மனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் இன்று இந்த அளவிற்கு வளர்வதற்குக் காரணம் என்ன…?

Good will

மனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் இன்று இந்த அளவிற்கு வளர்வதற்குக் காரணம் என்ன…?

“நாம் எல்லோரும் நல்லவர்களே….!” நாம் யாரும் தவறு செய்யவில்லை. நம் வாழ்க்கையில் சந்தர்ப்பம் உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கைகளைப் படிக்கின்றோம். டி.வி. மூலம் பார்க்கின்றோம்.

நடக்கும் சம்பவங்களை எல்லாவற்றையும் அறிந்து கொண்டாலும் அதில் தவறான செயல்கள் எதைச் செய்தனரோ அதை அப்படியே நுகரப்படும் போது அதனின் தீய விளைவுகள் நமக்குள் வந்து நோய்க்குக் காரணமாகின்றது.

இங்கே திருடினான்…! அங்கே அடித்துக் கொன்றான்…! என்ற நிலைகள் வரப்படும் போது “தன்னைக் காத்திட இந்தச் செயல்களைச் செய்தார்கள்…! என்ற உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவாகின்றது. பதிவான பின்
1.இதையே தினசரி திரும்பத் திரும்பப் படிக்க (அல்லது பார்க்க)
2.நம் உடலுக்குள் அதுவே விளைந்து
3.”எந்தத் தவறைச் செய்யக் கூடாது…” என்று நினைக்கின்றோமோ
4.அதே தவறைச் செய்யத் தொடங்குவோம்.

உதாரணமாக நாட்டின் அரசியல் சட்டப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இருந்தாலும் அதிகாரமும் வலிமையும் செல்வாக்கும் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது.

ஏழ்மையில் உள்ளவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாரித்தது என்று தெரிந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்டால் உடனே கொடுத்துவிட வேண்டும்.

எல்லாம் எனக்கே சொந்தம் என்ற நிலைகள் தட்டிப் பறிக்கும் நிலை வந்துவிட்டது. மற்றவருடைய சிரமத்தை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அரசியல் வாழ்க்கையில் இவ்வாறு செய்யும் இந்த உணர்வுகள் மனிதன் என்ற பண்பை இழக்கச் செய்து பிறருடைய துன்பத்தை அறியாத நிலைகள் கொண்டு செயல்படுகிறார்கள்.

மற்றவர்கள் சம்பாதித்து அமைதியாக வாழும் நிலையில் நாம் குறுக்கிடக் கூடாது என்ற எண்ணம் வருவதில்லை.

ஒருவர் அனாதையாக இருப்பார். சிறிதளவே சொத்து இருக்கும். ஆனால் அவருக்கு வலு இருக்காது. வலு கொண்ட மனிதன் தாட்டியமாகச் செயல்படும் பொழுது அனாதையாக இருப்பவர் அடங்கித்தான் வாழ வேண்டும்.

இல்லை என்றால் வாழும் நிலைகளில் பல விதமான இடையூறுகளைக் கொடுப்பார்கள். கடைசியில் அழித்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட வலுவான அசுரத்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது வலுவற்ற மனிதருக்குள் கடுமையான வேதனைகள் வருகின்றது.

எல்லை கடந்த வேதனைகளை அனுபவிக்கும் பொழுது துன்பங்களைக் கொடுத்தவர்களை எண்ணிச் சாபமிடும் உணர்வுகளாக வந்துவிடுகின்றது.

இப்படி அவதிப்பட்டு வாழ்ந்து இறந்த பின் இவரின் உயிரான்மா யாரை எண்ணிச் சாபமிட்டார்களோ அவர்கள் உடல்களில் புகுந்து
1.பழி தீர்க்கும் உணர்வாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.
2.கடைசியில் இரண்டு உயிரான்மாவும் நஞ்சான உணர்வாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்று தான் இன்று மனிதனின் உணர்வுக்குள் நஞ்சு கொண்ட உணர்வுகளாக இன்று அரசியல் நெறிகளுக்குள் கலந்து கலந்து மக்களுக்கு நல்லது செய்யும் நிலைகளே முழுவதும் தடையாகி விட்டது.

இத்தகைய நிலைகள் வரக் காரணம் என்ன…? அதாவது அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.

அன்று சோழ மன்னன் ஆண்டான். தன் எதிரிகளை எல்லாம் வீழ்த்தி பல பல வெற்றிகளைப் பெற்றான் என்று சொல்வார்கள்.
1.எதிரிகளைக் கொன்று சோழன் வெற்றி பெற்றான் என்பதைத்தான் பெருமையாகச் சொன்னார்களே தவிர
2.தர்மத்திற்காக வென்றான்… “மக்களை எல்லாம் காத்தான்” என்ற நிலைகள் அறவே இல்லை.
3.தனக்குக் கட்டுப்படவில்லை என்றால் யாராக இருந்தாலும் அந்த அரசை வீழ்த்திவிட வேண்டும்
4.அவர்களை அடிமைப்படுத்திவிட்டால் அதைத்தான் வீர தீரம் என்று பறைசாற்றி விட்டார்கள்.

இன்று இருக்கும் உலக அரசியல் அமைப்புகளும் இந்த அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.

மக்களாட்சி என்பார்கள். மக்களைக் காப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அதன் மறைவிலே எல்லோரையும் தான் அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்காவை எடுத்துக் கொண்டாலும் வலு கொண்ட நிலைகள் வரப்படும் போது இன்று இந்தியாவை எத்தனை பாடுபடுத்துகிறான். அதைப் போல மற்ற நாடுகளிலும் எத்தனை அடக்கு முறைகளைச் செயல்படுத்துகின்றான்…?

அவனுடைய அடக்கு முறைகளை நாம் எண்ணும் போது நம்முடைய உணர்வுகள் எவ்வாறு படைக்கப்படுகிறது…? அந்த உணர்வின் தன்மையால் “அழித்திட வேண்டும்” என்ற எண்ணங்கள் தான் நமக்குள் தோன்றுகிறது.

ஒவ்வொரு நிமிடமும் இதை போல அழித்திடும் உணர்வின் தன்மையை மனிதர்கள் ஒவ்வொருவருமே விளைய வைத்து
1.நாம் எடுத்துக்கொண்ட உணர்வுகள் அனைத்தும்
2.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகக் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி விட்டது.

ஆதியிலே பேரண்டத்தில் உருவான அணுவின் வளர்ச்சியில் மனிதன் ஆகி இன்று வளர்ந்து வந்தாலும் இப்படி மற்றொருவரை அழித்திடும் உணர்வின் தன்மையாக மனித உடலுக்குள் விளைந்து விட்டது.

அவ்வாறு வெளியிடப்பட்ட இந்த உணர்வலைகள் மீண்டும் படர்ந்து மனிதனுக்குள் நின்றே “மனிதனுக்கு மனிதன் சுட்டு பொசுக்கும் நிலையாக” வளர்ந்துவிட்டது

மனிதனின் ஆறாவது அறிவு நல்ல உணர்வினை எடுத்து நஞ்சினை நீக்கும் உணர்வின் தன்மையைப் பெற்றாலும் அதனின் நிலைகள் மாறுபட்டு
1.ஆறாவது அறிவிற்குள் நஞ்சினைச் சேர்க்கும் நிலைகள் கொண்டு
2.நஞ்சாக விளைந்து உலகம் அழிந்திடும் நிலைகள் வருகின்றது.
3.மனிதர்களின் நல்ல உணர்வுகள் அனைத்தும் அழிந்திடும் காலம் நெருங்கி விட்டது.

“நல்லதை எண்ணி ஏங்கும்… உயிராத்மாக்களைச் சிறிதேனும் காக்க வேண்டும் என்ற ஆசையில் தான்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிராத்மாவில் சூழ்ந்த நஞ்சான உணர்வுகள் அகன்று பேரருள் உணர்வாகப் பேரொளியாக மாறும்.

மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் ஐக்கியமாகலாம். பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்.

Leave a Reply