கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

take naraimha avatar

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) இரயிலில் சென்னையிலிருந்து பம்பாய்க்குச் சென்று கொண்டிருக்கின்றேன். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) அப்பொழுது என்னுடன் வருகின்றார்,

செல்லப்படும் பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பம்பாய்க்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் பதறிக் கொண்டிருக்கின்றது. உறவினர்களிடம் ஐயோ…! எனக்கு இப்படி இருக்கிறது… தண்ணீர் கொடு… அது கொடு.. இது கொடு..! என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி… “உணவோ தண்ணீரோ… ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது..” என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… அடப் பாவிகளா… எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா..?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

கூட வந்த உறவினர்கள் என்ன செய்கிறார்கள்…? டாக்டர் சொன்னதை எண்ணிக் கொண்டு நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அப்பொழுது இன்னொரு அம்மா அந்த இரயிலில் வந்து கொண்டிருந்தவர் இந்த அம்மாவைப் பார்த்து… பாவம் மிகவும் வயதானவர்கள்… கேட்டால் கொடுத்தால் என்ன..? அவஸ்தையயால் இப்படிச் சாபமிடுகிறார்கள்…! என்று அவர்கள் எண்ணிக் கேட்கிறார்கள்.

இதை நான் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

“உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள்… அட எங்களுக்குத் தெரியாதா…? நீ என்னம்மா இதைக் கேட்கிறாய்…?” என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொன்னவுடன் அந்த நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட இப்படித் திட்டுகிறார்களே…!” என்று எண்ணுகின்றார்.

ஏனென்றால் அந்தச் சந்தர்ப்பம் இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

குருநாதர் இதைக் காண்பித்தார். ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

மருத்துவர்கள் கூறிய அறிவுரைப்படி “ஒரு அளவுக்கு மேல் உணவோ தண்ணீரோ கொடுத்தால் அந்த உயிருக்கு ஆபத்து வரும்…!” என்று உறவினர்கள் அதைக் கடைபிடிக்கிறார்கள். எதற்காக…? சிறிது நாளைக்காவது அந்த நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று..!

ஆனால் நோயான பெண்மணியோ “நான் இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொஞ்சம் கூட இரக்கம் இல்லையே…!” என்று இந்த அம்மா பேசுகிறது.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு.. “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி “நாம் இவர்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே..!” என்று அவர்களின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன்.. நோயான பெண்மணியின் வீடு வரை எம்மைச் சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

அந்த ஆன்மா பிரியும் பொழுது… அவருடைய எண்ணம் எங்கே செல்கிறது…?

இரயிலில் வரும் பொழுது இந்த நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்கள் மேல் வருகிறது. “மகராசி எனக்கு உதவி செய்தாளே…!” என்ற அந்த எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு எனக்குத் துரோகம் செய்தார்கள்…” என்று இங்கே சாபமிட்டது.

1.இத்தகைய சாப அலைகளை அங்கே அந்த உறவினர்கள் நுகர்ந்தனர்
2.அவர்கள் உடலில் விளைந்து அவர்கள் தொழில் நசுங்கியது…
3.குடும்பத்தில் பல விதமான குழப்பங்கள் விளைந்தது.

ஏனென்றால் இதையெல்லாம் ஒரு 48 நாள்கள் பார்க்கும்படியாக அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார் குருநாதர். ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணி கூட வந்து பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து இதைப் பார்த்தவுடனே…
1.நோயான பெண்மணியின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா கடைசி நிமிடத்தில் எப்படி எல்லாம் அவஸ்தைப் பட்டதோ
2.இவருடைய உடலுக்குள் அந்த ஆன்மா வந்து
3.அதே வேதனையின் உணர்ச்சிகளை இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்.

1.இரயிலில் போகும் பொழுது இந்தப் பற்று வந்த பின்
2.அது எப்படி ஆகிறது…? இந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் எப்படிச் செல்கின்றது…?
3.இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

ஆனால் இறந்த பின் நோயான பெண்மனியின் வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகின்றது. குழப்பத்தால் அவர்கள் வியாபாரம் மந்தமாகிறது.

தங்களை அறியாமலே குழந்தைகளை சீறிப் பேசுவது… தவறான நிலையில் பேசுவது.. என்ற இந்தச் சங்கடங்கள் எல்லாம் வந்து வீட்டுக்குள் குழப்பம் வருகிறது.

ஏனென்றால் இந்த இயற்கை நம்மை எபப்டி இயக்குகிறது என்ற நிலைகளைச்
1.சந்தர்ப்பம் மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நமக்குள் நோய் எப்படி விளைகின்றது..? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை..! நாம் நுகர்ந்தறிந்து அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசும் பொழுது
1.இந்தச் சாந்த உணர்வுகள் மிக நன்மை செய்யும்
2.ஆனால் வேதனை என்ற உணர்வுகள் வலிமை பெற்றது.
3.அது இந்தச் சாந்தத்தை அடக்கிவிடும்.

அது தான் மூஷிகவாகனா…! விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டுக் காண்பித்து… “நாம் சுவாசித்த உணர்வே.. நம்மை வாகனமாக இருந்து அழைத்துச் செல்லும்…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.