உங்கள் தலை வலியையும் மேல் வலியையும் போக்குவதற்காக உபதேசிக்கவில்லை – உங்களுக்கு வரும் தீமைகள் எதுவாக இருந்தாலும் நீங்களே அதை அகற்றிக் கொள்ளும் சக்தியைத்தான் கொடுக்கின்றோம் (ஞானகுரு)
ஒரு விவசாய ஆபீசில் எவ்வளவோ நாள் பக்குவப்படுத்தி ஒரு வித்தைக் கொடுத்த பின் அதற்கு நீரை ஊற்றிப் பக்குவமாகப் பராமரித்து வளர்த்தால் அது “தக்க பலன் தரும்…” என்று சொல்வார்கள்.
அது போல் குருநாதர் கூட 12-13 வருடம் பெற்ற உணர்வுகளை வித்தாக அருள் வாக்காக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
அந்த அருள் வாக்குக்குள் மூலம் உங்கள் நினைவலைகளைக் கூட்டி அதன் மூலம் காற்றில் படர்ந்துள்ள ஆற்றல்மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.
“ஞானிகள் சென்ற வழிகள்” அது தான்.
சாமியாரிடம் சென்றால் தலை வலி போகும் வயிறு வலி போகும் என்று எண்ணினால் அந்த நிலையிலேயே நிற்க வேண்டியது தான்.
சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்றால்
1.அந்தத் தலை வலியும் வயிற்று வலியும் போக்க முடியும் அது தன்னாலே போகும்
2.அறியாது வரும் இருள் சூழ்ந்த நிலைகள் விலகும்
3.மெய் ஒளியின் தன்மை வளரும் என்ற இந்த நிலைகளுக்கு வரவேண்டும்.
உங்களையறியாது வரும் துன்பத்தை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் துன்பத்தை நீக்கிவிட்டு
1.இன்பத்தை வளர்க்கும் என்றும் நிலையான இன்ப நிலைகள் பெறும்
2.பெரு வீடான பெரு நிலைகள் பெற முடியும் என்றுதான்
3.உங்களுக்குள் லேசாகச் சொல்கிறேன்.