குரு வழியில் பெற்ற உயர்ந்த சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்

அகஸ்தியமாமகரிஷி - பாபனாசம்
குரு வழியில் பெற்ற உயர்ந்த சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்

காலை துருவ தியானத்தைக் கடைப்பிடிக்க அந்தந்தக் குடும்பத்தில் முயற்சி எடுங்கள். நான்கிலிருந்து ஆறு மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது தியானியுங்கள்.

காலையில் ஆறரை மணிக்குச் சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளைத் தாங்கி வருகின்றது. அதைப் பெறும் பாக்கியமாகத்தான் உங்களில் பதிவாக்கி உள்ளது.

அந்த நேரம் “குளிக்க வேண்டுமே…!” என்று எண்ணாதீர்கள். உங்கள் ஆன்மாவைக் குளிக்க வைக்கின்றீர்கள்.

உடலைக் குளிக்க வைக்க நீரைப் போடுகின்றோம். நம் ஆன்மாவைக் குளிக்க அருள் ஞானிகளின் உணர்வைப் போடுகின்றோம். அதை வைத்துத்தான் தூய்மையாக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் தவறாது இதைச் செய்து பழகுங்கள்.
1.“நேரமில்லை…!” என்று விட்டு விடாதீர்கள்.
2.“முடியவில்லை…!” என்று விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் அந்த நேரத்தில் மகரிஷிகளின் ஆற்றல் நீங்கள் எல்லோரும் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன். குருவினுடைய உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்திருக்கின்றேன். அதை எளிதில் பெறுவதற்கு உங்களை நான் தியானிக்கின்றேன் தவமிருக்கின்றேன்,

இந்த உணர்வின் சத்து குருவின் அருள் இங்கே படர்ந்துள்ளது. அதை எடுத்து நீங்கள் வளர்ந்தால் தான் அந்த அலைகள் இங்கே குவியும்.

நெல் செடியின் உணர்வின் சத்துக்கள் காற்றிலே பரவி இருக்கின்றது. நாம் வயலிலே நெல்லை ஊன்றும்போது அது எந்தச் செடியிலிருந்து விளைந்ததோ அந்த சத்தினை அது கவர்ந்து தன் இனத்தைப் பெருக்கித் தன் மகசூலைக் கொடுக்கின்றது.

இதைப் போல குரு பெற்ற அந்த உயர்ந்த சக்தியை ஞான வித்தாக ஊன்றுகின்றோம்.

1.அனைவருக்குள்ளும் இது பெருக்கப்பட்டு
2.இந்த உணர்வின் அலைகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டால் தான்
3.தீமை கொண்ட இந்த உலகிலிருந்து மக்களை மீட்க முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை வளர்த்து அதை அனைவரும் பெற வேண்டுமென்ற எண்ணத்துடன் காலை துருவ தியானத்தை ஆரம்பியுங்கள்.

நஞ்சு கொண்ட உலகிலிருந்து மக்களை மீட்டுவோம் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.

1.மக்களைப் பகைமை கொண்டு பார்க்காதீர்கள்
2.பகைமை உள்ளவர் என்று எண்ணாதீர்கள்
3.தீமையான உணர்வுகள் கொண்டவர் என்று எண்ணாதீர்கள்.

தீமையான விஷக் கருணைக் கிழங்கையும் நவேக வைத்து அதனுடன் புளியும் காரமும் உப்பும் போட்டு சுவை கொண்டதாக மாற்றிச் சந்தோஷமாகச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்றுதான் எவராக இருந்தாலும் தீமை என்ற நிலைகள் மாற்றி அவர்கள் “தீமையற்றவர்களாக வாழ வேண்டும்…” என்று உங்களுடைய எண்ணத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.

தீமையற்றவர்களாக அவர்கள் வாழ்வதற்காக அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டுமென்று “தவம்” இருங்கள்.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பமாக அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply