நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான். அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலைகொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க இன்றைய நிலையில் மீளச் சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

1.இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட
2.நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே…
1.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி
2.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான்
3.இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை ஒவ்வொரு உயிராத்மாக்களுக்கும் உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை.

1.பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.
2.எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய நிலைக்காக
3.தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ ஆத்மாவைச் சிதறவிட்டு
4.பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்குமே வாழ்நாளைக் கழித்து
5.நமக்குக் கிடைத்த இவ்வாய்ப்பின் நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் என்பது நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான்…!

நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

1.திருவள்ளுவர் அரசனாக வாழவில்லை
2.தன் ஆத்மாவையே கவியாக்கி ஞான சக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.

அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு இன்று உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார். அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

Leave a Reply