குறை கூறுவது மிகவும் எளிது… குறையிலிருந்து மீள்வது கடினம்…!
நாட்டின் சுதந்திரத்திற்காக அன்று எத்தனையோ பேர் பாடுபட்டார்கள். அதில் பெரியாரும் ஒருவர். அவர் மதம் என்று சொல்ல வில்லை. மத பேதம் என்று சொல்லவில்லை. இனங்கள் என்று சொல்லவில்லை. அனைவரும் “சகோதரர்கள்…!” என்று தான் உணர்த்தினார்.
அதே சமயத்தில் பக்தி கொண்ட நிலைகள் கொண்டு வாழும் சிலர் ஆங்கிலேயருடன் இணைந்து மற்றவரை எப்படிச் சுரண்டி வாழும் நிலைகளில் செயல்பட்டார்கள் என்று காட்டுகின்றார்.
தீமை என்ற நிலைகளில் அவர்களால் பகைமையைத்தான் உருவாக்க முடிந்ததே தவிர தவறை ஏற்றுக் கொள்ளும் பண்புகள் இல்லை. நல்ல ஒழுக்கங்களை வளர்க்க முடியவில்லை. கடவுளை வணங்குவோர் கடவுளை முன்னாடி வைத்துக் கொண்டு தவறு செய்வதை எல்லாம் பார்த்தார்.
1.கடவுள் இல்லை…!
2.உன்னுடைய எண்ணம்தான் கடவுளாகின்றது…! என்ற நிலையை அங்கே அவர் தெளிவாக்கினார்.
கடவுளை வணங்குவோர் என்ற நிலைகளில் பகைமைகளை ஊட்டி மற்றவரை அடிமைப்படுத்தித் தன்னை உயர்த்தி கொள்ளும் நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்று உணர்த்தினார். ஆனால் அவர் சொன்ன உண்மைகளை மாற்றிவிட்டனர்.
நான் என் தாய் தந்தையைத் தான் வணங்குகின்றேன். ஆகவே உனது தாய் தான் கடவுள் உனது தந்தை தான் கடவுள். தெய்வம் என்று இல்லை என்ற நிலையில் அவருக்குப் பின் வந்தோர் பறைசாற்றினாலும் மற்றோர்களைப் பார்க்கும் போது பழி தீர்க்கும் உணர்வைத்தான் எடுத்தனர்.
மற்றவருடைய செய்கைகளைக் குறை கூறும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டு… உயர்ந்த பண்பு கொண்ட நெறிகளை வளர்க்க முடியாது… ஞானிகள் கொடுத்த அறநெறிகள் எல்லாம் மாறி தமிழ் நாடு என்னவானது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.ஒன்றைக் குறை கூறுவது எளிது.
2.ஆனால் குறையிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.
ஆகவே குறை கூறி வாழ்ந்தால் அந்தக் குறையின் தன்மையே நமக்குள் வளரும்…! என்ற நிலைகளில் ஞானிகள் காட்டிய மெய் வழிகளைச் சற்று சிந்தித்து பாருங்கள்.
ஏனென்றால் மனிதர்கள் நாம் வெகு காலம் வாழ்வதில்லை. குறுகியே காலமே வாழும் நாம் நமக்குள் எடுத்து கொள்ளும் உணர்வு எதுவோ அதன் துணை கொண்டே அடுத்த உடலுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.
எந்த இனம் என்று சொல்லிக் கொண்டாலும் சரி… அல்லது எந்த மதம் என்று சொல்லிக் கொண்டாலும் சரி
1.பகைமை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் உடலில் அது விளைந்து
2.இந்த உடலை நோயாக்கி வீழ்த்திவிட்டுக் கடைசியில் இழி நிலையான சரீரமாகத்தான் பெற வேண்டியது வரும்.
ஆக எந்த வகையில் சென்றாலும் சரி…! நாம் எடுத்து கொண்ட உணர்வுகளை நம் உயிர் இயக்கி… அதைச் சிருஷ்டித்து… அதனின் செயலாக்கமாக நம்மை மாற்றி… எதை வலுவோ நமக்குள் எடுத்துக் கொண்டோமோ… அதன் நிலைக்கே நம்மை மாற்றும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.
அதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு இந்தப் பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பம் எப்படி ஒன்றுபட்ட நிலையில் ஒரு குடும்பமாக இயங்குகிறதோ அதைப் போல “நாம் அனைவரும் சகோதர உணர்வை வளர்த்து… ஒன்றுபட்ட நிலையில் வாழ வேண்டும்…!”