சாப அலைகளால் பிறக்கும் சந்ததியினர் எப்படிச் சிரமப்படுகின்றனர்…? என் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி

curse-rays

சாப அலைகளால் பிறக்கும் சந்ததியினர் எப்படிச் சிரமப்படுகின்றனர்…? என் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி

 

என் (ஞானகுரு) பெரியப்பாவின் தங்கைக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அது முதல் மனைவியாகப் போய் இருந்தது. அவர்களுக்குள் ஏதோ கருவாகி உள்ளது. திருமணமாகி அந்தக் கருவாக இருக்கும்போது (பெரியப்பாவுடைய) தங்கையின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏனென்றால் அந்தக் காலத்தில் இரண்டு கல்யாணம் மூன்று கல்யாணம் பண்ணிக் கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது. திடீரென்று சொந்தத்தில் பெண் என்ற நிலை வரும்போது அவர் இரண்டாவது கல்யாணத்தைச் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் போது “இப்படி இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டாரே…!” என்று அவர்கள் சொன்னார்கள்.

இப்பொழுது உள்ள சட்டம் எல்லாம் அன்றைக்குக் கிடையாது.

நான் பிரியபட்டேன்…. நான் கல்யாணம் செயது கொண்டேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்…? வேண்டாம்… என்றால் நீங்கள் விலகிப் போகலாம் என்று அவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினார்.

ஊர் நாட்டாமைகள் எல்லாம் சேர்த்து பஞ்சாயத்துச் செய்யும் பொழுது அந்த அம்மா தன் கர்ப்ப காலங்களில் கடும் வேதனையும் சங்கடமும் பட்டது.

எந்த அளவுக்குக் கடும் வேதனையும் சங்கடமும் பட்டதோ அந்த உணர்வுகள் எல்லாம் கருவிலே இணைந்து அது பெண் குழந்தையாகப் பிறக்கிறது.

1.பிறந்த பின் அந்தக் குழந்தைக்கு எந்தச் சிந்தனையும் இல்லை.
2.வாய் பேச வரவில்லை. வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
3.மூளை வளர்ச்சி இல்லாதபடி அதுபாட்டிற்கு இருந்தது.
4.அது வயதுக்கு வந்து பருவம் ஆகும் வரையில் கூட அப்படியே தான் இருந்தது.

இந்த மாதிரி ஆனதால் அந்த அம்மா தன் சொத்தைப் பிரித்துக் கொண்டு வந்து விட்டார்கள், இருந்தாலும் என் வாழ்க்கையை நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாசமாக்கி விட்டீர்களே…! என்று தன் அண்ணனைப் (என் பெரியப்பாவை) பிடித்துப் பேசும்.

நீங்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்தக் கல்யாணத்தை அனுமதித்தீர்கள் என்று…!

ஆக அந்த அம்மா பேசிய சாப அலைகள் பெரியப்பா குடும்பத்தில் சாடியது. அவருக்கு ஒரு பையன் மூன்று பெண் பிள்ளைகள்.

கர்ப்பம் என்று சொல்லப்படும் போது தன் பிள்ளைக்கு எப்படி ஆனதோ அதே போல் அவருடைய குழந்தைகளுக்கும் ஜன்னி மாதிரி வந்தது. காக்காய் வலிப்பும் வந்தது. மூளை வளர்ச்சி இல்லாது போனது.

ஒரு பையனுக்குக் கால் வராமல் இருக்கிறது. பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அந்த குழந்தையோட அது அவஸ்தைப் படுகிறது.
1.அந்தச் சந்தர்ப்பத்தால் குடும்பமே இத்தகைய நிலைகள் உருவாக்கப்பட்டு இந்த நிலை ஆகிவிட்டது.
2.இதை எல்லாம் நடைமுறையில் குருநாதர் அனுபவரீதியாக எமக்குக் காட்டுகின்றார்.

அதே மாதிரி என் மனைவி வழியில் எடுத்துக் கொண்டாலும் என் மனைவியின் சின்னம்மா (அதுவும் இரண்டாம் தாரமாக வந்தது தான்). அது எங்கள் சிறிய பாட்டி மகள்.

அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் வாய்த் துடுக்கு. யாரும் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வரவில்லை என்று. தன் தம்பி மகனுக்கே இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். அது கண்டபடி சாபம் இடும்.

எங்கள் பாட்டி என்ன செய்தது…? (என் மனைவியை) எங்கள் குடும்பத்திலேயே கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தது.

அதனாலே என் அண்ணன் கட்டிக் கொள்ள வேண்டியதை என்னைக் கட்ட வைத்துவிட்டார்கள்… வாரிசு என்று, என் மனைவியின் சின்னம்மா அவர்கள் அப்பாவைப் பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி பேசும். இவ்வளவு தான் என்று இல்லை.

என் மனைவி குடும்பத்தில் இந்த அம்மாளின் சாபத்தால் பிறந்த ஆண் வாரிசும் இறந்து விட்டார் (என் மனைவியின் சகோதரன்). ஆனால் என் மனைவி மீது அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் பிரியம்.

அதே சமயத்தில் என் மனைவியின் அப்பாவை (என் மாமனாரை) ரோட்டிலே போய் உட்கார்ந்த கொண்டு கேவலப்படுத்தும்.

நான் (ஞானகுரு) கல்யாணம் முடித்து வந்த புதிதில் இந்த அம்மா இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தது. வாசல் படி மேல் உட்கார்ந்து கண்டபடி பேசிக் கொண்டிருந்தது.

நான் என்ன செய்தேன்…?

பெரிய அம்மிக் கல்லைத் தூக்கிக் கொண்டு போய் உன்னை இந்த மட்டோட குளோஸ் (CLOSE) செய்கிறேன் என்று சொல்லித் தலைக்கு மேலே தூக்கி “டபால்…” என்று அந்த அம்மாவின் பின்னாடி போட்டேன்.

அய்யய்யோ… என்னைக் கொல்ல வந்து விட்டானே… எங்கள் அண்ணன் பையன்…! என்று சப்தம் போட்டது. அன்றிலிருந்து பேசுவதை விட்டு விட்டது. அதற்கப்புறம் அது இறக்கிற வரையில் என்னிடம் பேசவில்லை.

ஆனால் என்ன செய்தது…? பார்…! என்னைச் சீரழித்தாய் அல்லவா…! உன் குடும்பத்தையே எப்படி ஆட்டி படைக்கிறேன்…? என்று சொன்னது. நடந்த நிகழ்ச்சி இது.

அது இறந்த உடனே என் மனைவி உடலுக்குள் வந்து படுத்தின பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. நான் சித்தான பிற்பாடு ஒரு சமயம் வந்து கேட்கிறது.

என்னுடைய சிறிய வயதில் நடந்த சப்பவங்கள் எல்லாம் என் மனைவிக்குத் தெரியாது. ஆனால் இந்த உடலில் அந்த அம்மா இருந்து கொண்டு “போடா எங்க அண்ணன் மகனே.. எனக்கு எல்லாம் தெரியுமுடா…!” என்று சொல்கிறது.

போடா என் அண்ணன் மகனே… எனக்கு என்ன தெரியாதா…! போய் வெத்திலை வாங்கிக் கொண்டு வாடா…! பாக்கு வாங்கிக் கொண்டு வாடா…! என்று என் மனைவி உடலிலிருந்து கேட்கிறது.

அந்த அமமாளுக்கு வெத்திலை போடும் பழக்கம் இருந்ததால் அப்படிக் கேட்கிறது. போடா… வாடா…! என்று பேச ஆரம்பித்து விட்டது. “நான் தானடா உன்னைத் தூக்கி வளர்த்தேன்…!” என்று பேச ஆரம்பித்தது.

ஒரு சமயம் என்னுடைய சிறிய வயதில் எனக்கு அம்மை வார்த்து இருக்கும் போது இட்லி சாப்பிட வேண்டும் என்று கேட்டு அழுகிறேன். இந்த அம்மா என்ன செய்தது…? உடனே அரிசியை நல்ல சாதமாக ஆக்கி இட்லி மாதிரிச் செய்து கொண்டு என்னிடம் கொடுத்தது.

அப்படிக் கொடுத்தவுடனே அந்த இட்லியை எடுத்து அந்த அம்மா மேலேயே அடிச்சிட்டேன். இது இட்லி இல்லை என்று சொல்லி…!

அதை என் மனைவி உடலிலிருந்து நினைவுபடுத்திச் சொல்கிறது. என் மனைவிக்கு இது தெரியாது. ஆனால் அந்த உணர்வுகள் உடலிலிருந்து பேசுகிறது

இதை எல்லாம் மிகவும் தெளிவாக அனுபவரீதியாக எனக்குக் காட்டினார் குருநாதர்.
1.ஒரு உடலில் விளைந்த உணர்வுகள் என்ன எல்லாம் செய்யும்…? என்று உங்களுக்குத் தெரியாது.
2.இப்பொழுது அதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்..

Leave a Reply