மார்க்கண்டேயன் உடலைப் பற்றவில்லை… “உயிரைப் பற்றிக் கொண்டான்…!” அதனால்தான் எமன் அவனைக் கவர முடியவில்லை

Lord Markandeya

மார்க்கண்டேயன் உடலைப் பற்றவில்லை… “உயிரைப் பற்றிக் கொண்டான்…!” அதனால்தான் எமன் அவனைக் கவர முடியவில்லை

 

குடும்பத்தில் நாம் பாசமாக இருக்கின்றோம்.

 

நம் பிள்ளை மீது பாசமாக எண்ணி அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டாலோ படிக்கவில்லை என்றாலோ

1.இப்படிச் செய்கின்றானே எதிர்காலம் என்ன ஆகுமோ…! என்று எண்ணி எண்ணி வேதனையை எடுத்துக் கொண்டால்

2.நமக்குள் அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.

 

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நமக்குள் அது சித்திர புத்திரன். நாம் எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அது “சித்திரமாகி” (படமாகி) அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் “புத்திரனாக” (அணுக்களாக) இணைந்துவிடுகின்றது.

 

அதையே திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பாசக் கயிறாக மாறி வழித் தொடராகின்றது. எருமை எவ்வாறு சிந்தனையற்று ஆகின்றதோ அதைப் போல

1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்ற வேதனை வரப்படும் பொழுது

2.அந்த உணர்வின் சத்தே நமக்குள் புத்திரனாகின்றது.

 

நாம் எண்ணியபடி ஒருவன் நடக்கவில்லை என்றால் அந்த வேதனையான உணர்வு எனக்குள் வரும் பொழுது சித்திரபுத்திரன்.

 

ஆகவே அவன் எனக்குத் “தீங்கு விளைவித்தான்… தீங்கு விளைவித்தான்…” என்ற எண்ணத்தை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பிள்ளையாக வந்து சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் அடுத்து எமன் தண்டனை கொடுக்கின்றான்.

 

இங்கே எமன் என்பது நம்முடைய அந்த எண்ணம் தான்.

 

வேதனையான எண்ணங்களை நமக்குள் எடுக்கும் பொழுது…, கண்ணிலே பார்ப்பது “சித்திரம்” ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் எனக்குள் அது “புத்திரனாகி” அந்த வேதனையாக வளர்கின்றது. அடிக்கடி நாம் எண்ணப்படும் பொழுது அது “பாசக்கயிறாக” மாறுகின்றது.

 

எருமை ரோட்டில் வரும் போது பஸ் வந்தாலும் அதைத் திரும்பிப் பார்ப்பதில்லை. “அடிபட்ட பின் தான்…” அதற்குத் தெரியும்.

 

இதே போல் நாம் சிந்தனையற்ற நிலைகள் வரும் பொழுது அதன் மீது தான் வருகின்றான் எமன். மனிதனான பின் சிந்தனையற்ற செயல்களைச் செய்யும் பொழுது

1.எதன் மேல் சிந்தனையற்று நம் பாசத்தை உந்துகின்றோமோ

2.அதனின் உணர்வு கொண்டு நம் சிந்தனை மந்தமாகி

3.நம் உடலை நம் எண்ணமே அழித்துவிடுகின்றது.

 

மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்?

 

1.கீழே இருக்கக்கூடியது ஆவடை உடல். அதைப் பற்றவில்லை.

2.அந்த உயிரின் தன்மை இயக்கிய நிலைகள் கொண்டு  தாவி அந்த லிங்கத்தைத்தான் ஆலிங்கனம் செய்கின்றான்.

3.அது ஜீவனுள்ளது.

 

உயிரின் தன்மை நமக்குள் வளர்ச்சி கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி அதனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் தன்மையை “ஒளியாக மாற்றினான்” என்ற நிலையை அதிலே நிலைப்படுத்திக் காட்டினார்கள்.

 

எருமை என்ற வாகனம் மீது எமன் வருவதைக் காட்டுகின்றார்கள். அந்த மார்க்கண்டேயன் உயிரை எடுக்க வருகின்றான்.

 

ஆனால் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது இவனால் அவனைக் கவர முடியவில்லை என்று “சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம்…” மிக மிகத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

 

நம்முடைய எண்ணம் உயிருடன் ஒன்றிய நிலைகளில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இருந்தால்

2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக வரும் என்று

3.விளக்க உரையாகக் காவியமாகத் தீட்டி உருவத்தை அமைத்து

4.சாதாரண மக்களும் புரிந்திடும் வண்ணம் கொடுத்துள்ளார்கள் தத்துவ ஞானிகள்.

 

அவ்வாறு வகுக்கப்பட்டிருந்தாலும் “நாம் புரிந்திருக்கின்றோமா…!” என்றால் இல்லை.

 

தெய்வத்திற்கு ஆராதனையும் அர்ச்சனையும் செய்தால் அந்தத் தெய்வம் செய்யும் மந்திரவாதியிடம் காசைக் கொடுத்தால் அவன் செய்வான். ஜோதிடக்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு யாகம் செய்து பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று இந்த எண்ணத்திலேயே தான் இன்றும் வாழ்கின்றோம்.

 

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் வேகா நிலை பெற்றது. துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்திலிருக்கும் சப்தரிஷி மண்டலமும் என்றுமே அழியாதது. எந்த நஞ்சு கொண்ட உணர்வுகளும் அதை மாய்த்திட முடியாது.

 

நாம் காணும் கோள்களோ சூரியன்களோ கடுமையான கதிரியக்கங்களை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ எல்லாமே ஒரு கால கட்டத்தில் அழியக்கூடியதுதான்.

 

நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாக மாறிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலைகளிலிருந்து மாறி நாம் மனிதனான பின் முதுமை அடைவது போல் சூரியனும் முதுமை அடைந்துவிடும்.

 

இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணுவின் தோற்றமாகி மற்ற ஏனைய உடல்களைப் பெற்று மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்.

 

1.மனிதனான பின் நாம் அந்த மகரிஷிகளுடன் ஒன்றிக் கொண்டால்

2.வேகா நிலையாக என்றுமே நிலைத்து இருக்கும் வாழ்க்கையாக

3.”என்றும் பதினாறு” என்று நாம் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

 

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக வேண்டித்தான் “என்றும் பதினாறு…  என்று மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள்.

Leave a Reply