உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்

serene spiritual force

உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்

 

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு தியானத்தின் மூலமாக வெளியிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் சிறுகச் சிறுகப் படர்ந்து இந்த நாட்டிற்கும் நன்மை செய்யும்… உடலுக்கும் நன்மை செய்யும்.. நம் எண்ணத்திற்கும் வலு வரும்.

இந்த உடலில் நாம் எத்தனை காலம் வாழப் போகின்றோம்…? அதிக பட்சம் நூறு வயது வரை வாழலாம். நூறு வயதிற்குப் பின் அப்புறம் இந்த உடலை விட்டு போகத்தானே வேண்டும்.

அதற்குள் நாம் சக்தியை எதன் வழியில் எங்கே பெருக்க வேண்டும்…?

இன்று உடலுடன் நாம் இருக்கும்போது
1.நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்த வேண்டும்.
2.அதன் வழி எண்ணத்தைப் பெருக்க வேண்டும்
3.நமக்குள் அந்தச் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இந்தப் பூமி முழுவதற்கும் நாம் விடும் மூச்சலைகள் உலகைக் காக்கும் எண்ணங்களாக வெளிப்பட வேண்டும்.

எப்பொழுதுமே… எதிலேயுமே… நாம் குறைகள் கண்டாலும் “அது நிவர்த்தியாக வேண்டும்…” என்ற எண்ணத்தில் தியானத்தைச் செய்து பழக வேண்டும்.

1.நிச்சயம் அந்த உணர்வுகள் நமக்குள் குறையாக வளராது
2.உலகைக் காக்கக் கூடிய நினைவாகவே அது வளரும்.

ஆகையினாலே நாம் ஒவ்வொருவரும் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்ற நிலையில் தென்னாட்டில் தோன்றிய நாம் (தமிழ் நாடு) முதலில் தெளிந்த நிலைகள் வர வேண்டும்.

இதிலே அரசியலை எண்ணவே கூடாது. ஏனென்றால் நாம் தான் அரசாங்கம். “அரசு நன்றாக இருக்க வேண்டும்…” என்று எல்லோரும் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகளால் நம் நாடு நன்றாக இருக்க… அதற்குண்டான நிலைகள் வளரும்.

நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது நல்ல உணர்வுகள் வளரும். அரசியல் பேதங்கள் வந்துவிட்டது என்றால் குறைகளைத் தான் கூறிக் கொண்டே இருப்போம்.

ஆனால் அரசியல் பேதமில்லாதபடி “அரசு இப்படித்தான் இருக்க வேண்டும்…” என்று நாம் எண்ணினோம் என்றால்
1.நாமும் அந்த நல்ல வழிக்குச் செல்கின்றோம்
2.மத பேதங்கள் இல்லாது… இன பேதங்கள் இல்லாது போகின்றோம்
3.நம் நாட்டை காக்கக் கூடிய நிலையாக வருகின்றோம்.

அதன் மூலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யலாம். அந்த உயர்ந்த பண்பின் நிலைகள் நம் நாட்டில் வர வேண்டும்.

ஏனென்றால் “தமிழ் பண்புகள்” என்பது என்றுமே… அன்றைய காலத்தில் இருந்து இன்று வரையிலும்… எல்லோரும் “குறையே இல்லாத நிலைகளை நிறைவான நிலைகளை அரவணைத்த நிலைகள் தான்…!”

சரித்திர பூர்வமாக எந்த நிலைகள் எடுத்துக் கொண்டாலும்… தமிழ் நாட்டிலிருந்து “அந்த ஞானிகள் இங்கிருந்து தான்…” உலகம் முழுவதும் உயர்ந்த தத்துவங்கள் பரவப்பட்டு இருக்கின்றது.

1.உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்
2.நாம் அனைவருமே எடுத்துக்காட்டாக வரவேண்டும்.

இந்த மாதிரிக் கொஞ்ச நாள் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியாலே நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம். எல்லோரையும் உயர்த்த வேண்டிய நிலைகள் வரும். நல்ல பண்புகள் கிடைக்கும். கருவிலே விளையக் கூடிய குழந்தைக்கும் இந்த மாதிரி செயல்பட்டு வாருங்கள்.

மத பேதமும் இன பேதமும் மொழி பேதமும் அரசியல் பேதமும் உலகம் முழுவதற்கும் இராட்சச உருவை எடுத்து ஆடுகிறது. அதைப் போன்ற நிலைகளை நாம் மறந்து செயல்பட்டால் எல்லாமே நல்லதாகும். இந்தக் காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை நாம் நீக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இங்கிருந்து உலகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். இதே நிலையில் நாம் தியானிப்போம்… பிரார்த்திப்போம்.

Leave a Reply