எல்லோருக்கும் நல்லது செய்தேன்… ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்று வேதனைப்படுவார்கள்

ultimate-destination

எல்லோருக்கும் நல்லது செய்தேன்… ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்று வேதனைப்படுவார்கள் 

வாழ்க்கையில் நீ நல்லதைச் செய்ய விரும்புகின்றாய். அப்பொழுது பிறர் செய்யும் தவறைப் பார்க்கப்படும் போது
1.அவர்களுக்காக இரக்கப்பட்டோ அல்லது பரிவுபட்டோ அதை ஏங்கிச் சுவாசித்து
2.பல ஆயிரம் பணத்தையும் பொருள்களையும் கொடுத்து அவர்கள் உடலைக் காத்திட நீ உதவி செய்தாலும்
3.அவர்கள் கஷ்டங்களை எல்லாம் கேட்டுணர்ந்த அந்த விஷத்தின் உணர்வின் தன்மையை
4.நீ துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? என்று என்னிடம் (ஞானகுரு) வினா எழுப்பினார் குருநாதர்.

நீ செய்த உதவிகளுக்கு இந்த மனித வாழ்க்கையில் உனக்குப் புகழ் கிடைக்கும்… பேர் கிடைக்கும்… இரக்கத்துடன் இருப்பதால் “நல்லவர்…!” என்று எல்லோரும் உன்னைப் போற்றுவர்.

ஆனால் அதே சமயத்தில் நீ நலிந்து போகும்போது உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். அந்த நேரத்தில் நீ வேதனையான நிலைகள் கொண்டு
1.நான் எல்லோருக்கும் நல்லதைச் செய்தேன்…!
2.என்னைக் கவனிக்க யாரும் இல்லை…! என்ற அந்தக் குறையான எண்ணத்தை எடுத்து
3.உன்னை இழிநிலைப்படுத்திக் கொண்டு இருப்பாயே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் மனிதர்களையே வெறுக்கும் நிலை வந்துவிடுகின்றது. பின் உடலை விட்டுப் பிரிந்து சென்று இன்னொரு மனிதக் கூட்டுக்குள் சென்றாலும் அந்த உடலையும் அழித்துவிட்டு வேதனை என்ற விஷத்தை அதிகமாகக் கூட்டும் நிலை தான் வரும்.

பின் அந்த உடலிலிருந்து வெளியில் சென்றால் அதிகமான விஷத்தை ஏற்றுக் கொண்ட உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று மனிதனல்லாத நிலையைத்தான் அடைய முடியும் என்ற இந்த இயற்கையின் நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக்கினார்.

ஆகவே நாம் நல்லது செய்த நிலைகளைக் காத்திட வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படர்ந்து உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திப்போர் அனைவரையும் எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.அந்தக் குடும்பத்தில் உள்ளோர் இன்னல்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும்
5..அவர்கள் வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும்
6.எங்கள் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என்ற இந்த உணர்வை
7.உங்களுக்குள் செலுத்துவீர்கள் என்றால் இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஆற்றல் மிக்கதாகச் சேர்கின்றது.
8.உடலுக்குள் உயர்ந்த சக்திகளாக இது விளைகின்றது.
9.அதே சமயத்தில் உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவரை நலம் பெறச் செய்கின்றது.

உதாரணமாக வயலிலே விளையும் காய்கறிகளைப் பறித்து உடனே சமைத்து விடுவது இல்லை.
1.அந்தக் காய்கறிகளைப் பறிப்பவர் ஒருவர்
2.அதைக் கடையில் கொண்டு சென்ற வியாபாரம் செய்பவர் ஒருவர்
3.கடைக்குச் சென்று நாம் அதை வாங்கிக் கொண்டு வந்து
4.பக்குவமாகச் சமைத்து ருசியாகச் சாப்பிடும் நிலைகள் வேறு.

இதை போன்று தான் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள் நல்லது கெட்டது என்ற நிலையில் வெளியிலிருந்து வந்தாலும் அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு பக்குவமாகச் சமைத்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் நிலைக்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியை வழங்குகின்றோம்.

ஆகவே மெய் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் பெற்று அந்த உணர்வின் ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply