விஷ்ணு தனுசை எடுத்தால் தான் வேதனைகளை அகற்ற முடியும்

விஷ்ணு தனுசை எடுத்தால் தான் வேதனைகளை அகற்ற முடியும்

 

தன் குழந்தையைக் காக்க தாய் தந்தையர்கள் எத்தனையோ வேதனைகள் படுகின்றார்கள்.

பிள்ளைகளுக்காக வேண்டிச் சேமித்து வைக்க வேண்டும் என்ற நிலை தான் வருகின்றது. நாம் கஷ்டப்பட்டோம் ஆனால் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என்று விரும்புகின்றனர்.

பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணும்போது
1.பிறர் வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ வேதனையான செயல்களையோ பார்க்கப்படும்போது
2.தன் குழந்தையைக் காக்க வேண்டுமென்ற உணர்வு தான் வருகின்றது
3.இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு முதலில் உள்ளே நுழைந்து விடுகின்றது.

அதே போல் நாம் எண்ணியபடி குழந்தை வளர வேண்டும் என்று விரும்புகின்றோம். பள்ளியில் அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே இவன் எதிர்காலத்தில் எப்படித்தான் வாழப்போகின்றானோ…! என்ற வேதனை வருகின்றது.

வேதனை வரும்போது அடுத்து கோபம் வரும். இந்த உணர்வு உடலிலே பட்டபின் சிவ தனுசு (உடலைக் காக்கும் உணர்வு) என்ன செய்யும்…?

1.இப்படிச் செய்கின்றானே…! என்று சொல்லி நாம் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.அது அவனைப் போய்த் தாக்கும்.

எது…? நம்மை அறியாமலேயே நாம் இந்த ஆயுதத்தைப் (சிவ தனுசை) பயன்படுத்துகின்றோம்.

அப்போது நமக்குள் உருவானது ஓ…ம் நமச்சிவாய…! உடல் சிவமாகின்றது. மீண்டும் சிவாய நம ஓம்…! “இப்படிச் செய்கின்றானே…!” என்று அவனைச் சொல்லப்படும் போது அதே உணர்ச்சிகள் அங்கே பாய்கின்றது.

ஆக…
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக அவன் செயலையே மீண்டும் ஊக்குவிக்கும் நிலைக்குத்தான் நாம் செல்கின்றோமே தவிர
2.அவன் செயலை நல்லதாக மாற்றும் தன்மை இல்லாது போய்விடுகிறது.

குழந்தை படிக்கவில்லை என்றால் உடனே என்ன செய்கின்றோம்…?

அவன் எதிர்காலத்தைப் பற்றி வர்ணிக்கின்றோம். அவன் படிக்கவில்லையே என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டபின்… இப்படி இருக்கின்றான்… எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்ற வேதனை வருகிறது.

வேதனையின் தன்மை வரப்படும்போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம். அந்த சிந்திக்கும் தன்மை இழந்தபின் திருப்பிப் பேசுகின்றோம். அதுதான் ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம்.

வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வரப்படும்போது வாலி ஆகின்றது.
1.வாலி என்ற உணர்வுகள் உள்ளே சென்று
2,நம் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்து அது வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்ற பின் நம் குழந்தை தான் என்று காக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை உதைக்கத்தான் சொல்லும்…. அல்லது அவனைத் திட்டச் சொல்லும்… அவனைச் சாபமிடச் செய்யும்…!

இதை எல்லாம் அவன் நுகர்ந்தால் என்ன செய்யும்…? அவன் என்ன செய்வான்…?

நம்மைப் பார்த்தாலே ஜிர்…! என்று வருவான். ஓ…ம் நமச்சிவாய சிவாயநம ஓ…ம். அதாவது இராமன் அம்பை எய்தால் தன் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான்.
1.நாம் எதைச் சொல்கின்றோமோ
2.திருப்பி அந்த பதில் தான் நமக்கும் வரும்.

எவ்வளவோ சொத்து வசதி எல்லாம் இருந்தாலும் நீங்கள் ஒரு தடவை உங்கள் பையனைத் திட்டிப் பாருங்கள். அங்கிருந்து என்ன பதில் வரும்…! என்று தெரியும் உங்களுக்கு.

இரண்டாவது தடவை மூன்றாவது தடவை திருப்பிச் சொல்லிச் சொல்லி இரண்டு பேரும் கடைசியில் எதிரி ஆகிவிடுவார்கள்.

என் பிள்ளையாவது..? என் அம்மாவாவது என் அப்பாவாவது..! என்று இப்படித்தான் வரும். இது தான் சிவதனுசு… தன் தன் உடலைக் காக்க இந்த உணர்வின் நிலைகள் எதைப் பெற்றதோ இந்த உடலைக் காக்கத் தான் (நுகர்ந்த உணர்வுகள்) அது எண்ணுகின்றது.

ஆனால் விஷ்ணு தனுசு…! இந்த உயிரின் நினைவு கொண்டு உடலில் வந்த தீமைகளை நீக்கி ஒளியானது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிப் பேரொளியாக ஆனது தான் அங்கே…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் வந்த கோபத்தையும் வேதனையையும் அது அடக்குகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் காத்து நம் குழந்தைக்கும் நல் உணர்வினைப் பாய்ச்ச முடியும். வேதனைகளிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியும்.

Leave a Reply