை கூடி அந்தக் காரியங்கள் சித்தியாகும்.

ஆனால் கணவன் ஒரு வேலையைச் செய்யப் போனால் இதை எதற்குச் செய்து கொண்டிருக்கிறார்…? என்று மனைவி இடைமறித்து அழுத்தமாகச் சொன்னால் போதும்.

அதற்கு அடுத்து கணவன் என்ன வேலை செய்தாலும் கூட இந்தக் குறை உணர்வுகளே அங்கே வளரும்.

ஆகவே குடும்பத்தில் வாழும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1.பெண்பால் என்ற உணர்வு எதனில் கலக்கின்றதோ அதனின் உணர்வின் கலவை கொண்டு
2.அடுத்து கருத்தன்மை பெறக்கூடிய தகுதி பெற்று விடுகின்றது. (ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்).

இதைப் போன்ற நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்…
பல கோடி உணர்வுகள்
பல குடும்பங்களில்
பல நிலைகள்
பல வித்தியாசமான நிலைகள் உண்டு.

கணவன் நல்லவனாக இருக்கலாம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் அறியாமையினால் ஒரு வேதனைப்படும் செயலைச் செயல்படுத்தும்போது சங்கடமான உணர்வுகளைக் குடும்பத்தில் உருவாக்குகின்றது.

வேதனை என்ற விஷத்தன்மை வரும் பொழுது மனைவியை நினைக்கும் போதெல்லாம் அடிக்கடி வெறுப்பின் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வரும்.

பின் அடுத்து மனைவி நல்லதைச் சொன்னாலும் கணவன் அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை. அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடுகின்றது,

இப்படி விளைந்த உணர்வு பரவியபின் அந்தத் தவறின் உணர்வு அங்கேயும் விளைகின்றது.
1.இருவருமே இதே உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இருவருக்குமே நோய் வருகின்றது.
2.கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி என்று வரிசைப்படுத்தி வரும்.

இருவரும் ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி… இதை வாங்கலாம்…! என்று எண்ணினாலும் வேதனை கலந்த உணர்வுடன் இருவருமே செல்லப்படும் பொழுது அந்தப் பொருளை வாங்கினாலும்… வாங்கிய பின் இரண்டு பேருக்கும் பகைமை வரும்.

1.அப்போது அந்தப் பொருளைப் பாதுகாக்கும் சக்தியை இருவருமே இழந்து விடுகின்றனர்.
2.இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான்.

கணவன் மனைவி இருவருமே அருள் ஒளியைப் பெற்று அதைக் இருவருக்குள்ளும் கருவாக்கினால் மகிழ்ந்து வாழச் செய்யும். வெறுப்போ பகைமையோ வளராது… நோயாகவும் மாற்றாது.

அதற்காக வேண்டித் தான் அதிகாலை துருவ தியானத்தில் இருவருமே ஒன்று போல் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் அவசியம் எண்ணித் தியானிக்க வேண்டும் என்று உங்களிடம் யாம் சொல்வது.

இந்தப் பழக்கத்திற்கு இருவருமே வந்து விட்டால் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் தன்னாலே பெருகும்.

Leave a Reply