ஞானிகள் மகரிஷிகளின் தற்போதைய செயல் என்ன…!

Protected zone of sages

ஞானிகள் மகரிஷிகளின் தற்போதைய செயல் என்ன…!

 

“ரிஷி நிலை…!” பெற்ற மகரிஷிகளின் நிலையெல்லாம் ஒன்றிரண்டு நாளில் பாட நிலையில் சொல்ல முடியாத நிலையப்பா.

ரிஷி அருள் பெற்றவர்கள் எல்லாம்
1.இவ்வுலகை… இவ்வுலக மக்களுக்காக… இவ்வுலக நன்மைக்காக… தாங்கள் பெற்ற அருளை
2.பல ரூபத்தில்… பல வழிகளில்… பல உடல்களில் வந்து… பல கோயில்களின் சிலைகளின் ரூபத்திலும் வந்து…
3.ஆண்டவனை அடிபணிந்து.. ஆண்டவன் ஒருவன் உள்ளான்… அவன் நம்மைக் கைவிடமாட்டான்… என்ற ஒரே நிலையில் அண்டி வருபவர்களுக்கு
4.ஆண்டனவனாக வந்து அருள் புரிகிறார்கள்…! என்று பல பல தடவை சொல்லிவிட்டேன்.

பல புராதனக் கோயில்களில் சென்றிருந்தால் தெரியும். கோயில் வாசலின் உட்புகும் பொழுதே கோயிலின் மணம் ஒன்று எல்லோருக்குமே தெரியுமப்பா.

பல மூலிகைகள் கலந்த அவ்வாசனையை “என்ன…” என்றே நாம் புரிந்திட முடியாத நிலையில் அம்மணம் வீசிடுமப்பா. அம்மணங்கள் எங்கிருந்து வருகின்றன…?

பல பக்தர்கள் ஒன்றுகூடி பிள்ளையாரப்பா…! முருகா…! ஈஸ்வரா…! கோவிந்தா…! என்ற நாமத்தை ஒரே நிலையில் ஒலித்துக் கொண்டே அக்கோவிலுக்குள் செல்கிறார்கள்.

அக்காலத்தில் இந்த ரிஷிகள் தவமிருந்து அமைத்த கோவில்களில் எல்லாம் இம்மணங்கள் வீசிடும். அந்த ரிஷிகள் தான் பெற்ற ஈஸ்வர சக்தியில் இருந்து பல மணங்களைத் தன் வழிக்கு ஈர்த்து வரும் மானிடர்களுக்கு எல்லாம் “அம்மணங்களை அளிக்கிறார்கள்…!”

சித்தர்களின் அருளையும் ரிஷிகளின் அருளையும் சிந்தித்துப் பார்க்கவே முடிந்திடாதப்பா. அந்நிலையில் அருள் பெற்றவர்கள் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் தவப்பயன் பெற்ற ரிஷிகளும் இல்லாவிட்டால் இவ்வுலக நிலையே வெறும் குட்டிச்சுவராகி இருக்குமப்பா.

அந்த மகரிஷிகளும் ஞானிகளும் இக்கலியின் கடைசியில் கடும் தவமிருக்கிறார்களப்பா. கல்கிக்கு இம்மானிட மக்களை எப்படியாவது ஈர்த்துச் செல்ல வேண்டும். இக்கலியில் மடியாமல் கல்கிக்கு வந்திட வேண்டும் என்று பேராவல் கொண்டு பெரும் தவமுள்ளார்கள்.

1.கல்கியின் ஆரம்ப நிலைதானப்பா
2.சில இடங்களில் மனித உள்ளங்களில் இந்த மெய் ஞானத்தின் நிலை பரவி வருகின்றதப்பா.

ஏனென்றால் இக்கலியில் உள்ள மனிதர்களின் நிலையை “என்ன…?” என்று எண்ணிப் பார்த்திடவே முடியவில்லையப்பா.
1.ஆசை
2.அதியாசை
3.பேராசை
4.கலியில் கடைசி நிலை இதுதானப்பா. பேராசை நிலை,
5.இந்நிலையில் யாரும் (இங்கே) தனித்து நிலைத்திட முடியாதப்பா.

ஆகவே காலமுடன் கலந்துதான் உயிரான ஈசனை எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.

1.ஊர் நிலையில்…
2.உலக நிலையில் ஒத்துப் போய்..
3.உங்கள் எண்ண நிலையில் மட்டும் ஈசனின் அருளை மாற்றிடாமல் தியானித்திடுங்களப்பா… ஜெப அருளைப் பெற்றிடுங்கள்…!

அச் சித்தர்களின் நிலையையெல்லாம் நீங்கள் அறிந்திட மட்டும்தான் இந்த ஜெப அருள் இல்லையப்பா. இந்நிலையில் இருந்து கொண்டே உன்னையும், சித்தராகவும் ஞானியாகவும் ரிஷியாகவும் ஆக்கத்தான்… கல்கியில் கலக்கத்தான்… கடும் தவம் செய்து “ஈஸ்வரபட்டனாகிய யான் இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்…!”

புரிந்த பாடத்தை நல்ல நிலையில் ஏற்றுக் கொள்ளுங்களப்பா. என்றும் என் அருள் உங்கள் எல்லோருக்கும் உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply