என் நேரம்… என் விதி…! என்று சொல்கிறோம்… அதனின் உண்மை நிலை என்ன..?

Fate and destiny.jpg

என் நேரம்… என் விதி…! என்று சொல்கிறோம்… அதனின் உண்மை நிலை என்ன..?

எதிர்பாராத விதமாக சில சிக்கல்களில் மாட்டுபவர்கள் கடைசி நேரம் அபயக் குரலை எழுப்புகிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்…! என்கிறார்கள்.

நாம் நல்ல எண்ணத்தில் இருக்கின்றோம். அவர்களைக் காக்கவும் முயற்சி செய்கின்றோம். அந்த விபத்திலிருந்து கூடுமானவரை தப்பிக்க வைத்து விடுகின்றோம்.
1.அந்த உடலை அந்த நேரத்தில் காக்கின்றோம்.
2.ஆனாலும் அந்த விதி வேலை செய்யும்.

“விதி வேலை செய்கிறது” என்றால் மீண்டும் இதை எடுத்துக் கொண்டால் அதனுடைய “எதிர் அலைகள்” ஏராளமாக வரும். அப்பொழுது இந்த உடல் பற்று தான் வரும்.

விதிப்படி நாம் மீண்டும் பிறப்பிற்கு வருகின்றோம். பல துன்பங்களை அனுபவிக்கின்றோம்.
1.அந்த உணர்வின் தன்மை அதிகமாக வளர்த்து விட்டால்
2.இதே போல பல இம்சைகள் உருவாகக்கூடிய ஒரு உயிரணுவாகத்தான் மாற்றும்.

இப்படி நம் உடலில் எத்தனையோ விதிகள் உண்டு…!
1.அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
2.நாம் செய்த நிலைகளுக்கு இது “கழிகிறது…!” (இது மிகவும் முக்கியம்)

சரி…! இனிமேல் நாம் அந்த அருள் ஒளியை நாம் அதிகமாகக் கூட்ட வேண்டும் என்ற நிலைகளில் எடுத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் தெரிந்தோ… அல்லது தெரியாமலோ அது பட்டிருந்தாலும்… நம் உயிர் அதை இயக்கத்தான் செய்யும்.

சமையல் செய்யும் பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைக்கின்றீர்கள். நான் தானே சமையல் செய்தேன். நான் அதிலே போடாமல் அது எப்படி அதற்குள் ஒரு பூச்சி வரும்…! என்று கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

1.நாம் போடவில்லை…!
2.காற்றிலே பறந்து வந்த ஒரு விஷப் பூச்சி சமையல் பாத்திரத்திலே விழுந்து விடுகின்றது.
3.நான் போடவில்லையே..! என்று சொல்லிக் கொண்டு
4.நான் போட்டால் தானே அப்படி வரும்…! என்று சொன்னால் அது எப்படி…?

நெருப்பைக் கூட்டிப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அதிலே எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு வேக வைக்கும்.
1.இதைப் போன்று தான் இந்த உயிருடைய வேலை நெருப்புக்குச் சமம்
2.எந்த உணர்வை நுகர்ந்தோமோ சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிவிடும்
3.எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஒரு விதியாக உருப்பெற்று விடுகிறது
4.உயிருடைய வேலை அது தான்…!

அப்படியானால் தெரிந்தோ தெரியாமலோ உயிரிலே படும் தீமைகளை எல்லாம் மாற்றியமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கிறது..,?

நம் ஆறாவது அறிவுக்குத் தான் இருக்கின்றது. ஆறாவது அறிவு கொண்டு மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்தால் உயிர் அதனின் இயக்கமாக நம்மை மாற்றும். விதியை மதி கொண்டு நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் விதியின் வழியாகச் சென்றும் மீண்டும் தேய்பிறையாகக் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம்.

Leave a Reply