உங்களால் மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்

sages direct links

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்… உங்களால் முடியும்

நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் எல்லோருமே பெருக்கிக் கொண்டு வருகின்றீர்கள்.

குருநாதர் கொடுத்த சக்திகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தெரியப்படுத்த வேண்டுமென்று யாம் விரும்புகின்றோம்.

ஆனால், சில சக்திகளைக் கொடுத்த பின் என்ன ஆகின்றது. ஆசைப்படுவதை எல்லாம் பெறவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

அதற்குப் பதில் உங்கள் ஆசை எதன் வழிகளில் இருக்க வேண்டும்?

அந்தச் சப்தரிஷி மண்டல அலைகளைப் பெறவேண்டும். எங்களுக்குள் அது வளரவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அதை வளர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்?

யாரும் கஷ்டப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களுக்கு அந்த சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும், அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்த உணர்வை இங்கே எடுத்துச் சமைத்து இதிலே நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்படவேண்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா.

இதை நாம் நமக்குள் பெருக்க வேண்டும்.

உடலுக்குள் ஆன்மா இயங்குகிறது என்று சொல்லிக் கொண்டு திடீரென்று வருகின்றார்கள்.

நான்கு பேர் சேர்ந்து கூட்டுத் தியானமிருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொண்டு அந்த “உடலிலுள்ள ஆன்மாவிற்கு” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அதற்கு (அவருக்கு) நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அவர்களிடமும் (ஆன்மா உள்ளவரிடமும்) சொல்லி நீ இதைச் செய்தாய் என்றால் சீக்கிரம் உனக்கு நன்றாகிவிடும் என்று சொல்ல வேண்டும். அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவருக்கு இலாபம்.

இப்படி இதைப் பெருக்கப் பழகவேண்டும். இந்தப் பேருண்மைகளைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே மகரிஷிகளின் உணர்வுகளை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த உணர்வலைக்குள் சென்றவுடன் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைக் காண முடியும், சப்தரிஷி மண்டலத்துடன் அது தொடர்பு கொள்ளும்.

சிலருக்கு அது தெரியும். தன்னிச்சையாகவே அந்த உணர்வுகள் சப்தரிஷி மண்டல உணர்வலைகளை உணவாக எடுக்கும்.

ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு அரச மரத்தின் வித்து பட்டாலும் அங்கே தண்ணீரே இல்லை என்றாலும் கூட காற்றிலுள்ள ஈர்ப்பதத்தை அதனின் விழுதுகள் எடுத்து மரம் வளர்ந்துவிடும்.

அதைப் போன்று உங்கள் நினைவின் ஆற்றலெல்லாம் அங்கே விண்ணுக்குச் சென்று பழக வேண்டும்.

பாதை தெரியாதபடி (லோக்கலில்) சென்றால் பல அற்புதங்கள் தெரியலாம். பல அதிசயங்களைப் பார்க்கலாம் ஆனால், “கீழே” நம்மை இழுத்துவிடும்.

அதனால் தான் ஆரம்பத்தில் ஒவ்வொருவரிடம் “உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது..,?” என்று கேட்பேன். ஏனென்றால் அப்பொழுது காட்சிகள் எல்லோருக்கும் கிடைக்கும், எல்லோருமே காட்சி சொல்வார்கள்.

அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இப்பொழுது என்னாகி விட்டார்கள்? அந்த ஆசையில் மூழ்கிவிட்டார்களே தவிர அதிலிருந்து மீள்வதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.

ஆகவே எப்படிப் பார்க்க வேண்டும்?

அந்தப் பேரண்டக் காட்சிகளை, விண்ணுலக ஆற்றலை, அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பார்க்க வேண்டும். அந்த உணர்வைப் பெறவேண்டும் என்ற இந்த ஆசையை நாம் அங்கே வைக்க வேண்டும்.

அதை நாம் வளர்க்கப் பழக வேண்டும்.

திடீரென்று, “அதைப் பார்க்க வேண்டும்…,” என்று வரக்கூடாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெறவேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும். பார்க்க வேண்டும் என்றால் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அந்தச் சக்திகளை நம் உடலுக்குள் ஏற்றவேண்டும்.

ஏற்றியபின் என்ன செய்யவேண்டும்?

யார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம அகல வேண்டும் என்று நம் பார்வையால் இந்தச் சக்தியைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது அந்த உண்மையான சக்தியை இதிலே பார்க்கலாம்.

தீமைகள் அவர்களிடமிருந்து அகலும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகள் வரும். அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் வரும் பொழுதுதான் உங்களுக்குள் பெருக்கமாகின்றது.

அப்பொழுது உங்களுக்குள் அந்த எண்ணம் மகரிஷிகளின் பால் வேகமாகக் கொண்டு போகின்றது.

இதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர “எனக்குச் சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே.., அது எப்படிப் போவது..,?” என்ற இந்த வினாக்களை எழுப்பவே கூடாது.

ஏனென்றால், நாம் படிப்படியாகத் தான் போக வேண்டும்.

ஒரு திரையிலே சினிமா காட்டுகின்றார்கள் என்றால் அங்கே இருக்கும் பொழுது வெறும் ஒளியாகத் தான் படுகின்றது.

அதைத் தடுத்து நிறுத்தும் பொழுதுதான் திரையில் உருவம் தெரிகின்றது. நாம் குறுக்கே பார்த்தால் தெரிவதில்லை (ஒளி அலைகள் தான் தெரியும்). அதிலே தடுத்து நிற்கும் பொழுதுதான் அந்த உணர்வுகள் தெரிகின்றது.

அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் முதலில் நமக்குத் தெரியாது. வெறும் அணுக்களாகத் தான் தெரியும்.

அந்த உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி வைக்கப்படும் பொழுதுதான் அந்த உருவத்தின் தன்மை யார்? யார்? என்ற உணர்வுகளே நமக்குத் தெரியும்.

இதுவெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாகக் காட்டிய நிலைகள். அதை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். அந்த மகரிஷிகள் யார் யார் என்று நிச்சயம் உங்களால் அறிய முடியும்.

மகரிஷிகளுடன் உங்களால் நேரடித் தொடர்பு கொள்ள முடியும். பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளையும் பல கொடுமையான நிலைகளிலிருந்தும் மீண்டிடும் ஆற்றல் பெற முடியும். உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

மகரிஷிகள் அருள் வட்டத்தில் நீங்கள் வாழுங்கள். பேரின்பப் பெருவாழ்வாகப் பெற்றிடுவீர்கள். அழியா ஒளியின் சரீரம் பெறுவீர்கள்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா.

Leave a Reply