நேற்று வியாழன்… இன்று பூமி… நாளை சந்திரனா…! – ஈஸ்வரபட்டர்

நேற்று வியாழன்… இன்று பூமி… நாளை சந்திரனா… – ஈஸ்வரபட்டர்

 

ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் நிலை உள்ளது. தொடர் நிலை இல்லாத செயல் நிலை எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு. வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடர் இல்லாமல் ஒன்றில்லை.

வியாழனில் இருந்து தான் நம் பூமிக்கு உயிரணுக்கள் வந்து தோன்றின என்பதனை ஏற்கனவே உணர்த்தினேன்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமி தான் வியாழ மண்டலம். ஆனால்
1.மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
2.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்களும் இன்று அங்கில்லை.

ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லாரும்…!

இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனில் இருந்து வந்தது தான்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே…
1.தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு
2.சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகி கொண்டவுடன்
3.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
4.நீர் நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
5.சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர்ச்சியை இப்பூமியில் வளரவிட்டு
6.அதன் தொடர் நிலையிலிருந்து வந்தது தான் இக்கலி காலம் வரை இப்பூமியின் இன்றைய நிலை.

சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலை உண்டு…!

நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட போகர் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப்பூமியில் பதியச் செய்தார்.

தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை தான் போகரின் நிலை.

முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்துச் செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.

1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை – ரிஷிகளுக்கும் ஆசை உண்டு
2.ஆசை இல்லாவிட்டால் எதுவுமே இல்லை…!

பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில்தான் அனைத்துமே செயல் கொள்கின்றது. வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் தான் நம் பூமி சக்தி பெற்றது…!

நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப்போகின்றது. சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால்தான் செயல்படுத்திட முடிந்திடும்.

1.சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை ஒரு வருடமல்ல… இரண்டு வருடமல்ல…!
2.ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.

பல கோடி ஆண்டுகளாய் பல நற்சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே… இக்கலியினால்… கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால்… “மாற்றம் கொள்ளப் போகின்றது…”

நம் பூமியின் மாற்றத்தினால்…
1.இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப்போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால்
2.நம் பூமி மட்டுமல்ல இதன் தொடர்பினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
3.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
4.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை
5.இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது…!

Leave a Reply