ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று எல்லோரும் சொல்கிறோம்…! அதனின் பொருளை (கருத்தை) அறிந்திருக்கின்றோமா…?

ஒளி உலகம்

ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று எல்லோரும் சொல்கிறோம்…! அதனின் பொருளை (கருத்தை) அறிந்திருக்கின்றோமா…?

வாழ்க்கை என்ற நிலை அமைதியுடன் செல்ல வேண்டும். அது தான் வாழ்க்கையின் முழுமை. அதற்காக வேண்டி ஒரு நிலையில் இருந்து கொண்டு ஆண்டவனின் பெயரை மட்டும் உச்சரித்துக் கொண்டே ஆண்டவன் பால் செல்வதல்ல வாழ்க்கை.

மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்…! ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்…! என்றால் அப்படிப்பட்ட ஆண்டவன் எங்குள்ளான்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான் “ஆதி சக்தியின் நிலையே….!”
2.காற்றும் நீரும் மோதுண்டால் “ஒளி..” உருவாகின்றது.
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் “ஜீவன்…” உண்டாகிறது.
4.ஒளி நீர் ஒலி எல்லாமே சேர்ந்த பிறகுதான் அந்த ஜீவனுக்குச் “சுவாசத் துடிப்பே…” வருகிறது.
5.சுவாசத் துடிப்பு வந்தவுடன் பல உணர்வின் எண்ணங்களுடன் அந்த ஜீவன் (அணு) மோதி மோதி “ஈர்க்கும் சக்தி பெற்றுச் சுழல்கிறது…”

அந்த ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது தனக்குள் சேமித்த குணத்தின் தன்மைக்கொப்ப இந்தப் பூமியில் உள்ள பல சத்துகளுடன் மோதி மோதி தன் வளர்ச்சிக்கு அதன் சுவாசத்திற்கொப்ப “வழித் தொடரைப் பெறுகின்றது…”

ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில்… “ஜீவனே பெற முடியாது…!”

இரண்டு நிலைகள் கொண்ட நிலையில் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழல்வது தான் இந்த அகண்ட அண்டத்திலுள்ள எல்லா ஜீவன்களும்…! (மண்டலங்களாக இருந்தாலும் சரி உயிரினங்களாக இருந்தாலும் சரி அப்படித்தான்…!)

1.தனித்த (சக்தி) ஆண்டவன் என்று எங்கே இருக்கின்றான்…?
2.ஆண்டவனின் பெயரை ஜெபித்துக் கொண்டே நாம் எங்கே செல்லப் போகிறோம்…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே (பேரருள் பேரொளி) அந்த மோதலின் சுழற்சியில் தான் உள்ளது.

ஆதி சக்தி என்பது விஷம். அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது ஏற்படுவது வெப்பம். வெப்பத்தினால் ஈர்க்கும் காந்தமாகி மற்றதைக் கவர்ந்து ஒரு திடப் பொருளாகின்றது… “பரம்பொருள்…”

மோதவில்லை என்றால் எதுவுமே சிருஷ்டியாகாது. ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்றால் ஆண்டவன் என்ற சொல்லுக்கே பொருள் இல்லை…! மோதலினால் ஏற்படும் அந்தச் சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் உருவங்களாகி மனிதன் வரை வளர்ச்சி பெற்று வந்துள்ள நாம்
1.எல்லாமில் எல்லாமாக….
2.”ஒளிரக் கூடிய எல்லாமே ஆண்டவன் தான்…!” என்று உணர்தல் வேண்டும்.

Leave a Reply