நம் ஆன்மா என்பது கண்ணாடி போன்றது – தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

நம் ஆன்மா என்பது கண்ணாடி போன்றது – “தூய்மையாக வைத்திருக்க வேண்டும்”

 

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால் கண்ணாடியில் நம் உருவத்தைக் காண முடியுமா…! முடியாது.

இது போன்று பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகிவிட்டால்
1.நம்மை எது இயக்குகிறது என்று அறிய முடியாதபடி
2.நாம் பார்த்திருந்த உணர்வுகள் நமது உடலை இயக்கி
3.நம்மை நாம் அறிய முடியாத நிலைகள் ஆக்கி விடுகின்றது.

ஆகவே நம்மை நாம் எப்படி அறியவேண்டும்?

கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. ஆன்மாவில் அழுக்குப் படிந்துவிட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கிய பின் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.

பிற தீமையான உணர்வுகள் நம்மில் இணைந்து நமது சிந்தனைய மறைக்கும் பொழுது நம்முடைய ஆன்மாவை தூய்மையாக்கும் நிலை பெற்றால் தான் நம்முடைய எண்ணம் கொண்டு நமது செயலாக்கங்களை வலிமையாகச் செயல்படுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் உணர்வின் தன்மையைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செலுத்தினால் வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது.

எப்படி..?

1.சோப்பைப் போட்டு நுரையேற்றி அழுக்கை வெளியேற்றுவது போல்
2.தங்கத்தில் திரவகத்தை ஊற்றி அதில் இரண்டறக் கலந்த செம்பு வெள்ளியைப் பிரிப்பது போல்
3.கரும்புச் சாற்றுக்குள் பொட்டாசியத்தைக் கலந்து அழுக்கைப் பிரித்துச் சர்க்கரையைத் தூய்மையாக்குவது போல்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் ஆன்மாவில் பெருகச் செய்யும் பொழுது
5.தீமை செய்யும் உணர்வுகளைப் பிரித்து அழுத்தமாகத் தள்ளி நம் ஆன்மாவை விட்டே அகற்றி அனாதையாக்கிவிடும்.

நமக்குள் தெளிவான நிலைகள் வரும். சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது. தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.

செய்து பாருங்கள்…!

Leave a Reply