“இருந்த இடத்திலிருந்தே…” நீங்கள் அருள் சக்திகளை எளிதில் பெற முடியும்

power of human soul

“இருந்த இடத்திலிருந்தே…” நீங்கள் அருள் சக்திகளை எளிதில் பெற முடியும் 

 

சாமியைப் பார்த்ததும்… அல்லது சாமியாரைப் பார்த்தால்… அவர்கள் ஆசிர்வாதம் கொடுத்தால்… “நமக்கு எல்லாம் கிடைத்துவிடும்…!” என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

ஆனால்
1.நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதைத் தான் நம் உயிர் இயக்கி
3.அந்த உணர்வின் வழிப்படி செயல் படுகிறது  என்பதை அடிக்கடி நான் சொல்லி வருகிறேன்.

நீங்கள் இருந்த இடத்திலிருந்து நல்ல சக்திகளைப் பெற முடியும். அந்தத் தன்னம்பிக்கை வேண்டும்.

உதாரணமாக ஒருவர் திட்டும் போது அதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு என்ன செய்கிறீர்கள்…?
1.“என்னைத் திட்டினார்… திட்டினார்…” என்று எண்ணுகிறீர்கள்
2.என்னைத் திட்டினால் “உருப்படுவானா… அவன் உருப்படுவானா” என்றும் எண்ணுகிறீர்கள்.
3.இந்த உணர்வு அங்கேயும் போய் இயக்குகிறது. இங்கேயும் இயக்குகிறது.

உங்கள் குழந்தை மீது பாசமாக இருக்கின்றீர்கள். குழந்தை வெளியூரில் படிக்கிறது.  ஒரு வாரம் குழந்தையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றால் என்ன நினைக்கின்றீர்கள்.

அதன் மீது கொண்ட பாசம் காரணமாக “என்ன ஆயிற்றோ… ஏது ஆயிற்றோ…!” என்று வேதனைப்படுகிறீர்கள்.

இப்படி வேதனைப்படும் போது
1.இதே வேதனை உங்களுக்குள்ளும் விளைகிறது
2.அந்தக் குழந்தைக்கும் அதனால் வேதனை ஏற்பட்டு
3.சிந்திக்கும் தன்மை இழந்து அதனுடைய படிப்பும் கெடுகிறது.

இதற்கு முன்னால் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

நீங்கள் இவ்வாறு குழந்தையை வேதனையுடன் எண்ணும் போது அந்தக் குழந்தை சிந்திக்க முடியாமல் படிப்பில் ஓரளவிற்கு நினைவை இழக்கச் செய்கிறது.

முக்கியமான பாடங்கள் இருக்கும் போது நீங்கள் வேதனைப் பட்டீர்கள் என்றால் அங்கே குழந்தைக்கு நினைவில்லாமல் போகிறது.

நினைவில்லாமல் போகும் போது “இன்று நன்றாகப் படித்துக் கொண்டு வந்தோமே…! தேர்வு எழுதும்போது இப்படி ஆகிப் போய்விட்டதே…!” என்று அதுவும் வேதனைப்படும்.

“இது எல்லாம் நம்மை அறியாது செயல்படும் உணர்வின் இயக்கங்களே” என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

1.“நீங்கள் எல்லாம் அருள் ஞானம் பெற வேண்டும்” என்று தான்
2.“உங்கள் உயிரை… நான் கடவுளாக” வணங்குகிறேன்
3.உங்கள் உயிரை “ஈசனாக” மதிக்கின்றேன்.

ஈசனால் உருவாக்கப்பட்டது தான்  உடல். உயிரால் உருவாக்கப்பட்ட உடலைச் “சிவம்” என்று மதிக்கின்றேன்.
1.எண்ணத்தால் உருவானதுதான் “கண்” என்றும்
2.கண்ணால் தான் உருவாகி “எண்ணத்தைக் கொடுக்கிறது” என்றும்  குருநாதர் காட்டிய அருள் வழியில் “உங்களை” நான் மதிக்கின்றேன்.

எண்ணத்தால் தான் நாம் எல்லாவற்றையும் இயக்குகிறோம்.

1.நம் சொல்லே இராமனாகிறது
2.நம் கண்ணே கண்ணனாகிறது
3.நம் உடலே சிவமாகிறது என்ற நிலையில் வைத்து
4.ஒவ்வொருவரும் இதைப் போல நினைக்க நேர்ந்தால்
5.ஒவ்வொரு உடலையும் உயிரையும் கோவிலாகவும் ஈசனாகவும் சிவனாகவும் விநாயகனாகவும் சொல்லை இராமனாகவும் கண்ணைக் கண்ணனாகவும்
6.நாம் மதிக்க முடியும்.

இவ்வாறு நாம் மதித்து விட்டால் நம்மை அறியாது வரும் தீமைகளை அகற்றும் சக்தியை… “நாமே பெறுகின்றோம்”.

ஏனென்றால் தீமை என்ற உணர்வு நுகரப்படும் போது நம் உயிரிலே பட்டுத் தீமைகளை விளைவிக்கும் உணர்ச்சிகள் நம் உடலிலே சுழல்கின்றது.

உயிருக்கு “விஷ்ணு..” என்று காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
1.இயக்கத்தின் நிலையை “ஈசன்…” என்றும்
2.இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு…” என்றும்
3.இயக்கத்தால் ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி…” என்றும் தெளிவாக நமது ஞானிகள் எடுத்து உரைத்துள்ளார்கள்.

உயிரான ஈசனிடம் (ஈசனுக்கு) நாம் எதை எண்ணுகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்தித்திருக்கின்றோமா…?

நாம் எதை எண்ணுகின்றோமோ அது “உயிரிலே மோதும் போது தான்” அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே இயக்கத் தொடங்குகின்றது.

அதனால் தான் அவனைச் “சங்கு சக்கரதாரி” என்றும் தெளிவாகக் கூறுகிறது நமது சாஸ்திரம்.

இதைப் பலமுறை உங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன்.

பிறருடைய வேதனைகளை நாம் சுவாசித்தோம் என்றால் முதலில் அந்த வேதனை உணர்ச்சிகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
1.நம் உடலான ஆலயத்தில் அசுத்தத்தைச் சேர்க்கின்றோம்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கும் துயரைக் கொடுக்கின்றோம்.

கண்ணால் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை தெளிவாக்கும் நம் கண்ணுக்கு வேதனை என்ற உணர்வு வரும் போது கண் மங்கும் நிலையும்… “சிந்திக்கும் தன்மையும் சீரான உணர்வைக் கவரும் தன்மையும் இழக்கிறது…” என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை மனதில் வைத்து ஒவ்வொரு மனிதனையும் நாம் மதிக்கும் தன்மை வந்தால் “நம்மை நாம் மதிக்கிறோம்” என்று பொருள்.

1.பிறருடைய உயிரை ஈசனாக மதித்தால் நம் உயிரை ஈசனாக மதிக்கின்றோம்.
2.பிறருடைய உடலைச் சிவமாக மதித்தால் நம் உடலைச் சிவமாக மதிக்கின்றோம்.

இதைப் போல
1.உயர்வாக உங்களை நான் மதிக்கின்றேன்.
2.உங்களைக் கடவுளாக மதிக்கின்றேன்.
3.உங்கள் உடலைக் கோயிலாக மதிக்கின்றேன்.
4.உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன் – “என் குரு வழிப்படி”.

எனக்கு அதைத் தான் உபதேசித்தார். அதைத் தான் உங்களுக்கும் நான் உபதேசிக்கிறேன்.

இதனை நீங்கள் கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைத் துடைப்பதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.”ருந்த இடத்திலிருந்து…” தீமைகளை அகற்றலாம்.
2.உயர்ந்த உணர்வின் சக்திகளை நீங்கள் பெறலாம் என்று தான் சொல்லுகின்றேன்.

“எப்பொழுதுமே… உங்களிடம் தான்… வரம் கேட்கின்றேன் நான்..!”.

காரணம்… உடலான ஈசன் வீற்றிருக்கும் இடத்தில் அமைதி கொண்ட உணர்வுகளை நீங்கள் சுவாசித்தால் அந்த அருள் உணர்வுகள் வெளி வரும் போது… அதைக் கண்டு… “நான் ஆனந்தப்படுகின்றேன்”.
1.என் உயிரான ஈசனுக்கும்
2.அந்த அமுதைக் கொடுக்கின்றேன்.

அந்த ஆனந்தத்தை நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

குறைகளை அகற்றி அருளைப் பெருக்கி இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் அந்த அருள் சக்தி பெற ஒவ்வொரு மனிதனின் உணர்விலும் கடவுள் என்ற நிலையில் எடுத்தல் வேண்டும்.

எமது அருளாசிகள்.

Leave a Reply