ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்

ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது – ஈஸ்வரபட்டர்

 

உலகம் தோன்றியது முதலே வாழ்ந்திடும் ஜீவ அணுக்கள் எல்லாமே இந்த உலகம் என்று தோன்றியதோ… அன்றே ஆண்டவன் சக்தியில் அருளப் பெற்ற… அவ்வாண்டவன் சக்தியில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

எறும்பிலிருந்து புழு பூச்சி மற்ற மிருகங்கள் பறவைகள் மரம் செடி கொடிகள் மனிதர்கள் யானை திமிங்கலம் நீரில் வாழ்பவை நிலத்தில் வாழ்பவை எல்லாமே எண்ணிலடங்கா வருடங்கள் முதல் கொண்டே அந்த ஆண்டவன் சக்தியில் ஆண்டவன் பிம்பத்தில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

இந்த உயிர் அணுக்கள் எல்லாமே ஆண்டவன் தானப்பா…
1.எல்லா ஜீவராசிகளும் ஆண்டவன் தான்… ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் என்று ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டால்
2.“தான்…!” என்ற அகங்காரமே தனித்து நில்லாதப்பா..!

ஜென்மங்களின் முறையைத்தான் பாட நிலையிலேயே அளித்துள்ளேன்.
1.நானும் ஆண்டவன் தான்… தன்னுள்ளும் ஆண்டவன் உள்ளான்.
2.தனக்கு எந்நிலை உள்ளதோ அந்நிலை தான் எல்லா ஜீவராசிகளிடமும் உள்ளது என்ற எண்ணம்
3.எல்லா மனிதர்களிடமும் தோன்றிவிட்டால் ஆண்டவனின் சக்தி என்ன…? என்று தெரிந்து கொள்ளலாம்
4.நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்து எது…? என்று புரிந்துவிடும்.

நம் மனித ஜென்மத்தில் நமக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலிருந்து தான் நாம் நம் ஆத்மாவிற்கு அழியா நிலையைத் தேடி வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையை நழுவ விட்டால்… நம் ஆத்மாவிற்கு இனி ஒரு சந்தர்ப்பம் “பல கோடி ஆண்டுகளானாலும்” கிடைப்பது அரிதிலும் அரிது என்பது புரிந்ததா…?

சந்தர்ப்பம் என்று சொன்னது… கல்கியில் ஆரம்பித்துக் கலியில் முடியும் காலத்திற்குப் பல கோடி ஆண்டுகள் ஆகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மனித உடல் ஏழு ஜென்மங்கள் எடுக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அடுத்து கல்கி பிறந்து பல அவதாரங்கள் எடுத்துப் பிறிதொரு கலி வரும் வரை நம் ஆத்மா அல்லல்பட்டுக் கொண்டு பல உடல்களை எடுத்து மனித ஜென்மம் எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.மனிதனுக்குத் தன் உடலில் உள்ள ஒரு உறுப்பு தான் இந்த உயிரும்…
2.தன் ஆயுள் உள்ளவரை தான் இந்த உயிர் இவ்வுடலில் இருக்கும்… என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே உள்ளது.

ஆனால் இந்த உடல் என்ற கூட்டில் அந்த ஆத்மா என்னும் ஆண்டவனின் சக்தி வந்து தான் இயக்குகிறது.
1.உயிர் எனும் ஆத்ம சக்தியே… ஆண்டவனின் சக்தியாக நமக்குள் இயங்குகிறது என்ற எண்ணம்… என்ற இந்த உண்மை…
2.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

Leave a Reply