மெய் வழிச் சாலை…!

Final destination

விண் செல்ல வேண்டிய மெய் வழிச் சாலை…!

 

ஒவ்வொரு நாளும் அதிகாலை துருவ தியானம் இருந்து முடிந்த பின் நம் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

இதற்கு முன்னாடி நாம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் விண் செல்ல வேண்டும் என்ற உணர்வை இணைத்து நமக்குள் வளர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வழியில் வந்தவர்கள் நாம். அவர்கள் உணர்வுகள் நம் உடலாக இருக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து நமக்குள் வலுவைச் சேர்த்துக் கொண்டபின் முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மா இணைய வேண்டும் என்று
1.அவர்களுடன் உறவாடிய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதன் துணை கொண்டு
2.அவர்கள் முகப்பிலே (உயிரிலே) சப்தரிஷி மண்டல உணர்வை இணைத்து எளிதில் விண்ணுக்குச் செலுத்தலாம்.

விஞ்ஞானிகள் இன்று கம்ப்யூட்டர் அலை வரிசையில் வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் உணர்கிறார்கள் கவர்கிறார்கள்.

முதலில் படம் எடுக்கும் கருவியை ராக்கெட் மூலமாக அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஒவ்வொரு கோளின் திசையையும் எடுத்து அருகில் இருந்து அவைகளின் செயலாக்கங்களை உணர்கின்றார்கள்.

அதைக் கம்ப்யூட்டரில் அதைப் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் இந்த உணர்வின் துணை கொண்டு ஒரு செயற்கைக் கோளை அங்கே அனுப்புகிறார்கள்.

முதலில் அந்தக் கோளின் உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். மாற்றிய அந்த உணர்வை இணைத்துச் செயற்கைக் கோளை அங்கே கொண்டு போகின்றார்கள்.

1.கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலை கொண்டு
2.அங்கே மோதலில் தன் இனமான உணர்வுகள் வந்தவுடனே
3.செயற்கைக் கோளைத் திசை திருப்பி அந்த கோளுக்கு அழைத்துச் செல்லுகின்றது.

கோளுக்கு அழைத்துச் செல்லும் போது அந்த வட்டப் பாதையை நிர்ணயிக்கின்றார்கள். கோளுக்குள் விழுந்து விடாதபடி அந்த சுழற்சியின் வட்டப் பாதையில் ஈர்க்கும் தன்மை வரும் போது இதைச் சுழலும்படி செய்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதை எல்லாம் இங்கே தரையில் இருந்து விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகிறார்கள்.

அதே போல் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் உந்திச் செலுத்தும் பொழுது நேராகச் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது.

அங்கே இணைந்த பின் உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகிறது.. பொசுக்கி விடுகிறது. ஏனென்றால் சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கியவர்கள்.

அப்பொழுது உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி ஒளி வட்டத்தில் சுழல ஆரம்பித்து விடுகிறார்கள்.

உதாரணமாக கணவனைப் பிரிந்த மனைவியின் உயிரான்மாவை கூட்டுத் தியானத்தின் மூலமாக எல்லோரும் சேர்ந்து அங்கே விண் செலுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் தன் மனைவியின் உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும். அப்பொழுது மனைவியின் ஆன்மா அங்கே செல்கிறது.

மனைவி சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணையும் போது அடுத்து கணவனும் உடலை விட்டுப் பிரியும் சமயம் சப்தரிஷி மண்டலத்தை எண்ணினால் தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே இழுத்துக் கொண்டு போய்விடும்.

இந்த உணர்வை எல்லாம் பெருக்குவதற்கு அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் நாம் அங்கே அனுப்பவும் முடியாது. நாம் விண் செல்லவும் முடியாது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி செய்தால் உடலை விட்டுப் பிரிந்தால் தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் போய் இணையும்.

(ஏனென்றால் ஒரு நண்பனிடத்தில் மிகுந்த பாசமாக இருக்கிறோம். எனக்கு இப்படி நன்மை செய்தான். அவனை விட்டு விட்டுப் போகிறோமே என்று எண்ணினால் வேறு எங்கேயும் அந்த ஆன்மா போகாது. நேராக நம் உடலுகுள் தான் வரும். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்)

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தவில்லை. அந்தப் பழக்கத்தை விட்டு விட்டோம். இப்போது குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகள் கண்ட வழியை உங்களிடம் தொடரச் செய்கிறோம்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று பொருள். சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் எத்தனையோ கோடி உண்டு.
1.ஏனென்றால் அவர்கள் ஒளியின் சரீரமாகி
2.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து பல நூறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது,

இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற மண்டலங்களுடன் இணைந்து அதில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றதால் “என்றுமே… எங்கேயுமே… அழியாத நிலைகள் கொண்டு வாழ்கிறார்கள்…!

அவர்கள் வாழும் எல்லைக்கு நாம் இப்போது பலரை அனுப்புகிறோம். அடுத்து நாம் இந்த உடலை விட்டுப் போனவுடனே யாருடைய தயவும் தேவையில்லை. அங்கே போய்விடுகிறது.

ஆகவே தினசரி காலைத் துருவ தியானத்தில் நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

Leave a Reply