உடலை விட்டுப் பிரிந்தவர்களின் ஆன்மா ஒரு மண்டலத்திற்குள் எங்கே செல்கிறது..?

consciousness-creates-reality.jpg

உடலை விட்டுப் பிரிந்தவர்களின் ஆன்மா ஒரு மண்டலத்திற்குள் எங்கே செல்கிறது..? 

ஒரு மனிதன் நோயால் மிகவும் வாடுகின்றான். அவன் வேதனைப்படுகின்றான். ஆக நல்ல உடலாக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் சந்தர்ப்பத்தால் குடும்பத்திலோ அல்லது மற்ற வகைகளிலோ எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்து அதனால் வேதனை என்ற விஷங்கள் அதிகரித்து விட்டால்
1.நல்ல உடல் அதனுடைய வலுவை இழக்கின்றது.
2.உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சுருங்கத் தொடங்குகின்றது.

காரணம் விஷத்தின் ஆற்றல் உடலில் அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் சத்தைக் கவர்ந்த உறுப்புகள் அனைத்தும் நலியத் தொடங்குகின்றது.

அந்த நோயாளி மீது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதிகப் பற்று வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நோயை எண்ணி நுகர்ந்தறியும் பொழுது இரத்தங்களில் அந்த விஷத் தன்மைகள் கலந்து நோயாளியின் உடலில் வந்த அதே நோய்.. “பற்று கொண்டவர் உடலிலும் வரத் தொடங்குகின்றது…”

உதாரணமாக ஒரு நூறு பேர் அந்த நோயாளியைப் பார்க்கிறார்கள். “அவர் நல்லவர்… ஆனால் இப்படி ஆகிவிட்டார்…!” என்ற உணர்வை நுகர்ந்து அறிந்து அவருக்கு உதவிகளும் செய்கின்றனர்.

ஆனாலும் அந்த நூறு பேரில் ஒருவர் அவர் மேல் அக்கறை அதிகரித்து அவருக்கு வேண்டிய உபகாரத்தைச் செய்து கொண்டிருந்தால் நோயாளியின் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா எங்கே செல்லும்..?

குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்…? நாற்பத்தெட்டு நாள்களுக்கு (ஒரு மண்டலம்) அல்லது சிறிது நாளைக்காவது இறந்தவர் விரும்பிச் சாப்பிட்ட உணவை எல்லாம் படைத்து அவரை நினைத்து அழுவார்கள்.
1.ஏனென்றால் அவர் நம்முடன் வாழ்ந்தார்
2.அவருக்கு நாம் கொடுக்க வேண்டும் என்று அப்படிச் செய்வார்கள்.

அவர் உடலுடன் இருக்கும் பொழுது உட்கொண்ட அதே நினைவு கொண்டு மற்றவர்களும் பந்துக்களும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தப் பதார்த்தங்களை வைத்து இறந்தவரின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றார்கள்.
1.எங்களுடன் இருந்தீர்கள்…! ஆனால் இன்று போய்விட்டீர்கள்…!
2.அதனால் நான் உங்களுக்கு இதை எல்லாம் (படையல்) செய்கின்றேன் என்று எண்ணுவார்கள்.

இதெல்லாம் எந்தக் காலத்தில் செய்வார்கள்…? அமாவாசைக் காலங்களில் தான் பெரும்பகுதி செய்வார்கள். அந்த நாளில் சூரியனின் கதிரியக்கங்கள் அதிகமாக வராது.

சூரியனின் கதிரியக்கங்கள் அவருடைய உடலில் விளைந்த நோயின் உணர்வைக் கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் பரவச் செய்து வைத்துள்ளது.

ஒரு மான் தன்னைத் தாக்க வரும் புலியின் உணர்வை அதிகமாக நுகர்ந்த பின் அந்த மானின் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்று புலிக் குட்டியாக மாறுகின்றது.

அதைப் போன்று அந்த நோயாளியின் வேதனையான உணர்வுகள் வலுவானது. அவருடைய குடும்பத்தைச் சார்ந்தோர்களோ அல்லது நண்பர்களோ
1.அவர் மேல் அதிகப் பற்று கொண்டு அவரின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்திருந்தால்
2.அவர் இறந்த நாற்பத்து எட்டு நாளுக்குள் அவரை நினைத்துக் கும்பிடுகின்றேன்…! என்ற நிலையில்
3.அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.
4.ஆனால் முதலில் தெரியாது… அது சிறுகச் சிறுக விளையும்.

அந்த நோயாளி இறக்கப்படும் பொழுது எந்தத் தெய்வத்தை அதிகமாக நேசித்து வந்தாரோ… அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் செய்தாரோ அந்த உணர்வுகள் எல்லாம் அவர் உடலில் இருக்கின்றது.

கடைசி நிமிடத்தில் அவர் இறக்கப்படும் பொழுது அவர் எந்தெந்த தெய்வத்தை நேசித்தாரோ அந்தத் தெய்வத்தின் உணர்வுடனே அந்த உயிர் வெளியே செல்லும்.

அப்பொழுது அந்தத் தெய்வத்தின் பேரைச் சொல்லி “இன்னார்…!” எனக்குத் தக்க நேரத்தில் நல்ல உதவிகளைச் செய்தார் என்ற உணர்வுடன் கடைசி நிமிடம் அந்த ஆன்மா வெளியிலே வந்தால் யார் அதிகமாக அவரை நேசித்தாரோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.

அப்படி வந்த பின் அவர் உடலில் வந்த நோயெல்லாம் இங்கேயும் உருவாக்கி அவர் தெய்வ பக்தி கொண்டது போல் இவர்களையும் பக்தி கொள்ளச் செய்து அதே நோயை விளைவித்து இவர் மீண்டும் இறந்து விட்டால் இந்த உயிரான்மா இவரைச் சார்புடையோர் உடல்களுக்குள் போகின்றது.

இப்படி ஒவ்வொரு உடலிலும் சேர்க்கும் விஷங்கள் அதிகரித்த பின் அடுத்து மனிதனாக வராது. பாம்பு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உண்டு. புலிக்கு ஒரு விஷம் மாட்டுக்கு ஒரு விஷம் மானுக்கு ஒரு விஷம் யானைக்கு ஒரு விஷம் என்ற அந்த உணர்வின் கலவைகள் கொண்டு அதற்குத்தக்க உடலைப் பெறுகின்றது.

1.அதாவது மனித உடலை விட்டு வெளியே வரும் அந்த உயிரான்மா
2.தான் சேர்த்துக் கொண்ட வேதனைக்கொப்ப (விஷத்திற்கொப்ப)
3.எந்த உடலில் அந்த விஷம் இருக்கிறதோ அந்த உடலுக்குள் சென்று
4.அந்த உணர்வைக் கருவாக்கி பாம்பு என்றால் பாம்பினம். புலி என்றால் புலி இனமாக மாறிவிடும்.

இதை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒரு ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தாலே அந்த நாற்பத்தி எட்டு நாளைக்குள் அந்தக் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறோம்.

அவரும் ஒளி நிலை அடைகின்றார். அவருக்குப் பின்னாடி நாமும் அந்த ஒளி நிலை அடையலாம். மெய் ஞானிகள் காட்டிய வழியே இது தான்.

Leave a Reply