“சப்தரிஷி மண்டலம்” கேள்விக் குறி போல் தெரிவதன் காரணம் என்ன…?

big dipper - sapdharishi mandalams

“சப்தரிஷி மண்டலம்” கேள்விக் குறி போல் தெரிவதன் காரணம் என்ன…?

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுத் தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்

இதிலிருந்தெல்லாம் மீண்டு இன்னொரு மனிதனுடைய ஈர்ப்புக்குச் சிக்காமல் முதல் முதலில் நம் பூமியிலே வாழ்ந்த அகஸ்தியர் என்ன செய்தார்…?

நம் பூமியின் சக்திகளை எல்லாம் அறிந்தார். சூரியக் குடும்பத்திலிருந்து வரும் சக்திகளை எல்லாம் நம் பூமி வட துருவத்தின் வழியாக எப்படிக் கவர்கின்றது…? என்பதையும் உணர்ந்தார்.

அந்தத் துருவத்தையே எண்ணி ஏங்கி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக விண்ணிலே இன்றும் இருக்கின்றார்.

அதிலிருந்து ஒளிச் சரீரமாகப் போனவர்களிடமிருந்து பல பல ஒளி அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. அகஸ்தியனைப் பின்பற்றிப் போனவர்கள் தான் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

1.வானிலே நாம் பார்த்தால் அந்த ஏழு நட்சத்திரங்கள் தனியாகத் தெரியும்
2.கேள்விக் குறி போல் அது தெரியும்.

நாளை நீ எதுவாகப் போகின்றாய்…? இந்தப் பிள்ளை யார் (பிள்ளையார்) என்று கேள்விக் குறி போட்டிருக்கின்ற மாதிரி இதிலிருந்து தப்பிப் போனவர்கள் அனைவரும் எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அந்தக் கேள்விக் குறி மாதிரி… அந்த நட்சத்திரங்கள் இங்கிருந்து பார்க்கும் போது
1.நாம் எங்கே போக வேண்டும்
2.மனிதன் எப்படி இருக்க வேண்டும்…? என்று
3.கேள்விக் குறியாகப் போட்ட மனிதன் அங்கே இருக்கின்றான்.

இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து போன உயிரணுக்கள் நம் கண்ணுக்குப் பார்த்தால் தெரிகின்றதோ…?

ஒரு சிலர் இந்தத் தியானத்தில் இருப்போருக்கு உடலை விட்டு உயிராத்மா செல்லும் போது கொஞ்சமாவது தெரியும். பாக்கிப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இதே எண்ணத்தில் இருப்பதனால் காண முடிகிறது.

இந்த உயிராத்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவுடனே முதலில் சிறியதாக இருக்கும். சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய சக்தியை உணவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் விண்ணிலிருந்து வரும் விஷத்தை வடிகட்டி வெளியில் அனுப்புவதனால் அந்த வட்டத்திற்குள் இருப்பதை ஆகாரமாக எடுத்து இந்த உயிராத்மாக்கள் ஒளியின் சரீரமாக ஆகும்.

நாம் பூமியில் விளைய வைத்த இந்தச் சத்தை எடுத்து உடலாக மாற்றுகின்றது புழுவிலிருந்து மனிதன் வரையிலும். ஆனால்
1.இதிலே இந்த உணர்வை ஒளியாக மாற்றி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்திகளை எல்லாம்
3.தன்னிச்சையாக விஷத்தை முறித்து ஒளியாக மாற்றிடும் சக்தி இந்த ரிஷிகளுக்கு உண்டு.

அந்த அலைகள் விண்ணிலேயும் இருக்கின்றது. நம் பூமியிலும் படர்ந்திருக்கின்றது. அதை எடுப்பதற்காக வேண்டித் தான் இங்கே உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

கெட்டதை நீக்கி நல்லதை (ஒளியான உணர்வுகளை) எடுக்கக்கூடிய இந்த ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

Leave a Reply