நம்முடைய குருநாதரின் பலம் எப்படிப்பட்டது…?

meignanam

நம்முடைய குருநாதரின் பலம் எப்படிப்பட்டது…?

நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…!” – ஈஸ்வரப்பட்டரைப் போன்று (தற்சமயத்தில்) நம் பூமிக்குள் மனிதன் என்ற நிலையில் மனிதச் சரீரம் பெற்ற நிலையில் பித்தனைப் போன்றுதான் பல சரீரங்களிலும் இருந்துள்ளார்.

பித்தனைப் போன்று ஒவ்வாரு சரீரத்திலும் வாழ்ந்தார்…! என்றால் என்ன அர்த்தம்…?

1.புற வாழ்க்கையினுடைய நிலைகளை (நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கையை) அப்புறப்படுத்தி விட்டு
2.மெய் ஒளியையே காண வேண்டும்…! என்ற உணர்வுடன்தான்
3.கடந்த காலங்களில் அவர் செயல்பட்டிருக்கிறார்.

மெய் உணர்வின் தன்மையில் தான் (அவர்) செயல்பட வேண்டும் என்று எண்ணி இருந்தார் என்றால் அதனின் உண்மை நிலை என்ன…?

அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் அவருக்குள் விளைந்த ஆற்றல்கள் அனைத்தையும்
1.அக்காலங்களில் வாழ்ந்தோருக்குள்ளும் சரி…
2.இக்காலத்தில் வாழ்வோரின் நிலைகளுக்குள்ளும் சரி…
3.அந்த மெய் ஒலிகளைப் பதிவு செய்து
4.அவரவர் எண்ணங்களில் அதை விளைய வைக்கும் ஆற்றலாக அதை வெளிப்படுத்திச் சென்றார்.

ஒவ்வொரு சரீரத்திலும் பித்தனாக இருந்து அப்படி வெளிப்படுத்திச் சென்றாலும் தற்சமயத்தில் ஈஸ்வரப்பட்டர் என்ற இந்த உணர்வின் உடலிலே இருக்கப்படும் போது அவரைச் சந்தித்தோர் அனைவருமே அவருடன் அணுகிய நிலைகளில் எதைப் பெற்றார்கள்…?

1.எனக்குச் சொத்து வேண்டும் சுகம் வேண்டும்…
2.என்னுடைய நோய்கள் எல்லாம் போக வேண்டும்…
3.நான் நன்றாக வைத்தியம் பார்க்க வேண்டும் அதன் மூலம் பணம் சம்பாரிக்க வேண்டும்
4.குருநாதர் அருளாசி இருந்தது என்றால் இன்னும் இரண்டு வயல்களை வாங்க வேண்டும்… வீடு கட்ட வேண்டும்…!
5.பேரும் புகழும் பெற வேண்டும்…! என்ற இது போன்ற ஆசை கொண்டு தான் அவரைச் சூழ்ந்தார்கள்.

ஆனால் நானோ (ஞானகுரு) அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் என்னைக் கூப்பிடும் போதெல்லாம்… இவர் பெரிய மந்திரக்காரராகத் தெரிகின்றார்…! இவரைப் பார்த்தால் பித்துப் பிடித்தது போலிருக்கிறது என்று நினைத்து விழுந்து அடித்து ஓடிக் கொண்டிருந்தேன்.

நான் அவரை விட்டு நகர்ந்து செல்லும்போதெல்லாம்
1.”உன்னை விட்டேனா பார்…!’ என்று சொல்லிக் கொச்சையாகத் திட்டி என்னை விரட்டிக் கொண்டு வந்தார்
2.ஆனால் விரட்டும் போது நான் தப்பித்துச் சென்றாலும் என்னை விடாமல்
3.அவர் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மையை எனக்குள் உணர்த்தினார்.
4.பல உணர்வின் சக்திகளைப் பதியச் செய்து மெய் ஒளியைக் காணச் செய்தார்.
5.ஒவ்வொரு நொடியிலும் பல இன்னல்களை எனக்குக் கொடுத்துத் தான்
6.பல மெய் உணர்வுகளையும் பல பல சக்திகளையும் பல வகையிலும்
7.அதை எல்லாம் என்னை அறியாமலேயே எனக்குள் பதிவு செய்து வைத்துவிட்டார்.

இதைப் போன்று தான் இப்பொழுது உபதேசிக்கும் போது நீங்கள் சாமி என்னமோ செய்கிறார்…! ஏதோ செய்கிறார்…! என்று நினைக்கக் கூடாது.

குருநாதர் மெய் ஒளியின் ஆற்றலை எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதைப் போல செவி வழி உங்களுக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உங்கள் புலனறிவால் ஈர்க்கச் செய்து ஞானிகளின் உணர்வின் சத்தை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்குண்டான நிலைகளைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

அது மட்டுமல்ல…! எந்த மெய் ஞானி எனக்கு உணர்த்தினாரோ அதை உங்களுக்குள் உணர்த்தச் செய்து அவரின் நினைவை நீங்கள் கூட்டும் போது காற்றிலே மறைந்திருக்கும் நல்ல சக்திகளைப் பெற தியானமாகக் கொடுக்கின்றோம்.

1.அந்தத் தியானத்தின் மூலம் உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து
2.அதன் வழி கொண்டு காற்றிலே மிதந்து கொண்டிருக்கும்
3.மெய் ஞானிகளின் அருள் வித்தையும் மெய் ஞானிகளின் அருள் சக்தியையும்
4.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேராற்றல் மிக்க சக்தியையும்
5.உங்களைப் பெறச் செய்வதற்காக இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றேன்.

உங்களை அறியாமலே நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்…!

Leave a Reply