சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

kali and shiva

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

 

மீன்களை ரசித்துச் சாப்பிடுவார்கள். சில மீன்களை வாங்கிச் சமையல் செய்யும் பொழுது பெண்கள் அதை அப்படியே உயிருடன் உராய்வார்கள்… போட்டுச் சுரண்டி அதை நரக வேதனைப்படுத்தி பின் வேக வைத்துச் சாப்பிடுவார்கள்.

1.எவ்வளவு தூரம் மீனை உராய்ந்து அதை இம்சை செய்தோமோ
2.உற்றுப் பார்த்துச் சுவாசித்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை…!
3.அதன் உணர்வின் கருவாக நம் இரத்தத்தில் முட்டையாகி அது நாளடைவில் அணுவின் தன்மை அடைந்தால்
4.உராயும் பொழுது அதற்கு (மீனுக்கு) எப்படி எரிச்சலானதோ அந்த எரிச்சல் பெண்களுக்கு நிச்சயம் வரும்.

மீன் குழம்பை வைத்தவர்களுக்கு எல்லாம் பெரும்பகுதி மீனை உயிருடன் உராய்ந்திருந்தால் உடலில் எரிச்சல்… கை காலிலும் எரிச்சல் வரும்.

எம்மா… எரியுதே…எரியுதே…! என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் சென்றாலும் அதற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துச் சரி செய்ய முயன்றாலும் மீனை உயிருடன் போட்டுச் சுரண்டி உராய்ந்தவர்களுக்கு வரும் எரிச்சலை எந்த மருத்துவத்தாலும் நிறுத்த முடியாது.

நான் இந்த டாக்டரிடம் சென்றேன்… கேட்கவில்லை.. அடுத்த டாக்டரிடம் போனேன்…! அதுவும் கேட்கவில்லை.. என்று தான் சொல்வீர்கள்.

ஆக நம்மை அறியாமலே எரிச்சல் ஊட்டும் நிலைகள் கொண்டு நாம் ரசித்ததை இந்த உடலில் நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

அத்தகைய உணர்வின் அணுக்கள் உடலிலே பிறந்து விட்டால் இதன் வழி உடலை விட்டு நாம் வெளியிலே சென்ற பின் அதற்குத் தகுந்த உடலைத் தேடி நம் உயிர் அழைத்துச் சென்று அதன் படியே அங்கே வளரும். அந்த உருவாகத் தான் உயிர் நம்மை உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்… கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…!

ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும்
1.நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும்
2.நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு பெற்று வளர்ந்த நாம் இதைப் போன்ற கொடிய தீமைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்ப்பித்தால் அதையும் நம் உயிரே உருவாக்குகின்றான்.

நாம் எண்ணியது எதுவோ அந்த அருள் ஒளிகளை உருவாக்கி நமக்குள் சொர்க்கலோகத்தையே அமைக்கின்றான். இந்த உடலிலேயே சொர்க்கலோகத்தை உருவாக்குகின்றான்.

இந்த உடலை உருவாக்கிய பின்…
1.பழைய உடலைப் பிளந்து விட்டு
2.என்றும் பதினாறு என்ற நிலையை ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றான்.

இதை யார் உருவாக்குவது…? நம் உயிர் தான்,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள் வரும். அது எல்லாமே நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைவதனால் வருவது தான்…!.

1.தெரிந்து செயல்படும் உணர்வுகளும் நமக்குள் அணுக்கருவாக மாறுகின்றது.
2.நம்மை அறியாமல் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததும் அணுக்கருவாக மாற்றுகின்றது நம் உடலில்.
3.இப்படி நுகர்ந்தது (சுவாசித்தது) அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றது தான் நம் உயிர்.

ஆகையினால் “விஷ்ணு…” வரம் கொடுக்கின்றான் என்று இதைக் காட்டுகின்றார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால் அணுவாகின்றது.

அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அது தன் உணவை எடுக்கின்றது. பின் தன் இனத்தைப் பெருக்குகின்றது. இது தான் “பிரம்மா…” உருவாக்குகின்றான்.

அதே சமயத்தில் உடலான “சிவன்..” அரவணைத்துக் கொள்கின்றான். உடலுக்குள் எது எல்லாம் வருகின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தையும் அது அரவணைத்துக் கொள்கின்றது.

1.எக்குணத்தின் செயலாக நாம் எடுத்தோமோ அந்த அணுவின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது.
2.ஆகவே இந்த சக்தியின் தொடர் கொண்டு தான் சிவனின் இயக்கமே இருக்கின்றது.

உடலில் வலி ஏற்பட்டால் அம்மம்மா… அப்பப்பா..! என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அப்பொழுது சக்தி சிவனை ஆட்டிப் படைக்கின்றது என்று சிவ நடனத்தைக் காட்டுகின்றனர்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் வழி உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
1.சக்தியின் கீழ் தான் சிவன் அடிமையாகி இருக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
2.சிவனைச் சக்தி தன் திரிசூலத்தால் தாக்குகின்றாள் என்றெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.

நாம் ஒருவரைத் தாக்கும் உணர்வு (எண்ணம்) கொண்டு நுகர்ந்தால்.. நம் உயிரின் தன்மை அதை உருவாக்கும் அந்தச் சக்தியாக உருவாகி நம் உடலான சிவமாக அது மாறியே விடும்.

பின் அதனின் கடுமையான வேகங்கள் கூடப்படும் பொழுது.. இந்த உடலைச் செயலற்றதாக மாற்றி… அதன் கீழ் தாக்கும்..! என்ற நிலையையும் “படமாக்கிச் சித்தரித்து…” அதன் காவியத் தொகுப்பையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

Leave a Reply