பிற ஆத்மாக்களின் உணர்வின் உந்துதல் இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Life cylce of man

பிற ஆத்மாக்களின் உணர்வின் உந்துதல் இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?

மனித ஜென்மத்திலுருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

Leave a Reply