மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் எளிதில் அதைப் பெற முடியும்

Arul Gnanigal

மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் பதிவாக்க வேண்டிய முறையும்… பதிவாக்க வேண்டியதன் அவசியமும்…!

எத்தனையோ கோயிலுக்குப் போகின்றோம். உதாரணமாகத் திருப்பதிக்கு போனால் நான்கு நாட்கள் வரிசையில் நின்று காத்திருந்தாலும் அவனைப் போய்ப் பார்த்து அர்ச்சனை செய்து விட்டு வந்தால் தான் “நல்லது” என்று செய்கிறோம்.

நான்கு நாளாகச் சரியான சாப்பாடு இல்லை என்றாலும் மற்ற வசதிகள் நாம் நினைப்பது போல் இல்லை என்றாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு “சாமியைப் பார்க்க வேண்டும்…!’ என்று காத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் யாம் உங்களுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வுகள் நீங்கள் அனைவரும் பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்களுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உபதேசித்து நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறப் பழகும் நிலையாகச் சிறிது நேரம் தியானிக்க வேண்டும் என்றால் “தியானம் செய்ய எங்களுக்கு நேரம் இல்லை…!” என்று ஓடும் நிலையே வருகிறது.

ஆனால் அங்கே திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்றால் நேரத்தை எல்லாம் ஒதுக்கி விட்டு அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அதைப் போன்று தான் மற்ற நேரத்தை ஒதுக்கி விட்டு…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
2.நேரத்தைக் கூட்டி நீங்கள் வந்தீர்கள் என்றால் இது உங்களுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.

ஏதோ வந்தோம்…! பார்த்தோம்…! ஆசீர்வாதம் வாங்கிவிட்டுப் போகிறோம் என்று சொன்னால் நிலைத்திருக்கும் அந்தச் சக்தியைப் பெறாதபடி நீங்களே தடைப்படுத்திக் கொள்கிறீர்கள்…! என்று தான் அர்த்தம்.

எழுத்துக்களை எழுதும் பொழுது பொறுமை கொண்டு எழுதுதல் வேண்டும். எழுதும் வேகத்தைக் கூட்டினால் பொருள் தெரியாது. நீட்டமாகச் செல்லும். அதனுடைய கருத்தின் நிலை அறியாது கோடாகத் தான் இருக்கும்.

அதைப் போன்று தான் இந்த வாழ்க்கையில் நாம் போகும் வேகத்தில் என் தொழிலைப் பார்க்க வேண்டும்… அதைக் கவனிக்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்..! என்ற பல எண்ணங்களை எண்ணி அந்த ஏக்கத்தில் இருந்தால் யாம் உபதேசிக்கும் ஞானிகளின் வித்துக்கள் உங்களுக்குள் ஆழமாகப் பதியாது.

ஆழமாகப் பதியவில்லை என்றால் மீண்டும் நீங்கள் நினைவின் ஆற்றல் கொண்டு எண்ணினாலும் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெற முடியாத நிலைகள் ஆகிவிடும்.

ஆனால் அதே சமயத்தில் ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படிக்கும் பொழுது
1.ஒரு நிலை கொண்டு இதை எப்படியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் பதிவு செய்து கொண்டால்
2.அந்தப் பதிந்த உணர்வின் வலுவால்
3.நீங்கள் எண்ணும் போதெல்லாம் அது மீண்டும் குருவாக இருந்து
4.உங்களுக்குள் நல் வழி காட்டும் குருவாக அது இயக்கும்.

உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும். பொருள் கண்டு உணர்ந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும். அருள் ஞானம் பெறவேண்டும் அருள் வழி வாழ வேண்டும். மலரைப் போன்ற மணம் நீங்கள் பெறவேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும். மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

உங்களுக்குள் எது எது ஆழமாகப் பதிவாகின்றதோ அது தான் உங்களை இயக்கும். அதன் வழி தான் உங்கள் வாழ்க்கையும் அமையும்.

ஆகவே
1.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால்
2.தியானிக்கும் பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்
3.பின் அது உங்களை ஞானப் பாதையில் தன்னாலே அழைத்துச் செல்லும்.

Leave a Reply