“கண்ணுக்குத் தெரியாது…!” சூட்சமத்தில் நடப்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் கோவில்களில் சிற்பங்களையும் சிலைகளையும் வடித்தனர் ஞானிகள்

1000 Pillar

“கண்ணுக்குத் தெரியாது…!” சூட்சமத்தில் நடப்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் கோவில்களில் சிற்பங்களையும் சிலைகளையும் வடித்தனர் ஞானிகள்

 

நம் உயிரை ஈசனாக மதிக்கும்படி வணங்கும்படி ஞானிகள் காட்டுகின்றார்கள். உயிரிலே ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் ஈர்க்கும் காந்தத்தை லெட்சுமி என்றும் காட்டுகின்றார்கள்.

நாம் எத்தகைய குணத்தை நுகர்கின்றோமோ (சுவாசிக்கின்றோமோ) அந்தக் குணம் நம் உயிரிலே மோதும் போது அந்தக் குணத்தின் சப்தங்கள் வெளிப்படுகின்றது. அதன் உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழன்று நம் உடலையே இயக்குகிறது.

இவ்வாறு அருவ நிலைகளில் நடப்பதைத்தான் உருவம் அமைத்து “சங்கு சக்கரதாரி விஷ்ணு” என்றும் நாம் சுவாசித்தது எத்தகைய குணமோ அந்த உணர்ச்சிகள்
1.நம் உடலை எவ்வாறு இயக்குகின்றது…?
2.சுவாசித்தது எப்படி உடலாகின்றது…? என்பதனை
3.சாதாரண பாமரனுக்கும் புரியும்படியாகக் காட்டினார்கள் ஞானிகள்.

கண்ணுக்குத் தெரியாமல் சூட்சமமாக நடப்பது அத்வைதம் என்று இருந்தாலும் அதை உருவமாக்கி
1.அதாவது சூட்சம நிலையில் நடப்பதைத் துவைதமாக்கி (கண்ணுக்குத் தெரியும்படியாக உருவமாக்கி)
2.அதற்குக் காரணப் பெயர்களை வைத்து
3.உயிரின் இயக்கத்தை நாம் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
4.ஏனென்றால் எல்லோரும் அத்வைதத்தின் உணர்வுகளை அறிய முடியாது.
5.ஆகவே உருவம் அமைத்து நினைவுபடுத்தி அதற்குண்டான காவியம் படைத்து
6.அந்தக் காவியத்தின் வழியில் அதனின் கருத்தினை நுகரச் செய்து
7.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளை நம் உடல் முழுதும் சேர்க்கச் செய்து
8.நல்ல குணங்களை நம் இரத்தத்தில் கலக்கச் செய்வதுதான் துவைதத்தின் அமைப்பு.
9.நாம் காணும் தெய்வச் சிலைகள் எல்லாமே இந்த நிலை தான்.

சிலையை உற்றுப் பார்த்த பின் நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்கின்றோமோ நுகர்ந்து உயிரிலே படும்போது விசிஷ்டாத்வைதம் என்று காரணப் பெயர் வைக்கின்றனர்.

அதாவது சிலையைப் பார்க்கும்போது காவியப் படைப்பின் வழி இது துவைதம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது கருத்தினை எண்ணி ஏங்கும்போது
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட அந்தத் தெய்வ குணம் நம் உயிரிலே பட்டபின்
2.அந்த உணர்ச்சிகளாக வெளிப்படுகின்றது… நாமும் அறிய முடிகின்றது… இந்த உடலையும் நல் வழியில் இயக்குகின்றது…!

அதனால்தான் விசிஷ்டாத்வைதம்…!

நம் உடலுக்குள் ஒவ்வொரு உணர்வும் அது எப்படி இயக்குகின்றது… இயங்குகின்றது…? என்பதை அறிந்திட சாதாரண மக்களும் கல்வி கற்கவில்லை என்றாலும் கருத்தினைக் கவர்ந்து உணர்வின் செயலை நாம் அறிந்து அதன்வழி செயல்படும்படி செய்தனர் ஞானியர்கள்.

அதன் வழியில் தான் ஆலயங்களை எல்லாம் அமைத்தார்கள் ஞானிகள். அந்த ஞானிகள் உணர்த்திய வழியில் நாம் ஆலயத்தில் காட்டப்பட்ட தெய்வ குணத்தைச் சுவாசித்து நம் உடலுக்குள் வளர்த்தால்தான் “எந்தப் பலனையும் பெற முடியும்…!”

Leave a Reply