மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

அருள் ஞானி ஆகுங்கள்

மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

 

நாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்ளுகின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.

ஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.

இதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.

ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.

இதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…!” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மெய் ஞானிகள் அனைவரும்
1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்
2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,
3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,
4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று
5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று
6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து
7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

இதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.

மனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்
2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்
3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.

இப்பொழுது, உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.

அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும், நீக்கிடும் சக்தியாக அமையும்.

மேலும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்கள் ஆற்றல்மிக்க சக்தியாக உங்களுக்குள் இணைந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை பூர்வ ஜென்ம வினைகளை நீக்கிடும் உங்களுக்கு மன ஆறுதலும் மன பலமும் மனத் தெளிவும் ஏற்பட்டு மகிழ்ந்த உணர்வுகளை உங்களுக்குத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

Leave a Reply