படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகப் படைக்கலாம்… ஆனால் ஏன் அப்படிப் படைக்கவில்லை…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகப் படைக்கலாம்… ஆனால் ஏன் அப்படிப் படைக்கவில்லை…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கேள்வி:
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கின்றார் என்பது சான்றோர்கள் வாக்கு. அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம்.

1.அப்படி இருக்க தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…?
2.எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துதான் செயல்படுகின்றோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…! தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா…! ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் பதில்:
இறைவன் படைத்த படைப்பே நாம். நாம் மட்டுமல்ல, சகலமுமே அதிலே ஐக்கியப்படும். இந்த நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.

நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது பாம்புமுள்ளது மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது. மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் ஏன் கேள்வியாக்கினீர்…?

இவ்வுலகில் உதித்த உயிர் அணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கின்றது. உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமேதான் மாறு கொண்டுள்ளது. ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆண்டவன் படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு…? என்ற எண்ணம்தானே உம் எண்ணம்…!

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள்தான் நம் பூமியில் வீசுகின்றது.

நம் பூமிக்கும் மேல் நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேலுள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு… இயற்கைத் தன்மையுண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொதுவான மண்டலம் தான் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அப் பால்வெளி மண்டலத்திலுள்ள அமிலத்தில் பட்டு பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத் தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன் அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.

அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள்… மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.

எந்த அமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்த நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது. பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடிவிடுகின்றன.

எந்த எண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்த நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும்
2.உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் உருப்பெறும் நிலையில்
3.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும்தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
4.அப்பரம்பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல நல்லவனை(ளை)யும் கெட்டவனை(ளை)யும்.

இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்திதான். அதிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே…! அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…!

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினில்தான் உள்ளது
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினில்தான் உண்டு.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை. பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால்
1.நமக்குத்தான் நம் ஆத்மா சொந்தம்
2.நம் உடலில் மற்ற உயிரணுக்கள் இருந்தாலும் அதற்கு நம் உடலும் நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப் போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றிலுள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்…!

நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால்தான் நல்லவன்… கெட்டவன்… என்ற நிலை வருவது.

1.ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான்.
2.மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜெந்திற்குச் செல்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்குண்டு. ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

Leave a Reply