
வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்
நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலமும் சோர்வும்… சோர்விலிருந்து ஏற்படும் கோபமும்… கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறியுணர்வுகளாலும்…
1.இதிலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
2.அதிலிருந்து பல உபாதைகளை நாமே நம் உடலுக்குள் ஏற்றிக் கொள்கின்றோம்.
கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கின்றது. அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாக நம் உடலில் ஏறுகின்றது.
1.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க…
2.நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களும் ஒருநிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கின்றது.
அதனால் நம் உடலிலுள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாக இருக்கும் நல் நிலைகள் மாறி பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது.
மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் தொடர் நிலையெல்லாம்…!
1.சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மன நிலையை அமைதிப்படுத்தி
2.அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.
3.தெளிவை நாமே தான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
உதாரணமாக நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் ஏசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாமென்ன தவறு செய்தோம்…? என்று எண்ணுகின்றோம்.
ஆனாலும்… நம்மிடம் தவறில்லாத பொழுது நம்மை ஏசுபவனை ஆத்திரத்துடன் எண்ணி…
1.இப்படியெல்லாம் செய்பவன் அவனே அந்தத் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று
2.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.
நம் எண்ணத்தில் அவன் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?
1.அவர்கள் நல் உணர்வு பெறட்டும்… நல் வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோத விடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களிலிருந்து காத்துக் கொள்கின்றோம்.
வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…?
ஏனென்றால் பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ துவேஷித்தோ வருபவனெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையேதான் ஏமாற்றி வாழ்கின்றான்.
1.மன நிலையை ஒரு நிலைப்படுத்தி…
2.சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் பல நெறி முறைகள் உண்டப்பா…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.