ஆண்டவனின் சக்தியை இன்றைய மனிதன் எப்படிப் பயன்படுத்துகிறான்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Power of God within us

ஆண்டவனின் சக்தியை இன்றைய மனிதன் எப்படிப் பயன்படுத்துகிறான்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply