குரு மீது நம்பிக்கை இருந்தாலும்… நம் காரியங்கள் ஏன் தோல்வி அடைகிறது…?

sivalingeswaran guru

குரு மீது நம்பிக்கை இருந்தாலும்… நம் காரியங்கள் ஏன் தோல்வி அடைகிறது…? 

 

கேள்வி:-
பல பேர் விரும்பிய இலக்கு (தொழில் குடும்ப நிகழ்வு) இதை எல்லாம் நிர்ணயித்துச் செயல்படும் போது தோல்வி அடையும் சூழலில் குருவை வணங்கித் திரும்பவும் அதைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

அப்படி முயற்சித்தாலும் மீண்டும் பல தோல்விகளைச் சந்திக்கும் போது குருவின் மேல் ஆதங்கப்படுகிறார்கள். குருவை விட்டு விலக மனமில்லாமல் குரு ஏன் நம்மைக் கை விடுகிறார் என ஆதங்கப்படுகிறார்கள்.

பல முறை குருதேவரிடம் காரியம் வெற்றி பெறப் பிரார்த்தனை செய்தும் காரியம் தோல்வியாகவே முடிந்தால் நம்பிக்கை தானாகவே குறைகின்றது.

இதற்குத் தீர்வு கூறுங்கள்…!

பதில்:-
இந்தக் கேள்வியில் குருவிடம் கேட்டோம் குருதேவரிடம் கேட்டோம் என்று தான் உள்ளது. அதே சமயத்தில்
1.புருவ மத்தியில் இருக்கும் தன் உயிரான குருவிடம்
2.கேட்கவே இல்லை என்பதும் மிகவும் தெளிவாக உள்ளது.

இது எப்படி இருக்கிறது என்றால் உதாரணமாக ஃபோனில் உபயோகப்படுத்தும் சிம்மைக் (SIM) காசு கொடுத்து வாங்கி அதன் மூலம் பேசுவதற்கும் செய்தி அனுப்பவதற்கும் பெறுவதற்குரிய பணத்தையும் கட்டி விட்டு
1.என்னால் பேச முடியவில்லை
2.என்னால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்று சொல்வது போல் தான் உள்ளது.

அந்த சிம்மை (SIM) ஃபோனில் அதற்குரிய சரியான இடத்தில் பொருத்திய பின்பு அதைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரும் ஆணையை இடவில்லை என்றால் நாம் எப்படிப் பேச முடியும்…?

சிம்மை ஃபோனில் போட்டு “ACTIVATE…!” செய்தால் தானே அது வேலை செய்யும்…!

சிம் (SIM) என்னைக் கை விட்டு விட்டது. ஆனால் நாங்கள் அதன் மீது இன்னும் நம்பிக்கை நிறைய வைத்துள்ளோம் என்று சொன்னால் அது எப்படிச் சரியாகும்…?

SIMஐ ACTIVATE செய்வது மிகவும் முக்கியம்.

அது போல் தான் நீங்கள் எதை விரும்பினாலும் புறக்கண்ணால் குருவிடமும் குருதேவரிடமும் கேட்டாலும்
1.அதை அகக் கண்ணாக இருந்து புருவ மத்தியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
2.நம் உயிருடன் இணைத்துக் கொண்டு வரவில்லை என்றால்
3.எந்தத் தகவலும் பெற முடியாது… அனுப்பவும் முடியாது… நம் சக்தியும் கூடாது…!
4.உயிருக்கு வெளியிலே தான் அந்தச் செய்திகள் எல்லாம் நிற்கும்.

ஏனென்றால் நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் மிக மிகச் சக்தி வாய்ந்தது. நம் உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும். அல்லது வலிமை இருக்காது.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து.
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நாம் பல கோடிச் சரீரங்களில் பெற்ற உணர்வுகளும் இந்தச் சரீரத்தில் பெற்ற உணர்வுகளும் ஆழமாகப் பதிவாகியுள்ளது. ஆனால்
1.மகரிஷிகளைப் பற்றிய உணர்வும் குருவைப் பற்றிய உணர்வும் மண் மீது போட்ட வித்தாக இருக்கும் பட்சத்தில்
2.அதை ஆழமாகப் புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் மீண்டும் மீண்டும் ஒன்றச் செய்யாத பட்சத்தில்
3.அது வலுவாக இயக்காது… இயக்கவும் முடியாது.

மீண்டும் மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் புருவ மத்தியின் வழியாக இழுத்துச் சுவாசித்தால் தான் அகக் கண்ணான உயிரின் இயக்கம் மாறும். (இது மிகவும் முக்கியம்.)

குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு நீங்கள்
1.குருவை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்…?
2.மகரிஷிகளை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..?
3.மற்றதை எல்லாம் எத்தனை முறை நினைக்கின்றீர்கள்…?
4.நல்லது நடக்கவில்லை… என்று எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..?என்று கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக அளவில் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் உங்கள் நினைவின் எண்ணிக்கை அதிகமாகச் சென்றிருந்தால்… உயிரிடம் கேட்டிருந்தால் அல்லது பேசியிருந்தால்
1.உங்கள் தொடர்பு (ACTIVATION) மிகவும் சரியாக இருக்கும்.
2.அப்பொழுது குருதேவரும் நீங்களும் சரியான தொடர்பில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

அந்த எண்ணிக்கையே இல்லை என்றால் குரு உங்களைக் கைவிடவில்லை… “நீங்கள் தான் குருவைக் கைவிட்டுவிட்டீர்கள்…!” என்று அர்த்தம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒள்யின் சுடராக மாற்றி என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் நாமும் நம் உயிருடன் ஒன்றியே இருக்க வேண்டும். உயிருடன் ஒன்றி வாழ வேண்டும்.

புறத்திலிருந்து வரும் உணர்வில் நம் நினைவுகளை எல்லாம் செலுத்தி விட்டால் உயிர் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஏனென்றால் நெருப்பில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அது தான் இயக்கும்.

நீங்கள் மகரிஷிகளின் உணர்வை உயிரான நெருப்பில் போட்டால் தான் அந்த வாசனை நிச்சயம் வரும். அந்தச் சத்தை உயிர் இயக்கி நமக்குள் படைக்கும்.

1.குரு வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் படைத்தால் தான் நமக்கு நல்லது நடக்குமே தவிர
2.குரு வந்து நமக்குச் செய்து தர முடியாது.
3.அப்படிச் செய்தால் அது அவருக்குத் தான் நன்மையாக முடியும் நமக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

உங்கள் சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் பசி அடங்கும். உங்கள் சாப்பாட்டை குரு சாப்பிட்டால் அவர் பசி தான் அடங்கும். உங்கள் பசி அடங்கவே அடங்காது.

புருவ மத்தியில் அமர்ந்து தியானியுங்கள்.. தவமிருங்கள்…!
உங்கள் உயிருடன் நேருக்கு நேர் உரையாடுங்கள்…!
அவன் உருவாக்கித் தருவான் நீங்கள் எண்ணியதை எல்லாம்…!

செய்து பாருங்கள்…!

Leave a Reply