ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

Soul cleansing

ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

 

யாம் (ஞானகுரு) பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் ஒவ்வொருவருடய நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதியச் செய்து இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டச் செய்கின்றோம். அதற்குத்தான் இந்தத் தியானம்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமானாலும் சரி “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலைத் தியானித்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் “ஆத்ம சுத்தி”

1.உங்களை அறியாமலேயே உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான்
2.தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
3.ஏனென்றால் இது எல்லாம் வாக்குடன் கூடிக் கொடுக்கும் நிலைகள்.
4.நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

சரியான முறைகளில் இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு இந்த உணர்வின் தன்மையைக் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து வளர்த்து அந்த வாக்கின் ஒலியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும் நிச்சயம் நீங்கிவிடும்.

பெண்களாக இருக்கக்கூடியவர்கள் அனைவருமே சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்து விட்டு அரிசியைப் போடும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நாம் சமைக்கும் சாப்பாட்டை யார் புசித்தாலும் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். நீங்கள் அப்பொழுது சுவாசிக்கக் கூடிய உணர்வு உங்களை அறியாமலேயே உங்களைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு அடிக்கடி கவலையும் தொல்லைகளும் வருவதனால் அந்த உணர்வுகளால் அவர்களுக்குக் கை கால் குடைச்சலும் தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் அதிகமான நிலையில் வரும். காரணம் பெண்களுக்கு ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி.

1.அடிக்கடி கவலையும் மற்ற நிலைகளையும் எண்ணி எண்ணி
2.அவர்களை அறியாமலேயே இந்த உணர்வுகள் உடலில் சேர்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடுகின்றது.
3.அதுவே பின் நாட்களில் நோய்களாக வளர்ந்து நல்லதையே சிந்திக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினால் சமையல் செய்யும் பொழுதும் சமையல் செய்தபின் பரிமாறும் பொழுதும் இந்த நிலைகளைச் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியும் அவசியம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியே சென்றாலும் தொழிலில் போய் அமர்ந்தாலும் ஒரு சங்கடமான வார்த்தைகளைக் காதில் கேட்டாலும் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் சுத்தப்படுத்துவதற்கே இந்த ஆயுதத்தை யாம் கொடுக்கின்றோம்.

இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வந்தால் மகரிஷிகள் எவ்வாறு தங்கள் உணர்வுக்குள் ஒளியைச் சேர்த்து தீமைகளை நீக்கி உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாகிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாமும் அவர்களுடைய நிலையை அடைய முடியும்.

இதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

Leave a Reply