அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது கண்டுணர்ந்த “இந்தப் பிரபஞ்சத்தின் இயக்க நிலைகள்…!”

spiritual-food-agastya

அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது கண்டுணர்ந்த “இந்தப் பிரபஞ்சத்தின் இயக்க நிலைகள்…!”

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரை நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். ஏன்…?
1.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றமோ….
2.அகஸ்தியன் கண்டுணர்ந்த அகண்ட பேரண்டத்தின் உண்மைகளை அறிய வேண்டும் என்று
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு ஏங்கினால் தான்
3.அது நல்ல முறையில் நமக்குள் பதிவாகும்.

அக்காலங்களில் வாழ்ந்த அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் எதை எதையெல்லாம் எண்ணி அவர்கள் பெற்றனரோ அவை அனைத்தும் தாய் கருவிலே வளர்ச்சி பெற்ற அகஸ்தியருக்கும் கிடைத்தது.

அவருடைய தாய் தந்தையர்கள் அவர்கள் உடல்களிலே மற்ற பச்சிலைகளைப் பூசிக் கொண்டு அதனுடைய மணத்தை வெளிப்படுத்தும் போது நுகர்ந்து தன் உணவிற்காகத் தேடி வரும் மற்ற உயிர் இனங்களோ கொசுவோ விஷ ஜந்துக்களோ இவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது. தங்களைக் காத்துக் கொள்வதற்காக வேண்டி அவ்வாறு செய்தார்கள்.

அவர்கள் சூரியனை உற்றுப் பார்க்கப் படும்போது சூரியனின் முகப்பில் தான் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்கள் பிரிக்கப்பட்டு உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றார்கள்.

ஒளிக் கதிர்கள் சூரியனிலிருந்து வெளிப்படும்போது தன் முகப்பில் பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மையைத் தான் நுகர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டு இருப்பதையும் அவர்கள் காணுகின்றார்கள். ஏனென்றால்
1.பல விஷங்களை வெல்லக்கூடிய முலாம்களை அவர்கள் உடலிலே பூசிக் கொள்வதால்
2.அதை அவர்களால் காண முடிகிகின்றது.
3.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் அவர்கள் உடல்களிலே பதிவானாலும்
4.கருவிலே வளரும் அந்த அகஸ்தியனுக்கும் தாய் ரூபத்தில் அது பதிவாகின்றது.

இவ்வாறு வளர்ச்சி பெற்றுப் பிறந்த பின் அகஸ்தியன் தரையிலே மல்லாந்து படுத்திருக்கும் போது தாய் கண்ட உணர்வுகளை அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்டு மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது அதை சூரியன் தனக்குள் கவர்ந்து தன் முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்து ஒளிக் கதிர்களாக மாற்றி அமைப்பதை இந்தக் குழந்தை (ஆரம்பத்திலேயே) பார்க்கின்றது.

ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை. தனக்குள் கவர்ந்த உணர்வுகள் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில். அதே சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்த பின் தனியாக இருந்தாலும் கொசுவோ விஷ வண்டுகளோ மற்ற ஜெந்துகளோ இவன் அருகில் வருவதில்லை.

இவன் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகள் மயங்கி விழுகின்றது. விஷ ஜந்துக்களோ அப்பால் விலகிச் சென்று விடுகின்றது.

சூரியன் தனக்குள் விளைந்த ஒளிக் கதிர்களால் மற்ற உணர்வுகள் மோதும் போது விஷத்தைப் பிரித்து விடுகின்றது… வெப்ப அலைகள் உருவாகின்றது என்ற நிலையை முதன் முதல் அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் காணவில்லை.

ஆனால் இந்தக் குழந்தை (சொல் வடிவில் சொல்ல முடியாத நிலையில்) அது ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகின்றது.

மற்ற உயிரினங்களையோ மிருகங்களையோ இது பயமற்ற நிலையில் பார்க்கின்றது. மற்ற உயிர் இனங்களும் மற்ற விஷ ஜந்துகளும் இவனைக் கண்டால் மயங்கி விழுகின்றது. இந்த மயக்கத்திற்காக அஞ்சி விலகி அப்பால் ஓடுகின்றது.

இப்படி அகஸ்தியன் இளம் பருவத்தில் வளர்ந்து வரும் போது அவனுடைய தாய் தந்தையர்கள் தன் குழந்தையின் உடலில் இருந்து நிகழ்த்தக்கூடிய நிலைகளைப் பார்த்த பின்
1.இது கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்ற
2.அப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணத் தோன்றுகின்றது.
3.அக்காலத்தில் இதைத்தான் அவர்கள் எண்ண முடியும்.

குழந்தைப் பருவத்தில் அகஸ்தியன் வானை நோக்கிப் பார்க்கப்படும் போது பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளை நட்சத்திரங்கள் கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதையும் இந்தப் பிஞ்சு உள்ளம் பார்க்கின்றது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

நாம் எப்படி இப்போது சீனியைப் போட்டு ஒரு மிஷினைச் சுற்றிய பின் “பஞ்சு மிட்டாய்” உருவாகின்றதோ இதைப் போன்று தான் அந்த நட்சத்திரம் சுழலும் போது அதிலிருந்து வெளிப்படும் மலங்களே பிற மண்டலங்களில் இருந்து வரும் அவை அனைத்தும் நூலாம்படைபோல அதிலே கவரப்பட்டு உறைந்து விடுகின்றது.

அவ்வாறு உறைந்த பின் இந்த நட்சத்திரம் சுழலும்போது இதனுடன் சேர்ந்து சுழற்சியடையப்படும் போது தூசிகளாக மாறுகின்றது. அதே சமயம் சூரியனுடைய காந்த சக்திகள் அந்தத் தூசிகளைத் தனக்குள் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதையும் அகஸ்தியன் காணுகின்றான்.

ஒரு நூலாம்படை பூச்சி அதன் வலையில் சிக்கும் ஈயைத் தனக்குள் இருக்கும் மூக்கின் நுனி கொண்டு அந்த ஈயின் உடலுக்குள் ஊடுருவச் செய்து அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்த ஈ முழுதாகவே இருக்கும்.

ஆனால் அதே சமயம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற அந்த உணர்ச்சியால் உருவாகும் அமிலத்தைக் கொண்டு நூலாம்படையாக உருவாக்கி இன்னொரு ஈயைக் காற்றுப் புகாமல் சுற்றி விடுகிறது.

அப்படிச் சுற்றும் போது தனக்குள் உருவாகும் அமிலத்தை அதன் உடலுக்குள் செலுத்தி விடுகின்றது. ஈயின் அணுக்களுக்குள் இது சேர்த்துக் கொண்ட பின் அந்த ஈயின் உயிரான்மா வெளியிலே செல்லாதபடி அந்த ஈயை உருவாக்கிய அணுக்கள் பூராமே நூலாம்படைப் பூச்சியாக உருமாறுகின்றது.

விஞ்ஞானிகள் ஆண்களைப் பெண்களாக மாற்றுவதற்காகச் சில வகைத் திரவங்களைச் (HARMONES) செலுத்துகின்றார்கள் அப்பொழுது பெண்கள் போல ஆணின் உறுப்புகள் மாறிவிடுகின்றது.

மனிதனுக்குள் விஞ்ஞான அறிவால் சேர்த்த இந்த உணர்வு போலத்தான் நூலாம்படைப் பூச்சி அது தனக்குள் இருக்கும் இந்த உணர்வுகளை ஈக்குள் சேர்த்த பின் கருத்தன்மை உரு மாற்றி தன் இனமாக உருவாக்கி விடுகின்றது.

அதே போலத்தான் 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை பால்வெளி மண்டலமாக மாற்றி அதிலிருந்து தூசிகளாக வருவதை உணவாக உட்கொள்கின்றது.

இதற்குள் சேர்த்துக் கொண்ட இதன் ஈர்ப்பு வட்டத்தில் சேர்ந்து சுழலும் அந்தப் பால்வெளி மண்டலத்தில் அது சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து அதனுடைய அமிலத்தைத் தன்னுடன் சேர்த்துச் சேர்ந்து சுற்றும் நிலைகள் வருகின்றது.

சூரியனுக்கு அருகில் கோள்களும் அதிலிருந்து வெகு தூரத்தில் நட்சத்திரங்களாகவும் இருப்பது போல ஒவ்வொரு நட்சத்திரமும் தான் உமிழ்த்தும் பால்வெளி மண்டலத்தில் இதைப் போன்ற உணர்வுகளைச் சேர்த்து விடுகின்றது.

இப்படி வளர்ச்சி பெற்று வரும் இருபத்தேழு நட்சத்திரங்களிலேயும் ஆண் பெண் என்ற நிலைகள் அதிலே எடுக்கும் துகள்களும் தூசிகளும் ஒன்றாக இணைக்கப்படும் போது இரண்டறக் கலந்து கருவாகி ஒரு பொருளை உருவாக்கும் தன்மைகள் அடைகின்றது.

இதை அந்தப் பிஞ்சு உள்ளமாக இருக்கும் அகஸ்தியன் தனது இரண்டாவது வயதில் பார்க்கின்றார். பார்த்த உணர்வு கொண்டு
1.அவனால் சில சொற்களைச் சொல்லும் தன்மையும் வருகின்றது.
2.அந்த உணர்வுகள் எதிரொலி (ECHO) வருகின்றது.
(அதைக் குருநாதர் காட்டுகின்றார்.)
3.இரண்டாவது வயதில் அவன் காணும் உணர்வுகளைத் தன் தாய் தந்தையரிடம் சொல்கின்றான்.

அவன் உடலிலே விளைந்த அந்த உணர்வின் எண்ணங்கள் இதே சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து நம் பூமியில் அலைகளாகப் படரச் செய்துள்ளது.

அந்தக் குழந்தைப் பருவத்தில் அவன் சொல்லும் மழலைச் சொல்லுக்குள் அந்த உண்மையின் தன்மை எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் காட்டுகின்றார். எனக்குள் அது பதிவாகின்றது.

மீண்டும் அதை நான் (ஞானகுரு) நினைவு கொள்ளும் போது அந்த இளம் பருவத்தில் அகஸ்தியன் எப்படிக் கண்டுணர்ந்தானோ அதைப் பார்க்க முடிகின்றது… உணரவும் முடிகின்றது.

இப்பொழுது உங்களுக்கும் அதே போலத்தான் புதிதாகத் தெரியும் போது என்ன…? ஏது…? என்று இப்பொழுது திண்டாடுகின்றோம். அல்லவா…!

இதைப் போன்று தான் அகஸ்தியன் அன்றைக்கு அவனுக்குக் கிடைத்த சக்தியைத் தன் தாய்க்குச் சொல்லுகின்றான். அந்தச் சொல்கள் வெளிவருகின்றது.
1.அதே உணர்வுகளை உனக்குள் பதிவு செய்கின்றேன்.
2.இந்த நினைவின் தன்மை கொண்டு அகஸ்தியன் எதைச் சொன்னான்…? எதைப் பார்த்தான்…? என்ற நிலைகளை நீ பார்…! என்கிறார் குருநாதர்.
3.அதை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியேதான் அங்கே உங்களை அழைத்துச் செல்கின்றேன். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர வேண்டும்.

அகஸ்தியர் கண்டுணர்ந்த அந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் பதிந்துள்ளது. பதிவானதை நினைத்து நீங்கள் தியானிக்கும் போது அதைப் பார்க்க முடியும். அகஸ்தியர் உணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்க்க இது உதவும். அதற்குத்தான் இதைச் செய்வது.

இதை மீண்டும் மீண்டும் நினைவாக்கும் போது அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகளை நீங்களும் உணர முடியும்.

தன் உடலில் வந்த தீமைகளை அகற்றி வேகா நிலை என்ற நிலை அடைந்து துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை எல்லோரும் பெற முடியும்.

அதன் வளர்ச்சியில் அனைவரும் இந்த வாழ்க்கையில் அகஸ்தியனைப் போன்று வளர முடியும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் மீண்டும் தெளிவாக்கி உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருவது…!

Leave a Reply