மெய் உணரும் தியான முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Courageous meditation

மெய் உணரும் தியான முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ் எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!

அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்கு கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”

Leave a Reply