வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

eternal blissful life

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

 

கேள்வி:-
லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களை (வீடு வேலை குழந்தைகள் படிப்பு) தியானத்தின் மூலம் பெற நினைப்பது சரியா…?

பதில்:-
லௌகீக வாழ்க்கைக்கு என்று தனியாக எதையும் தேட வேண்டியதில்லை. பசிக்கும் பொழுது உணவைத் தேடுகின்றோம். உணவை உட்கொள்கிறோம். அது உடலுக்கு அவசியம் தான்..!

ஆனால் உடலை உருவாக்கிய உயிரின் அருள் பசியைப் போக்க நாம் என்ன செய்கிறோம். உடல் பசியைத் தினமும் மூன்று வேளை போக்குகின்றோம். ஆனால் அருள் பசியைத் தினமும் தணிக்கின்றோமா…? இல்லையே…!

அதை விடுத்துவிட்டு நம் உடலுக்கு… இந்த லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் பெற்றிருந்தாலும் மனிதனல்லாத உடலுக்குள் சென்ற பின் நம்முடைய நிலை என்ன…?

அருள் வாழ்க்கை வாழ்ந்தால் பொருள் நம்மைத் தேடி வரும். பொருளை மட்டும் தேடிக் கொண்டிருந்தாலோ அல்லது பொருள் இருந்தால் தானே அருளைப் பெற முடியும் என்று சொல்லிக் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தாலோ பொருள் கிடைக்கும். ஆனால்
1.நம் ஆயுள் முடிந்து மீண்டும் இன்னொரு சரீரத்திற்குள் சென்று
2.மறுபடியும் அதே பொருளையே தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
3.ஒவ்வொரு சரீரத்திலேயும் பொருளையே தேடலாம்.
4.இதை முடிவு செய்து கொண்ட பின் தியானிக்கலாம்…!

ஆகவே தியானம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்…! இது மிகவும் முக்கியம். இதைத் தெரிந்து கொண்டால் கேள்விக்குண்டான பதில் உங்களுக்கே தன்னாலே வரும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருப்பதே தியானம் ஆகும். எதை எண்ணுகின்றோமோ அதை அடுத்தவர்களிடத்தில் சொல்லிக் கொண்டேயிருந்தால் அல்லது அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ஜெபம் ஆகும். அதாவது ஜெபித்தல் என்று பொருள்.

மனிதன் என்றாலே மனது உள்ளவன்… அதாவது எண்ணத்தின் ஆற்றல் பெற்றவன்… எண்ணியதைச் செயல்படுத்துபவன்…! என்று பொருள்.

1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…?
3.நாம் எதைத் தியானிக்க வேண்டும்…?
4.நாம் எதை ஜெபிக்க வேண்டும்…? என்பதைத் தீர்மானித்தாலே நாம் பெறவேண்டியதை எளிதில் பெறலாம்.

நாம் நல்லதை எண்ணுவோம். அதைச் செயல்படுத்துவோம் ஆனால் நடக்கவில்லை என்ற உடனே நல்லதை எண்ணுவதை விட்டு விட்டுச் சோர்வடைவோம்… கோபப்படுவோம்… ஆத்திரப்படுவோம்…! ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுது கடைசியில் வேதனைப்படுவோம்.

நடக்கவில்லை… நடக்கவில்லை…! என்று அதையே தியானித்து விட்டு குடும்பத்திலும் சரி நண்பர்களிடமும் சரி பார்க்கும் அனைவரிடமும் அந்த வேதனையைச் சொல்லி மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்போம்.

நல்லதை முதலில் நினைத்திருந்தாலும் கடைசியில் தியானிப்பது வேதனையைத்தான்…! வேதனைப்பட்டால் எந்தக் காரியத்தையும் சீராகச் செய்ய முடியுமா…?

ஆனால் நல்லது நடக்கவில்லை என்றால்… அது எப்படி வேதனைப்படாமல் எப்படி இருக்க முடியும் என்பார்கள்…! வேதனை என்பதே விஷம். கோபம் என்றால் காரம். விஷத்தையும் காரத்தையும் வாயிலே போட்டால் எப்படி நல்ல சுவை வரும்…?

நல்ல சுவை வேண்டும் என்றால் விஷத்தை வேக வைக்க வேண்டும். காரத்தைத் தணிக்க வேண்டும். நல்ல சரக்குகளை இதனுடன் இணைக்க வேண்டும். இதைச் செய்யாதபடி நல்ல சுவை வராது.

அதைப் போன்று தான் நம்முடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அதாவது விஷத்தை வேக வைப்பதற்காக மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் ஆக வேண்டும். அதை எடுக்காதபடி நல்லதைப் பெற முடியாது.

அதை எடுத்து வலுவாக ஆக்கிக் கொண்ட பின்
1.எந்த நல்லது நடக்க வேண்டுமோ
2.அது மகரிஷிகள் உபதேசித்த அருள் வழிப்படி நடக்க வேண்டும் என்று சீராக எண்ணினால்
3.அதைச் செயல்படுத்தும் ஞானமும் வழி முறைகளும் தன்னாலே வரும்.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து விஷத்தை அடக்காதபடி விஷத்தையே மீண்டும் மீண்டும் சேர்த்தால் முடிவில் சுவை வராது.
1.தியானமிருக்கும் பொழுது முதலில் நடந்தது
2.இப்பொழுது நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டியதிருக்கும்.

முதலில் ஆர்வ உணர்வுகள் இயக்கும் பொழுது நம் எண்ணம் சீராகவும் வலுவாகவும் இயக்கும். ஆர்வம் தணியும் பொழுது எண்ணம் சீராக இருப்பதில்லை… வலுவாகவும் இருப்பதில்லை.

எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருந்தால் தான் இயக்கம் தெளிவாக இருக்கும். அந்த எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்துச் சேர்த்து வலுவாக ஆக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் நாம் எண்ணியபடி நடக்கவில்லை.. கிடைக்கவில்லை… என்ற நிலை ஆனவுடன் நம்மை அறியாமலே சோர்வும் கோபமும் ஆத்திரமும் வேதனையும் நமக்குள் வரத் தொடங்குகிறது.
1.அதற்குச் சிறிதளவு இடம் கொடுத்தால் என்ன ஆகும்…?
2.நம் உயிர் அதை இயக்கத் தொடங்கும். அந்த உணர்ச்சிகளை ஊட்டும்.

நாம் சாப்பிடும் உணவில் சுவையற்ற பொருள் இருந்தால் சாப்பாட்டை எப்படி வெறுக்கின்றோமோ அதே மாதிரி உடனே நமக்கு வெறுப்பு வரும். வெறுப்பு வந்தால் அடுத்து நம்முடைய தியானம் எதுவாக ஆகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஞானிகள் உணர்வை நெருங்க வேண்டும் என்றால் இந்தத் தெளிவு நமக்குள் வர வேண்டும். இத்தகைய தெளிவுடன் ஞானிகளின் உணர்வை எடுத்தால் அருள் ஆனந்த வாழ்க்கை நிச்சயம் வாழ முடியும். அருளைப் பெற்றால் இந்த லௌகீக வாழ்க்கையும் அதன் வழியிலே எளிதாகச் செல்லும்.

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் செல்லாது நேரே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகலாம்.

Leave a Reply