விநாயகர் கோவிலில் “மோட்ச தீபம்…” ஏற்றச் சொல்கிறார்கள்… ஆனால் அதனுடைய மூலக் கருத்தை அறிந்திருக்கின்றோமா…?

Motcha deepam

விநாயகர் கோவிலில் “மோட்ச தீபம்…” ஏற்றச் சொல்கிறார்கள்… ஆனால் அதனுடைய மூலக் கருத்தை அறிந்திருக்கின்றோமா…?

 

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் அதை இரக்கத்துடன் பார்த்து அவனுக்கு நாம் உதவி செய்கிறோம். அப்படி உதவி செய்தாலும் அவன் கஷ்டப்படும் அதே வேதனையான நஞ்சை நாம் நுகரும் பொழுது…
1.இங்கே நம் மீது மடி மீது (நெஞ்சுக்கு முன்னாடி – ஆன்மாவில்) வந்து அமர்ந்து கொள்கின்றான்.
2.அடுத்து நமக்குள் நல்ல உணர்வுகள் வர விடாது தடுத்து நிறுத்துகின்றான்.
3.நல்லவைகள் அனைத்தையும் வதம் செய்கின்றான்.
4.உடலுக்குள் சென்ற பின் நல்லதைப் பெற முடியாத நிலையில் தடுக்கின்றான்.
5.உடலுக்குள் சென்ற பின் தீமைகளையே உருவாக்குகின்றான். நன்மை செய்யும் உணர்வுகளைத் தணிக்கின்றான்.
6.ஆகவே தான் அவனை “இரண்யன்…” என்று காரணப் பெயரை வைத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு இத்தகைய தீமைகளை வென்றவர்கள் மகரிஷிகள், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று விண்ணை நோக்கி நாம் ஏகிடல் வேண்டும்.

நாம் எதை நுகர்ந்து கொடுக்கின்றமோ அதை உருவாக்கிக் கொடுக்கும் திறன் நம் உயிரான ஈசனுக்கு உண்டு. ஆகவே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் என் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஓடையில் தண்ணீர் போகின்றது. அணையாக இருக்கும் கரை சிறிதளவு கரைந்து விட்டால் தண்ணீர் எல்லாப் பக்கமும் போய் மற்றதை அழித்து விடுகிறது. கரையைச் சீராக்கினால் தான் அழிவைத் தடுக்க முடியும்.

அதைப்போல
1.நாம் சுவாசிக்கும் மூக்கு என்ற வாசல்படியைத் தாண்டித் தீமைகள் புகாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உள்முகமாக உடலுக்குள் செலுத்தும் போது
3.உள் நின்று வெளி வரும் அந்த மெய் உணர்வுகள் நம் ஆன்மாவில் இருக்கும் வேதனைகளைப் பிளக்கும்.
4.இது தான் நரசிம்ம அவதாரம்…!

நமக்குள் வரும் தீமைகளை நாம் துடைக்கவில்லை என்றால் “எவ்வளவு பெரிய ஞானியிடம் பேரன்பு கொண்டவராக நாம் இருப்பினும்…!” அந்தத் தீமையான நஞ்சின் பிடியில் அடிமையாகி விடுவோம்.

ஏனென்றால் நஞ்சு தான் உலகை இயகுகின்றது. நஞ்சு தான் உலகை அடக்குகின்றது. அந்த நஞ்சின் தன்மை நமக்குள் கூடி விட்டால் நம் நல் உணர்வின் தன்மையை ஒடுக்கிவிடும்.

நஞ்சின் தாக்குதலால் தான் உயிருக்குள் நெருப்பாகின்றது… உயிர் இயக்குகின்றது…! ஆனால்
1.அந்த நஞ்சினையே அடக்கித் தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.
2.உணர்வை ஒளியாக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் சுவாசித்தால் நமக்குள் புகும் நஞ்சினை அது வீழ்த்திவிடும்.
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத்தான் நம் ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாகப் பெருக்கிடல் வேண்டும்.
4.தீமைகள் நமக்குள் வராது அதைக் கருக்கிட வேண்டும்.

ஆனாலும் அத்தகைய சக்தி வாய்ந்த மகரிஷிகளின் சக்தியை நாம் பெற வேண்டும் என்றால் நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

நம்முடைய மூதாதையர்களுடைய உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கத் தவறினால் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியே நமக்கு இல்லை.

நஞ்சு கொண்ட நிலைகளில் சிக்கியிருக்கும் நாம் அதிலிருந்து மீண்டிட வேண்டும் என்பதற்கே தான் இதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.

ஆகவே எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் அழியாத வாழ்க்கை வாழ வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.. அந்த அருள் ஒளி பெற வேண்டும்… என்று நாம் அனைவரும் ஒருக்கிணைந்து அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.

இதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானியர்கள். நம் பூமியில் அத்தகைய மெய் உணர்வுகளை ஆதியிலே கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
1.அந்த அகஸ்தியன் காட்டிய அருள் நெறிதான் விநாயகர் தத்துவம்.
2.விநாயகர் தத்துவத்தின் மூலமே நம்மை உருவாக்கிய சக்தியை (வினையை) முழுமை அடையச் செய்வது தான்…!

ஆனால் முன்னோர்களுக்காக வேண்டி விநாயகருக்கு மோட்ச தீபத்தை மாவிளக்கில் ஏற்றி வைத்து விட்டால் போதும் என்ற நிலையில் தான் நாம் இருக்கின்றோம். ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் தப்பல்ல…! ஆனால் உண்மைகளை அறிந்து அதன்படி நடக்கின்றோமா..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Leave a Reply