“கண்ணன்” கம்சனையும் நரகாசுரனையும் கொன்றான் – விளக்கம்

Narakasura vadam

கண்ணன் கம்சனையும் நரகாசுரனையும் கொன்றான் – விளக்கம்

 

கண் தெரிந்த பிற்பாடு தன் இரையைத் தேடிச் செல்லுகின்றது ஒரு புழு. எந்த இலையில் பிறந்ததோ அதே ஆகாரத்தைத் தேடி அந்தப் புழு செல்கின்றது.

அப்போது புழுவின் எதிரியான ஒரு குருவி இதை விழுங்க எண்ணுகின்றது. அந்தப் புழுவை விழுங்கித் தன் ஆகாரமாகப் பசிக்கு எடுத்துக் கொள்ள விரும்புகின்றது.

குருவி அந்தப் புழுவைத் தன் வலையில் சிக்க வைப்பதற்காக இனிமையான ஒலியை எழுப்பிக் கத்துகின்றது. புழுவோ குருவியின் ஆட்டத்தைப் பார்க்கின்றது. அதனுடைய ஒலியைக் கேட்டு ரசித்து நிற்கின்றது.

புழுவின் கண்ணிற்குள் இருக்கக்கூடிய கரு விழி குருவியைத் தனக்குள் பதிவு செய்து அந்த ஆட்டத்தை ரசித்துப் பார்க்கின்றது. கரு விழிக்குப் பெயர் “ருக்மணி…”

ஆனால் அதே சமயம் குருவியோ இந்தப் புழுவை விழுங்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதைச் சுவாசித்து அந்த உணர்வின் எண்ணமாக குருவியின் உடலை அது இயக்குகின்றது.

தான் சுவாசித்த அந்த உணர்வு கொண்டு “கண்ணினாலேயே” அந்தப் புழுவை விழுங்கப் பார்க்கின்றது.

புழுவோ அந்தக் குருவியைப் பார்க்கும் போது அது எண்ணிய எண்ண அலையே இங்கே சத்தியபாமா என்ற உணர்வு புழுவிற்கு உண்மையை உணர்த்துகின்றது.

ஏனென்றால் கண் தெரியாத பொழுது…
1.தெரிய வேண்டும் பார்க்க வேண்டும்
2.உண்மையை அறிய வேண்டும் என்று ஏங்கியதால் தான்
3.பரிணாம வளர்ச்சியாகிக் கண்களே தோன்றியது.

கண் தோன்றிய பின் ஒரு இலையைச் சாப்பிட்ட புழுவிற்கு அடுத்த இலை வேண்டுமே என்ற எண்ணத்தில் திரும்பிப் பார்க்கும் போது அங்கே குருவி உட்கார்ந்திருக்கின்றது. அந்தக் குருவி இதை விழுங்கப் பார்க்கின்றது.

அப்போது இதை விழுங்க வேண்டும் என்ற அந்தக் குருவியின் கண்ணில் இருந்து வந்த உணர்வலை புழுவின் மேல் படுகின்றது.

புழுவோ அந்தக் குருவியைப் பார்த்து அது எண்ணிய எண்ணத்தைக் கவரும் பொழுது “சத்தியபாமா…!”
1.அந்த உண்மையைத் தனதாகப் புழுவிற்குள் காட்டி
2.அதைச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு அது கரைகின்றது.
3.அது தன்னை விழுங்க எண்ணுகின்றது என்ற உணர்வின் எண்ணத்தைப் புழுவிற்குள் உணர்த்தி
4.”நீ தப்பித்துக்கொள் “என்ற இந்த உணர்ச்சியை உந்தி அது துரத்தி விடுகின்றது
5.அதாவது “நீ தப்பித்துக் கொள்… இல்லை என்றால் உன்னை விழுங்கி விடும்…!” என்ற உண்மையைச் சொல்லுகின்றது.

இதைத் தான்
1.கண்ணன் வெண்ணெயைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் என்றும்…
2.கண்ணன் கீதா உபதேசம் சொல்கின்றான் என்றும்
3.அசுரனிடமிருந்து காத்துத் தன்னை ரட்சிக்கின்றான் (நரகாசுரனிடமிருந்து) என்றும்
4.கண்ணனைப் பற்றிக் காவியங்களில் தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

ஆரம்பத்தில் கண் இல்லாத உடல் பெற்றாலும் வளர்ச்சியில் கண் உதித்த பின் தன் எதிரியிடமிருந்து தப்பிப்பதற்குக் கண்கள் எப்படி இயக்குகின்றது உண்மையை உணர்த்தி நம்மை எப்படிக் காக்கின்றது என்பதை அறிந்திட அவ்வாறு காட்டினார்கள் ஞானிகள்.

குருவி இதை விழுங்க வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வின் தன்மையை புழுவின் கண் உணர்த்தி அந்த மயக்க நிலைகளில் சிக்காது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு அது தப்பித்துச் செல்லுகின்றது.

அப்போது அந்த அசுர சக்தியைத் தனக்குள் அது இயக்காத வண்ணம் அதைச் சம்காரம் செய்து தன் உணர்வின் ஆற்றலால் தன்னை தற்காத்துக் கொள்ளும் உணர்வின் நிலைகள் கொண்டு அந்தப் புழு தப்பிக்கின்றது.

அதை உணர்த்துவதற்காகத்தான் அந்த அசுர சக்தியைக் கம்சன் என்று காட்டியிருப்பார்கள். கம்சன் பிறக்கக்கூடிய எல்லாக் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் (தேவகியின் குழந்தைகள்) என்று சொல்லி ஒரு கதையை எழுதி வைத்திருப்பார்கள்.

ஏனென்றால் கண்கள் இல்லை என்றால் தான் வளர்வதற்காக எந்த ஜீவனானாலும் அதைத் தான் புசித்துத் தான் எடுத்துக் கொள்ளும் நிலையை உணர்த்துவதற்காக அவ்வாறு கம்சனைக் காட்டுகின்றார்கள்.

கண்கள் தோன்றிய பின் அந்த உண்மையினுடைய நிலைகளை (அந்தக் குருவியின் எண்ணத்தை) இந்த புழு தான் இழுத்துச் சுவாசிக்கும் போது
1.உயிரிலே பட்டு இயக்கித்
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையாக வந்ததைத்தான் “சூரசம்காரம்…!” என்று
3.கண்ணன் அசுரனைக் கொன்று நம்மை இரட்சிக்கின்றான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இப்படித் தான் தனக்கு வரக்கூடிய விபத்துக்களிலிருந்தெல்லாம் கண்களால் தப்பித்து அதற்குத்தக்க உணர்வின் சுவாசத்தைத் தனக்குள் வளர்த்து பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனாக வந்துள்ளோம் என்றும் காட்டுகின்றார்கள்.

“நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாக ஆகின்றாய்…!” என்று கண்ணன் கீதா உபதேசமாகச் சொன்னான் என்று கூறப்பட்டது.

மனிதனான நாம் நம் கண்களின் நினைவாற்றல் கொண்டு விண்ணிலே எட்டாத தொலைவிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வுடன் தொடர்பு கொண்டு அதை நாம் பருகினால்
1. மனித உடலுக்குள் வரும் தீமைகளை – நரகாசுரனைக் கொன்று
2.இந்த உடலுக்குப் பின் அழியா ஒளி உடலாகப் பெறலாம் என்பதைத்தான்
3.”தீப ஒளி” என்று நமக்கெல்லாம் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

Leave a Reply