செடிக்குத் தினமும் நீர் ஊற்றுவது போல் தான் எம்முடைய உபதேசம்…!

gnana pokisham 2

செடிக்குத் தினமும் நீர் ஊற்றுவது போல் தான் எம்முடைய உபதேசம்…!

உபதேசங்களைத் திருப்பிச் திருப்பிச் சொல்லுகின்றேன் (ஞானகுரு) என்று சிலர் நினைக்கலாம்…! ஆனால்
1.அடுத்தாற்போல் கேட்டால் மட்டும் சொல்லத் தெரியாது
2.அதை நினைக்கவும் தெரியாது… அதை பார்க்கவும் முடியாது.

சாமி போன தடவை சொன்னார்… இப்பொழுதும் சொல்கின்றார்… திருப்பியும் சொல்கின்றார்…. என்பார்கள்.

சாமி என்ன சொன்னார் என்று திருப்பிக் கேட்டால் அது தெரியாது.
1.என்ன சொன்னார்..?
2.எந்த வழியில் நடக்க வேண்டும்…? என்று தெரியாது.
3.தனக்குள் பதிய வைக்கத் தெரியாது… அதன் வழி நடக்கவும் தெரியாது.

ஒரு வார்த்தை திரும்ப வந்து விட்டால் போதும்… சாமி…! இதை நேற்றே சொன்னார். போன வாரம் சொன்னர். இந்த வாரமும் சொல்கின்றார் என்று
1.தனக்குள் பதிவு செய்யும் நிலையை
2.தனக்குத் தானே தண்டனை அனுபவித்து கொள்கிற மாதிரி தடைப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக இது மட்டும் தெரியும்.

ஏனென்றால் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். “தெளிந்த நிலைகள் பெறும்” அந்த உணர்வின் சக்தியை வளர்ப்பதற்குத் தான்
1.மாதம் தோறும் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதும்
2.அந்த உணர்வின் ஆற்றலை – மகரிஷிகள் காட்டிய நெறிகளை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்லவில்லை. உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். நிறையச் சொல்லிவிட்டால் முந்தி ஏன் சொல்லவில்லை… இப்பொழுது மட்டும் ஏன் சொல்கிறார்…? என்பார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சொல்லிக் கொண்டு வரவேண்டி இருக்கிறது. நிறையச் சொன்னாலும் ஜீரணிக்க முடியாதல்லவா…!

இருந்தாலும் இப்பொழுது சொல்வதை நாளைக்குக் காலையில் கேட்டால் தெரியாது. காலையில் என்ன…? இப்பொழுது கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டாலும் தெரியாது…!

நாளைக்கு நான் இதைத் திருப்பிச் சொன்னால்… உடனே சாமி நேற்று சொல்வதைத் தான் சொல்கின்றார்…!
1.இது நேற்றுச் சொன்னது தானே…
2.சரி சொல்லட்டும்… பார்த்துக் கொள்ளலாம்…. என்று சொல்லிக் கொண்டு
3.காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

அதைத் தான் நேற்று சாமி சொல்லிக் கேட்டோம் அல்லவா.. அதிலே இன்று என்ன பொருள் வருகின்றது என்று பார்த்தால் அது நல்லது.

உதாரணமாக ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் தான் முளைக்கும். தண்ணீர் ஊற்றவில்லை என்றால் எப்படி வளரும்…?

தன் உணர்வை உந்தி எடுத்தால் தான் அந்தச் செடி வளரும். ஆக அந்த உணர்வை எடுக்க மறந்து விட்டால் என்ன செய்யும்…? அது தன் இனத்தை வளர்க்குமா…?

அன்றைய இராமயாணத்தை இன்றைக்கும் சொல்கின்றார்கள் என்றால் அதே இராமயாணத்தை விடிய விடிய சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் இராமயாணம் என்ன என்றே தெரியாத வகையில் கதையைக் கேட்டு அதைப் பதிவு செய்து கொண்டு பாடத்தை ஒப்பிக்கின்றோம்.

ஆக… இராமாயணத்தின் சொன்னதை வாழ்க்கையில் ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றோமா என்றால் இல்லை.

மகாபாரதத்தை பற்றியும் பேசுகின்றோம் அதிலே என்ன சொல்கின்றார்கள்..! என்றால் கதையைப் படிக்கின்றோம். ஆகா என்று…!

இராமயாணத்தையும் கேட்டேன்… மகாபாரதத்தையும் கேட்டேன்… கீதையில் கண்ணன் கூறியதையும் கேட்டேன்… எல்லாம் பார்த்தேன்…! என்ற உணர்வுதான் இருக்கும்.

அந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டோமா என்று பார்ப்பதில்லை. ஆனால் அதை மட்டும் திருப்பித் திருப்பிச் சொல்வார்கள்.

இப்பொழுது சொன்ன உபதேசத்தைத் திருப்பி ஒரு மாதம் கழித்து மீண்டும் சொல்லும் போது… மீண்டும் அது நினைவில் இருக்கின்றதா இல்லையா என்று பார்த்து அந்த உணர்வை வலுவாக எடுத்து வளர்க்க வேண்டும் என்பதற்குத் தான் யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஆனால் அப்படி இல்லாதபடி… நேற்றே சாமி சொன்னார்…. சரி விடு… போ…! என்று இருப்பார்கள்.

யாம் உபதேசம் செய்யும்போது பக்கத்திலே அடுத்தவர்களைக் கண்டால் அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் நாம் இரண்டு பேரும் எதாவது பேசிக் கொண்டிருப்போம்.
1.”கேட்காதவர்கள் கேட்கட்டும்…!” என்று இப்படியும் இருப்பார்கள்.
2.இது தான் சிலருடைய நிலைகள்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

 

Leave a Reply