1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்க முடியுமா…?

Vallalar HD

1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்க முடியுமா…?

 

விஞ்ஞானி என்ன செய்கிறான்…?

மனிதனை 1500 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழ வைக்கலாம் என்று சொல்கிறான். மற்ற உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களைச் சேர்த்துக் கவர்ந்து மனித உடலில் நீடித்த நாள் வாழும் வழிக்கு அந்த அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வருகிறான்.

இந்த அணுக்களின் பெருக்கத்தை இப்படிக் கொண்டு வரப்போகும் போது 1500 ஆண்டுகள் நாம் வாழலாம் என்று சொல்கிறான்.

அதர்வண வேதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டவன் என்ன செய்கிறான்…?

இன்னொரு மனித உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை மந்திரங்களாகப் பிரித்து எடுத்து அந்த உணர்வை வலிமையாக்கி எந்த உடலுக்குள்ளும் போய் இருந்து அது சாகாக் கலையாக அடுத்த அடுத்த உடலுக்குள் சென்று ரொம்ப நாள் நீடித்து வாழலாம் என்று சொல்கிறான்,

மானை ஒரு புலி அடித்துச் சாப்பிட்டால் அந்த மானின் உயிரான்மா புலியின் உடலுக்குள் போகின்றது. அதைப் போல அன்றைய ஒவ்வொரு அரசனும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை கற்றுக் கொண்டவர்கள்.

ஒரு உடலுக்குள் இந்த உணர்வு வலுவாகி விட்டது என்றால் அந்த உடலுக்குள் சென்று அதை அடக்கி அங்கே ஆட்சி புரிவது. அப்படிப் போனாலும் அந்த உடல் ரொம்ப பின்னமாகித் தாங்கவில்லை என்றால் அதிலே சேர்த்துச் கொண்ட உணர்வு போய் அடுத்து இன்னொரு உடலுக்குள் போகும். சாகாக் கலையாக சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.

மனித உடலில் இருந்தே சர்வத்தையும் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைகளில் போனவர்கள் தான் அந்த அரசர்கள்.

இப்படி வந்தது தான் எகிப்தில் எடுத்துக் கொண்டால் இறந்தவர்களின் உடல்கள் அழிந்து போகாதபடி பத்திரப்படுத்தி வைக்கின்றார்கள்.

அதாவது இந்த உடலில் இருந்து போய் விட்டோம் என்றாலும் மறுபடியும் இந்த உடலிலே புகுந்து நாம் வர வேண்டும் என்ற நிலைகளுக்குப் பத்திரமாக வைக்கின்றார்கள்.

உதாரணமாக குருமார்கள் என்று சொல்லக் கூடியவர்களை எடுத்துக் கொண்டாலும் மந்திரங்களைச் சொல்லி முழுமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட மந்திரத்திற்குப்பின் அதே கூடுவிட்டு கூடு பாயும் நிலைகளுக்கு அதற்கென்று தன் சீடர்களை நியமித்து அவர்களை மந்திரம் சொல்லச் சொல்வார்கள்.

தனக்கு வயதாகிப் போய் விட்டது என்றால் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்லி அதற்கு என்று மயக்க மருந்து கொடுத்துச் சிறுகச் சிறுக குறைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிக் குறைத்த பின் உச்சி வழியாக உயிர் வெளியே போக வேண்டும் என்ற நிலையில் மண்டையில் தேங்காயை உடைக்கச் சொல்வார்கள். தேங்காயை உடைத்தால் அது “கபால வழி மோட்சம்…!’ என்பார்கள்.

யார் அடிக்கிறாரோ இறக்கிற பொழுது அந்த எண்ணம் இங்கே வந்ததும் அந்தச் சீடன் உடலுக்குள்ளே வந்து விடும். வந்த பின்னாடி அவர் உடலிலிருக்கும் பொழுது அவர் நடத்திய வழியை எல்லாம் இந்த உடலிலிருந்து மீண்டும் நடத்தும்.

இறந்த உடலைச் சமாதியாக வைத்துக் குரு பூஜை செய்வார்கள். அந்தக் குருவையே வணங்கி அவருடைய அணுக்களைப் பெருக்கிக் கொண்ட பின் அந்த அணுக்களின் உணர்வுகள் பூராம் சீடனின் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.

1.விஞ்ஞானி அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து எப்படி 1500 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கொண்டு வருகின்றானோ
2.அதே மாதிரித் தன் அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து இங்கே இந்தச் சீடனின் உடலுடன் சேர்த்து இரண்டும் ஐக்கியமாகின்றது.

இவன் போன பின் அடுத்து ஒரு சீடன் வந்தான் என்றால் இதற்கு அடுத்து அதைச் சேர்த்து அந்த உடலையும் ஆட்சி புரியும். இதைத்தான் “குரு ஐக்கியம்…!” என்று சொல்வார்கள்.

இப்படிச் சாகாக்கலையாகப் போய்ச் சுகத்தை எப்படி அனுபவிக்கின்றார்கள் என்றும் பல உடல்களில் விஷத்தின் சேமிப்பு அதிகமான பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி மலைப் பாம்பின் உடலாகவும் சில விஷ ஜெந்துக்களாகவும் எப்படி ஆகிறார்கள் என்றும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாகக் காட்டுகிறார்.

ஆகையினால் இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

1.முதலில் உயிரின் இயக்கம் ஆவது கல்கி ஒளி.
2.அதிலிருந்து பல உடல்களை எடுத்துத் தீமைகளை நீக்கி நீக்கி
3.அந்த அந்த உடல்களில் அந்த அறிவின் தெளிவாகி அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் வளர்ந்து
4.இப்படி கோடிக்கணக்கான உடல்களை எடுத்து எடுத்து மனிதனாக வரப்படும் போது எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயா

நமது பிரபஞ்சத்தின் முழுமையும் நம் உடலிலே இருக்கிறது. அதில் எதை முன்னணியில் கொண்டு வருகிறோமோ அது நமக்குள் அறியும் சக்தியாகப் பெறுகின்றது.

இந்தப் பிரபஞ்சம் பிற மண்டங்களிலிருந்து மற்ற சக்திகளை எடுக்கிறது. பிற மண்டலங்களில் இருந்து வருவதை 27 நட்சத்திரங்களும் கவருகிறது.

அந்த 27 நட்சத்திரங்களும் வெளிப்படுத்துவதைச் சூரியன் கவருகிறது. அந்த அணுக்களின் தன்மை வரும் போது உயிரணுக்கள் தாவர இனங்களின் சத்தை எடுத்து நம் உடலாக மாற்றுகின்றது.
1.இதே உணர்வின் இயக்கம் நம் உடலிலும் பெருகுகிறது.
2.ஆகவே இந்தப் பிரபஞ்சம் எப்படியோ இந்த உயிர் இந்த உடல் ஒரு பிரபஞ்சம் என்ற நிலையிலே இயக்குகிறது.

இவை எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகள். அவன் அகண்ட அண்டத்தின் ஆற்றல்களைப் பெற்று உயிரைப் போலவே தன் உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

1.சூரியக் குடும்பமே அழிந்தாலும் மற்ற எது அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலமும் அழியாது.
3.அது தான் வேகா நிலை – கல்கி் என்பது.

ஆகவே நாம் அந்த அகஸ்தியனைப் போல வேகா நிலை அடைய வேண்டுமே தவிர சாகாக்கலை அடையக் கூடாது. ஞானிகளும் மகரிஷிகளும் எப்படி ஒளியாக வாழ்கின்றார்களோ அதைப் போல நாமும் உயிருடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.

இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் உடல் பெறும் நிலைக்கு வரக் கூடாது. இது முக்கியம்…!

Leave a Reply