தன்னைக் காக்கவும் நல்ல குணங்களைக் காக்கவும் அதற்குகந்த சூட்சம சக்தி “அகஸ்தியனின் அருள் சக்தி தான்…”

Agastyar meditation

தன்னைக் காக்கவும் நல்ல குணங்களைக் காக்கவும் அதற்குகந்த சூட்சம சக்தி “அகஸ்தியனின் அருள் சக்தி தான்…”

அன்று அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் போது தாய் சுவாசித்த
1.நஞ்சினை வெல்லும் பல மூலிகைகளின் மணங்களும்
2.மின்னலின் வீரியத்தைத் தணிக்கும் வேர்களின் மணங்களும் அவனுக்குக் கிடைக்கின்றது.

பிறந்த பின் அவனின் வளர்ச்சியில் ஐந்து வயதிற்குள் இருபத்தியேழு நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வருவதை நேரடியாகக் காணுகின்றான்.

எங்கிருந்து இந்த மின்னல் தோன்றுகின்றது…? மின்னல் தோன்றக் காரணம் என்ன…? என்ற நிலைகளை அந்த இளமையிலே அறிய ஆரம்பித்தான்.

இருபத்தேழு நட்சத்திரங்களின் சக்தியைச் சூரியன் எடுத்து ஒளிச் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது. அந்த இருபத்தேழு விதமான உணர்வின் தன்மையை மனிதன் தனக்குள் எடுத்துக் கொண்டால் அது தான் முழுமையடையும் பருவம் என்பதை அறிந்து கொள்கிறான் அகஸ்தியன்.

நவக் கோள்கள் என்பது அந்தக் கோள்களின் உணர்வு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அடக்கம் உண்டு. நம் எண்ணங்கள் அனைத்தும் நட்சத்திரங்கள். நம் உடல் உறுப்புகள் அனைத்தும் கோள்கள்.

இருதயம் என்றால் அதில் பல வகைகளைச் சேர்த்து அதனின் உபகரணங்கள் உண்டு. கல்லீரல் என்றால் அதற்குள் பல வகை சேர்த்து அதற்கு உபகரணங்கள் உண்டு. மண்ணீரல் என்றால் அதற்கும் உபகரணங்கள் உண்டு.

அதாவது நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கு உபகோள்கள் உள்ளது போல் நம் உடலிலும் உண்டு. வியாழன் கோளிற்கு இருபத்தேழு நட்சத்திரங்களையும் கவரக்கூடிய சக்தி அதற்கு உண்டு. அங்கே எப்படி இந்த இயற்கையின் நியதிகள் இருக்கின்றதோ நம் உடலிலும் இதே மாதிரி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உணர்வுக்குத்தக்க உடல்கள் மாறி ரூபங்கள் மாறி குணங்கள் மாறி இப்படித்தான் சந்தர்ப்பத்தால் இன்று நாம் மனிதனாக வந்துள்ளோம்.

இப்போது மனிதனான பிற்பாடு முதலில் நன்றாக இருக்கிறோம். வளர்ச்சி அடைந்த பின் நோய் வருகிறது. மனிதருடைய ரூபமே மாறுகின்றது. ஏனென்றால் சந்தர்ப்பத்தில் எதையெதையெல்லாம் சந்திக்கின்றோமோ நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப அதெல்லாம் வருகிறது.
1.சந்தர்ப்பத்தால் மோதி அதற்குத் தக்க ரூபங்கள் மாறியது.
2.அதன் வழி இன்று மனிதனாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
3.ஆனால் உயிர் மட்டும் மடிவதில்லை.
4.உடல்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் கூர்ந்து கவனித்து அதை நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம். அதே போல இப்போது யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனிக்கும்போது அது உங்களுக்குள் பதிவாகின்றது.

தீமையிலிருந்து விடுபடும் அந்த நல்ல சக்தி பெற வேண்டும் என்று ஆசையுடன் நீங்கள் இருந்தால் அந்த ஆசைக்குத்தக்க நுகரப்படும் பொழுது அது உங்களுக்கு பதிவாகும். எல்லாவற்றுக்குமே நம் ஆசைதான் காரணம்.

ஏனென்றால் இதைப் படிக்கும் பொழுதே சிந்தனைகள் “வீட்டில் குழந்தை தனியாக இருப்பான்…!” என்ற ஆசையில் அவனைப் பார்க்க வேண்டுமே… என்ற எண்ணத்திலிருந்தால் இந்த உபதேசம் சுத்தமாக உங்களுக்குள் பதிவாகாது.

அந்த எண்ணம் உச்சக்கட்டம் அடைந்தவுடனே தன்னை அறியாமலே இதைக் கேட்கவிடாது எழுந்து போகச் சொல்லும். ஆகவே நம்முடைய ஆசைகள் தான் இங்கே இயக்குகின்றது. அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது.
1.சந்தர்ப்பம் தான் வாழ்க்கையாக அமைகின்றது.
2.எல்லாமே சந்தர்ப்பம் தான்…! என்றாலும்
3.மெய் ஞானிகளின் அருளை நீங்கள் பெறுவதற்காகத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை யாம் ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால் இன்று உலகம் முழுவதற்கும் தீவிரவாதம் தலை தூக்கி இருக்கிறது. அதை நீங்கள் நுகர்ந்தாலே அந்த உணர்வு உங்களுக்குள் வந்து உங்களுக்குள்ளும் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.

அவன் எங்கேயோ செய்தான். நீங்கள் அதை நுகர்ந்தீர்கள்.. உணர்ந்தீர்கள்… அறிந்தீர்கள். ஆனால் நீங்கள் நுகர்ந்த தீவிரவாதத்தின் உணர்வு உங்கள் உடலிற்குள் கருவாகி அணுவாகி உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்துடன் சண்டை போட ஆரம்பித்து விடுகின்றது.

“எங்கேயோ நடக்கிறது…!” என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் இப்படி மாறுகின்றது. நம் உடலுக்குள் இத்தகைய தீவிரவாதம் வந்தால் பல விதமான செயல்களும் புது விதமான நோய்களும் வருகின்றது.

நம் குணங்கள் மாற்றம் அடைகின்றது. வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கின்றது. எல்லாவற்றையும் இழந்த பின் இனி என்ன…! என்று விரக்தி அடைகின்றது. விரக்தி அடைந்த பின் கடுமையான தவறு செய்யும் நிலைக்கு வந்து இப்படி இன்றைய மனிதனின் நிலைகள் மாறி எங்கெங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது.

ஆகவே காற்று மண்டலம் மிகவும் விஷத் தன்மையாகப் போய்விட்டது. தேடிய செல்வம் எவ்வளவோ இருந்தாலும் அதைப் பாதுகாக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. (யாராக இருந்தாலும் சரி இந்த நிலை தான்)
1.கையில் பணம் இருந்தால் உடலுக்கு ஆபத்து… உயிருக்கு ஆபத்து…!
2.இப்படி எத்தனையோ நிலை இன்று இருக்கின்றது.

இதிலிருந்து விடுபட்டுத் தன்னையும் காக்க வேண்டும். நம் நல்ல குணங்களை அழிந்திடாது பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்குரிய ஒரு சக்தி வேண்டும் என்பதற்காகத் தான் அகஸ்தியனின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அகஸ்தியன் ஒளியின் உடலாக மாறி எப்படித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். அதை உணர்த்துவதற்காக வேண்டி குருநாதர் “நீ மின்னலைப் பாருடா…!” என்றார்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்த்தால் என் கண் பார்வைப் போய்விடும் என்ற பயத்தால் பார்க்க மறுத்துக் கொண்டு அவரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன்.

அப்போது என்னிடம் பச்சிலைகளையும் சில வேர்களையும் என் கையில் கொடுத்து அதன் பின் “மின்னலைப் பார்க்கும்படிச் சொல்கிறார்…!” அப்படியே ரொம்ப அழகாக ஆனந்தமாக இருந்தது. அதைப் பற்றி அறியும் ஆற்றலும் எனக்கு வந்தது.

இப்படித் தான் அகஸ்தியனுக்கும் அவன் தாய் கருவிலே ஆற்றல்களைப் பெற்ற பின் அவன் பிறந்த பின் அனைத்தையும் உணரும் சக்தி அவனுக்குள் வந்தது.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. அகஸ்தியன் தன் வாழ் நாளில் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுகளையும் சூரியன் கவர்ந்து பூமியில் பரவச் செய்து கொண்டிருக்கிறது.

அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுப்பதற்காக குருநாதர் எனக்கு அந்தச் சக்தியைக் கொடுத்து
1.என் உடலுக்குள் அகஸ்தியனின் ஞான வித்தை ஊன்றினார்.
2.அதை வளர்க்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தினார்.
3.அதை எடுத்து கொண்டு வளர்த்துக் கொண்டேன்.

அதைப்போல உங்களுக்கும் அகஸ்தியன் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். நீங்கள் நுகர்ந்தறியப்படும் போது உங்களுடைய ஒவ்வொரு அணுக்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன்.

ஆனால் அதை எல்லாம் பெறவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வேண்டும். தீமைகளை நீக்கக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். இருளை நீக்கும் அந்த அருள் பெற வேண்டும் என்ற இந்த ஆசையுடன் இருந்தீர்கள் என்றால் இது நல்ல பலனைத் தரும்.
1.ஆசையை எங்கேயோ வைத்துக் கொண்டு தலை வலிக்காகவும் உடல் வலிக்காகவும் இதை எண்ணி எடுக்க வேண்டாம்.
2அப்படி எண்ணி எடுக்கவே கூடாது.

நீங்கள் எல்லோரும் அந்த அருளைப் பெற வேண்டும். உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்கள் ஒவ்வொரு உறுப்புகளையும் இயக்கக்கூடிய அணுக்களுக்கு அது குறி வைத்து அந்த உணர்ச்சிகளைத் அங்கே தூண்டும்படி செய்கின்றோம்.

இப்போது யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவு செய்து கொண்ட பிற்பாடு மீண்டும் அதை எண்ணப்படும் போது உங்கள் “கண்கள்… சக்தி வாய்ந்த ஆண்டெனாவாக மாறுகின்றது….!”

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் பதிவு செய்தனோ அதனின் அலைகளை காற்றிலிருந்து பிரித்து நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது. ஒரு நல்ல சிந்தனை உள்ளதாக மாற்றுகின்றது.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் அது காற்று மண்டலத்தில் இருப்பதைத் தன்னாலே பிரித்து எடுக்க ஆரம்பித்துவிடும். எவ்வளவு கவலையாக இருந்தாலும் கூட அதை மாற்றி மகிழ்ச்சியான உணர்வைத் தோற்றுவிக்கும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்

Leave a Reply