மெய்ஞான வளர்ப்புத் தியானத் திருச்சபை 

Eswara Gurudeva

மெய்ஞான வளர்ப்புத் தியானத் “திருச்சபை”

நாம் இந்தத் தியானமும் ஆத்ம சுத்தியும் செய்யும்பொழுது அதன் வளர்ச்சியில் எங்கிருந்து ஒளியான உயிர் துடிப்பு தோன்றியதோ அந்த விண்ணிற்கே செல்வோம்.

அங்கு சென்று விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றலை நாம் பெற்று “என்றும் பதினாறு…” என்ற அந்த நிலையான ஒளிச் சரீரமாகப் பெறவேண்டும்.

பெற்று அந்தச் சரீரத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் கதிர்கள் உலகத்திற்குச் சிருஷ்டிக்கும் உணர்வின் ஆற்றல்களாகப் பெருக வேண்டும் என்று தியானிப்போம்.

1.நாம் விண்ணின் தொடர்பு கொண்டு
2.அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற நினைவை நிலை நிறுத்திக் கொள்வோம்.

புவியின் வாழ்க்கையின் தன்மையிலே வரக்கூடிய விருப்பு வெறுப்பு ஆசை பாசம் இவைகளை அனைத்தையும் அழித்து “நாம் செய்ய வேண்டியது நல்லது…” என்ற நிலையும் அந்த நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் ஆத்ம சுத்தி செய்து கொண்டு நாம் விண் செல்வோம்.

இந்த வழிகளிலே ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம் என்று உறுதிப்படுத்திக் கொள்வோம். ஒவ்வொருவரும்
1.இதில் முன்னேற்றம் பெறவேண்டும்
2.பயன்கள் பெறவேண்டும் ஒளிச் சரீரம் பெறவேண்டும்
3.அதற்குண்டான ஆற்றல் உங்களுக்குள் வளரவேண்டும்.

அந்த ஆற்றலின் நிலை கொண்டு உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்களை உங்கள் உணர்வாலே நீக்கி அந்த மெய் ஒளியின் நிலைகள் உங்களுக்குள் பெருக வேண்டும்.

அது உங்களுக்குள் பெருக வேண்டும் என்பதற்காக எல்லா மகரிஷிகளையும் நமது குருநாதரையும் வேண்டி குருநாதருடைய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகள் உங்களுக்குள் பெறவேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

யாம் எப்படிச் சொல்லுகின்றோமோ அதே மாதிரி நீங்கள் தியானத்தில் சொல்ல வேண்டும். யாம் பேசும்போது எப்படிப் பிறருக்கு நல்லதாகின்றதோ அதைப்போல உங்கள் பேச்சும் மூச்சும் பிறருக்கு நல்லதாக வேண்டும்.

நாம் எல்லோரும் ஐக்கியமாக இருந்துதான் இதைச் செயல்படுத்தவேண்டும்.

குருநாதர் எமக்குச் சக்தியைக் கொடுத்தார். குருநாதருடைய சக்தி உங்கள் எல்லோருடைய உள்ளத்திலும் பதிவாக வேண்டும். உங்களுடைய பேச்சும் மூச்சும் பிறருக்கு நன்மைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இந்த ஐக்கிய மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும்.
2.இதுதான் “மெய்ஞான வளர்ப்புத் தியான சபையாக” இந்த மேடை ஆகின்றது.

இந்த மேடை நம் எல்லோருடைய நல்ல எண்ணத்தால் உருப்பெற வேண்டும். முதலில் நம்முடைய நல்ல உள்ளங்கள் வளரச் செய்வதற்குத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

இன்று சம்பாதித்து நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்களிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணத்தை நான் திருடினால் என்னவாகும்?

எனக்குள் உயர்ந்த குணம் வரும்.

ஆகவே திருடுவது எதுவாக இருக்க வேண்டும். அருள் ஞானமாகத்தான் இருக்க வேண்டும். அறிவின் தன்மை கொண்டு நாம் எதைத் திருட வேண்டும்? தீமைகளை அகற்றும் அருள் ஞானத்தை நாம் திருடுதல் வேண்டும்.

அந்த அருள் ஞானத்தை நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் இந்தத் தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது. நாம் திருடவேண்டியது எதை…? “திருடன்…” என்று சொல்லப்படும்போது இத்தனை வகையான நிலைகளை எடுத்துச் சொல்கின்றார் நமது குருநாதர்.

ஏனென்றால் சாதாரணமாக அவரிடமிருந்து தப்பி வரமுடியாது.

1.ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால்
2.10 நாட்களுக்கு நம்மை இழுத்து “வாட்டு… வாட்டு…” என்று வாட்டிவிடுவார்
3.அந்த நிலையைச் செய்வார்.

இதைச் சொல்கிறோமென்றால் நீங்கள் எதைத் திருட வேண்டும்? அருள் ஞானத்தைத் திருடி அதைப் பதிய வைத்து அதன்படி நடக்க வேண்டுமென்று அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

திருடியவன் என்ன செய்கின்றான்? பொருளை எடுத்து அவன் சுகத்திற்கு அனுபவிக்கிறான்.

1.அருள் ஞானத்தைத் திருடினால்
2.உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி
3.மகிழ்ச்சி பெறும் உணர்வுகளுக்கு அது பயன்படும்.

Leave a Reply