எது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்

Eye antenna

எது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்

தீமையை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப இதைச் சொல்வது

என்னடா…! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்ப சொல்கின்றார் என்று நினைக்கலாம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகளை ஆழமாகப் பதிவு செய்து விட்டால்
2.மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் உணர்வினை எளிதில் நுகர்ந்து
3.நம் உடலுக்குள் அந்த ஒளிக்கற்றைகள் வரும்போது
4.நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் இது உதவும்.

ஆகவே அந்த வலுவான உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் அது தன்னிச்சையாக நல் மணங்களை நமக்குள் கொண்டு வருவதும்… தீமையில் இருந்து நம்மை விடுபடுவதுமாக… அது நம்மைச் செயலாக்கும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு தான் பிறருடைய வேதனைகளைக் கேட்டறிகின்றோம். நாம் கேட்டறிந்த உணர்வை உயிர் நுகர்ந்த பின் அதே வேதனை என்ற அணுக்களை அது உருவாக்கி விடுகின்றது.

பின் அது தன் உணர்வுக்காக உணர்ச்சிகள் உந்தும்போது அந்த வேதனை உணர்ச்சியே நமக்குள் வருகின்றது. நல்ல எண்ணங்களுக்கு நாம் செல்ல முடிவதில்லை.

தியானத்தில் உட்கார்ந்து இருந்தால் இந்த மாதிரித் தான் இருக்கும்….!

ஆகையினால் பிறிதொன்று நம் உடலுக்குள் வந்து… அந்தத் தீமை விளைவிக்கும் சக்தியாக அது இயங்கிவிடக்கூடாது.

அதிகாலையில் நாம் எப்படி எந்த நிலையில் இருந்தாலும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிவிட்டு அந்த உணர்வுகளுக்குச் சக்தி ஊட்ட வேண்டும்.

அப்போது அந்த உணர்வுகள் வலுப் பெறும்போது நம் உடலுக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.

1.நான் சொல்வது லேசாக இருக்கலாம்…
2.ஆனால் அனுபவத்தில் வரும்போது கடினமாக இருக்கும்…
3.நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அது எளிதாகிவிடும்.

புதிதாக ஒருவர் தையல் மிஷினில் உட்கார்ந்து தைக்கத் தொடங்கும் போது… துணியை வைத்தால் கோணல் மாணலாகப் போகும். ஆனால் பழக்கப்பட்டவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார்கள்.

காரணம்…. அந்தக் கை பழக்கம்…!

அதைப் போன்று தான் சிறிது நாள் பழகிக் கொண்டால்…
1.நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் உணர்வின் தன்மை
2.நமக்குள் அது தன்னிச்சையாக இயக்கும்… நல்வழியும் காட்டும்.

ஆகையினாலே இதை நமக்குள் சக்தி வாய்ந்ததாக உருப்பெறச் செய்வோம். எத்தகைய தீமை வந்தாலும்… நம் கண்ணின் பார்வையில் அந்தத் தீமையான சக்திகளை ஒடுங்கச் செய்வோம்.

 

Leave a Reply