நாம் சேமிக்க வேண்டிய அழிக்க முடியாத சொத்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Treasure hunt for soul

நாம் சேமிக்க வேண்டிய அழியாத சொத்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்கள் மனதிலே ஊன்றியுள்ளது.

1.உயர்வு எனும் பொழுது அல்லது உன்னத நிலை எனும் பொழுது
2.நம் உடலுக்கு நம் உயிருக்கு அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்ற
3.அந்த உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் எல்லாம் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

வாழ்க்கையில் சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம். அழியாச் சொத்தை யாரும் எண்ணுவதில்லை. மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை உடலில் உள்ள பொழுதே அதைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

இந்தத் தூல சரீரத்தைத்தான் எண்ணுகின்றார்கள். ஞானச் சரீரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற… நம் உயிராத்மாவிற்கு அழியா நிலை பெற…
1.எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே நம் சுவாசத்தில் என்றுமே எடுத்துக் கொண்டால்
2.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை (உடலை) எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகின்றார்கள்.

வாழும் நாள் எல்லாம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்….!
1.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து
2.பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
3.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்த நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது. அந்த நிலையில் நம் உயிருக்குப் பெரும் சோர்வின் தன்மையைத் தான் அளிக்கின்றோம்.

அதையே வளரவிட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத் தான் மேலும் மேலும் பெறுகின்றோம். இதை எல்லாம் அறிந்திடல் வேண்டும்.

ஆகவே
1.நம் உயிரணுவிற்கு நாம் பெறும் ஊட்ட நிலையை
2.அழியாச் செல்வமான ஆத்ம ஜோதி என்ற ஒளி நிலையைப் பெற
3.ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்த நிலையில் நமக்குக் கிடைத்திடும் அரிய பொக்கிஷங்களை
4.நம் உயிரணுவிற்குச் சேமித்திடல் வேண்டும்.
5.விண்ணிலே ஒளிரும் நட்சத்திரமாகலாம்…!

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அந்தச் சொத்தே என்றும் அழியாத சொத்தாகும். அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது.

Leave a Reply