தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்
மெய்யுடன் மெய்யாக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் உயிர் என்பது மெய்…! உணர்வுகள் அனைத்தும் மெய் ஆகி ஒளி என்ற உணர்வாகும் பொழுது உயிருடன் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.
அதனால்தான் இங்கே இராமேஸ்வரத்தில் நேரமாகி விட்டது என்று உணர்வின் (மனதை) தன்மையைக் கூட்டி இராமன் பூஜிக்கத் தொடங்கினான்.
இதைப் போல நாமும்
1.நம் வாழ்க்கையில் சந்தித்தோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்
3.பகைமை அற்ற வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்துக் கூட்டினால்
4.பேரருள் என்ற உணர்வுகள் பெருகி… பேரொளியாக மாற்றிடும் தன்மை வரும்.
ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை இங்கே உணர்த்துகின்றோம்.
உடல் என்று இருந்தாலும் அது நாளடைவில் கரையும் தன்மை தான் வளர்கின்றது.
1.உடல் கருகும்… ஆனால் உணர்வுகள் வளரும்
2.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… அந்த அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
3.அந்த அருள் ஒளியைப் பெறுவதற்கே நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம்.
உடல் வாழ்க்கையில் சேர்த்த எந்தச் செல்வமும்… இந்த உடலும் நம்முடன் வருவதில்லை.
ஆகவே அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளர்த்திடும் பருவம் கொண்டு உயர்ந்த நிலையாக இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியாக நாம் செல்வோம்…! என்று வேண்டுகின்றேன் (ஞானகுரு).
ஒவ்வொரு குடும்பங்களிலும் இதைப் போலச் செயலாற்றிப் பழகுங்கள். பண்பட்டு வளரும் தன்மையாகக் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழுங்கள்.
நாம் தனித்து இருந்தாலும்… அன்புடன் பண்புடன் தனித்திருக்கும் நிலை வர வேண்டும்… உணர்வுகள் ஒன்றி வாழ வேண்டும். அதாவது தனித் தனியாக என்ற நிலை இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி வாழலாம்.
நம் குரு காட்டிய அருள் வழியில் அன்புடன் அரவணைத்து வாழும் உணர்வுகளை உடலிலே வளர்த்து
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும்போது செயல்கள் ஒன்றாக இணையும்.
2.செயல் ஒன்றானாலும் உடல் தனித்தனிதான்
3.உடல்கள்… உணர்வுகள்… தன் தன் நிலைகள் ஒன்றாக உருவாக்கும் பொழுது
4.பிறிதொரு உணர்வு நமக்குள் வந்தாலும் ஒன்றி வாழ்கின்றது… நமக்கு அது நன்மை பயக்கிறது.
ஆகவே ஒன்றி வாழும் உணர்வே என்றும் நிலையானதாக மாறுகின்றது. அந்த அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அருள் ஞானம் பெருக வேண்டும் இந்த உடலிலேயே பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.
வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ மகரிஷியின் அருள் உணர்வை நீங்கள் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு பெற எமது ஆசியும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
அழியாச் செல்வமான பேரருளைப் பெற்று பேரின்பப் பெருவாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).