மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

Tap root for Spirituality

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் உணர்வைத் தன்னுள் கண்டுணர்ந்து இந்த மண்ணுலகை வென்று விண்ணுலகைச் சென்றடைந்து முழுமை பெற்றார்.

விண் செல்வதற்குண்டான பாதையை அவர் கற்றார். இந்த உணர்வை முழுமை பெறுவதற்குத் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார்.

அந்தத் துணையைத் தான் பெற்றாலும் விண்ணுலகம் செல்வதற்கு விண்ணிலே உந்தித் தள்ளுவதற்கு தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.
1.விழுதுகள் இல்லாது மரம் வளர்ந்திடாது
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.
3.அதே போலத்தான் ஒவ்வொரு உயிருக்கும் விழுதுகள் தேவை.

நாம் எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு விண் சென்ற மகா ஞானிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் எடுத்து அந்த விழுதுகளாக நாம் ஓவ்வோருவரும் உருவாக வேண்டும்.
1.உங்களுக்கு நான் விழுது
2.எனக்கு நீங்கள் விழுது என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.

விழுது இல்லாது ஒன்றின் துணை இல்லாது ஒன்று விளையாது என்ற நிலையைக் குருநாதர் தெளிவாகக் காட்டினார். அதே சமயத்தில்
1.நான் மட்டும் தனித்துத் பெறுவேன்.
2.மற்ற அனைத்தையும் வெறுப்பேன் என்ற நிலையில் பெற இயலாது.

அன்று அகஸ்தியன் தனக்குள் அனைத்தையும் இணைத்துத்தான் ஒளியாக்கினார்.
1.வருவதைத் தனக்குள் அரவணைத்துத்
2.தீங்கு செய்யாது அதை அடக்கினார்.

அதனால் தான் எதையுமே ஒளியாக மாற்றும் திறன் பெற்றார் அப்படிப் பெற்ற அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது நிச்சயம் நாம் அனைவரும் அதைப் பெறலாம்.

இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காகச் சொல்கிறேன்…!” என்று எண்ண வேண்டாம்.

இதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் நினைவாக்கும் பொழுது சந்தர்ப்பத்தில் தீமைகளைப் போக்கும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு பெறவேண்டும் என்பதற்காகத்தான் தெளிவாக்குகின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படிப் போதித்தாரோ…? மகரிஷிகளின் உணர்வுகளை நான் பெறும்படி எப்படிச் செய்தாரோ…? அவ்வாறே நீங்களும் பெறவேண்டும். பெற முடியும் என்ற அந்த நம்பிக்கையில் சொல்லுகின்றேன்.

1.உங்கள் நினைவலைகள் கூர்மையாக இருக்க வேண்டும்.
2.கூர்மையாக ஆக்க உபதேசிக்கும் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
3.பதிந்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.
4.அந்த நினைவின் ஆற்றல் உங்களை வளர்க்கும்.
5.முதலில் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்
6.பின் அது உங்களை வளர்க்கும்
7.அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
8.அருள் வழியில் அழைத்துச் செல்லும்.

Leave a Reply