ஞானத்தின் வளர்ச்சிப் பாதையில் நாம் செய்யும் தியானம் போதுமானதா… இல்லையா…! என்பதை எப்படி அறிவது…?

Destination of spirituality

ஞானத்தின் வளர்ச்சிப் பாதையில் நாம் செய்யும் தியானம் போதுமானதா… இல்லையா…! என்பதை எப்படி அறிவது…?

 

கேள்வி:-
ஞானப் பாதையில் பயணிக்கும் பொழுது நாம் செய்யும் தியானம் வளர்ச்சிக்குப் போதுமான அளவு இருக்கிறதா… அல்லது பற்றாக்குறையாக இருக்கிறதா… என்று எப்படி அறிவது…?

பதில்:-
ஒரு கிணற்றில் நீரை எடுக்க எடுக்கத்தான் அதிலிருந்து தண்ணீர் ஊறும். கிணற்றிலிருந்து நீரை எடுக்கவில்லை என்றால் தண்ணீர் அளவு அப்படியே தான் இருக்கும்… மேற்கொண்டு எதுவும் ஊறாது…!

அதே போல நாம் சுவையான ஒரு உணவை உட்கொள்ள வேண்டும் என்றாலும் பசி எடுக்கவில்லை என்றால் அதைச் சாப்பிட முடியாது. அதற்கு மீறிச் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. அடுத்து பசியின்மை அஜீரணக் கொளாறு போன்றவைகள் நிச்சயம் ஏற்படும்.

அதே மாதிரித்தான் நமக்குள் ஞானத்தின் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினால்
1.ஞானத்தைப் பெற வேண்டும் என்ற பசி
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோடியிலேயும் நமக்கு இருக்க வேண்டும்.

இதற்குப் பெயர் அவசரமோ அல்லது வேகமோ அல்ல…!
1.நம்முடைய ஏக்கம் அதுவாகவும்
2.நம்முடைய தேடுதல் அதுவாகவும் இருத்தல் வேண்டும் அது தான் முக்கியம்.

நாம் தான் தினமும் தியானம் செய்கிறோம் அல்லவா… அதனால் அது எப்படியாவது வளர்ந்துவிடும்…! என்ற எண்ணத்தில் மட்டும் இருந்தால் நம்முடையே குறி (TARGET –DESTINATION) மாறிவிடும்.

இதைக் காட்டிலும் வலுவான எண்ணம் ஏதாவது தாக்கினால் அல்லது நம்முடைய குடும்பத்திலோ தொழிலிலோ ஏதோ ஒன்று எண்ணியபடி நடக்கவில்லை என்றால் என்ன நினைப்போம்…?

இந்தப் பிரச்சினையை அதை முடித்து விட்டால் அதற்கப்புறம் ஞானத்தைக் கண்டிப்பாக நன்றாக வளர்க்கலாம் என்று சொல்லிச் சொல்லி இப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப் போய்விடும்.

கடைசியில் என்ன சொல்வோம்….? நான் இத்தனை வருடமாகத் தியானம் செய்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணிக்கையைத் தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர
1.நான் எதைத் தியானித்தேன்…?
2.தியானத்தின் மூலம் எதைப் பெற்றேன்…?
3.தியானத்தின் மூலம் துன்பங்களை எப்படி நீக்கினேன்…?
4.தியானத்தின் மூலம் மனதை எப்படி அமைதிப்படுத்தினேன்…?
5.கடுமையான சிக்கல் வந்த போதிலும் அதைத் தியானத்தின் மூலம் எப்படி நல்லதாக மாற்றிக் கொண்டேன்…?
6.வாழ்க்கையில் நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அது என்னுடைய ஞானத்தின் வளர்ச்சிக்காகத்தான்…! என்று தியானத்தின் மூலம் என்னால் எப்படி மாற்றியமைக்க முடிந்தது…? என்று……
7.இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான விடைகள் கிடைத்திருக்கிறது என்று தனக்குள் இருக்கும் உள் (அக) உணர்வுகள் சொல்லவில்லை அல்லது அத்தகைய உணர்ச்சிகள் வரவில்லை என்றால்
8.நிச்சயம் நம்முடைய எண்ணக் குறியைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே உண்மை.

ஒவ்வொரு நாளும் ஞானத்தைப் பெறவேண்டும் உயர் ஞானம் பெறவேண்டும்… மெய் ஞானிகள் கண்ட மெய்ப் பொருளைக் காண வேண்டும்…! அந்த மெய் ஞானியாக நாம் ஆக வேண்டும் என்ற உந்துதல் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்தப் பசி “தீராத பசி…” போல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு (அகத்திற்குள்) மட்டுமல்ல… நம்மைப் பார்ப்பவர்களுக்கும்… நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்குமே… இந்த ஞானத்தின் வழித் தொடரை அது உணர்த்திக் காட்டும்.

எந்தச் சூழ்நிலையிலுமே நம்முடைய முனைப்பு அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்று அது (TARGET –DESTINATION) முன்னாடி வந்துவிடும். அப்பொழுது லௌகீக (உடல்) வாழ்க்கையின் செயல்கள் அனைத்தும் அதற்குள் அடங்கிவிடும்.

சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளே நம்முடைய லௌகீக வாழ்க்கையைச் சீராக வழி நடத்திச் செல்வதற்குண்டான ஞானத்தைக் கொடுக்கும்.

உடல் வாழ்க்கைக்குத் தேவையான ஞானத்தைப் பெற்ற பின் உயிராத்மா ஒளியாகத் தேவையான ஞானம் பெற முடியும் என்பதல்ல.
1.உயிராத்மா ஒளியாக மாற்றும் ஞானத்தை தியானத்தின் மூலம் முதலில் வேண்டினாலே
2.(மீதமுள்ள) சர்வ ஞானமும் கிடைக்கும்… கிடைக்கின்றது…!

என்னுடைய அனுபவம் இது தான்…!

Leave a Reply