அகஸ்தியர் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகளை எந்நாட்டவரும் பெறலாம்

Agastya statue

“அகஸ்தியர் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகளை எந்நாட்டவரும் பெறலாம்”

அகஸ்தியர் தம் தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபொழுது பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவர் தம்முள் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை கருவிலேயே பெற்றார்.

 

அவர் குழந்தையாகப் பூவுலகில் பிறந்தபின் திறந்தவெளியில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் சூரியனை உற்றுப்பார்க்கின்றார். சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தை நுகர்கின்றார், அது சமயம் அவைகள் அவருக்குள் அடங்குகின்றது.

 

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்க உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்பொழுது மின்னல்களாக மின் கதிர்களாக புவியில் பரவுகின்றது.

 

அதனில் கலந்து வரும் விஷத்தை அகஸ்தியர் நுகர்கின்றார். அதுவும் அவருக்குள் அடங்குகின்றது. இப்படித்  தமது குழந்தைப்பருவத்தில்

1.கண்ணால் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்

2.அகஸ்தியருக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளிக் கதிர்களாக மாறுகின்றது.

3.மின்னல் எப்படிப் பல நிலைகளிலும் ஊடுருவிச் சென்று தாக்குகின்றதோ

4.அதே போன்று அகஸ்தியருடைய நினைவாற்றலும் விண்ணில் பரவும் தன்மையினைப் பெறுகின்றது.

5.ஆகவே அகஸ்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.

 

இதேபோன்று இன்று விஞ்ஞானிகள் சாதாரணக் கண்ணாடிகளில் விஷம் தோய்ந்த இரசாயணங்களை இணைக்கின்றனர்.

 

அதை வைத்து வெகுதூரத்தில் இருக்கக்கூடிய பொருட்களைக் காணக்கூடிய வகையிலும் கதிரியக்கப் பொறிகளைக் கவர்ந்திடும் வகையிலும் “கண்ணாடிகளை” (TELESCOPE) உருவாக்குகின்றனர்.

 

இதனின் துணை கொண்டு வெகு தொலைவில் இருக்கக்கூடிய கோள்களைப் படமாக்குகின்றான். இப்படி எடுக்கப்பட்ட படத்தின் உணர்வின் ஒலி அலைகளை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக மாற்றியமைத்துக் கம்ப்யூட்டரில் பதிவாக்குகின்றான்.

 

இதனின் துணை கொண்டு

1.கோள்களில் நடைபெறும் இயக்கங்களையும்,

2.கோள்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும்

3.அது எப்படி எதிர்மறையாக இயங்குகின்றது…? என்பதையும் விஞ்ஞானி அறிகின்றான்.

 

கம்ப்யூட்டரின் துணை கொண்டு கெமிக்கல் கலந்த நாடாக்களில் உணர்வுகளின் அதிர்வுகளைப் பதிவு செய்கின்றனர். பதிவின் நிலை கொண்டு அதன் தொடர்வரிசையின் உண்மைகளை அறிகின்றனர்.

 

நாடாக்களில் கலந்துள்ள இரசாயணம் விஷம் தோய்ந்தது. அதை அரைத்துக் குடித்தாலே தீர்ந்தது. குடிப்போரை மாய்த்துவிடும். ஆனால்  உயர்ந்த சக்திகளைப் பதிவாக்குகின்றது. ஏனெனில் விஷத்தின் ஆற்றலுக்கு “அத்தகைய வலிமை” உண்டு.

 

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்கின்றது. நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும்போது பால்வெளி மண்டலங்களாகித் தூசிகளாக மாறுகின்றது.

 

தூசிகளாக வருவதை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது.  எதிர்நிலையில் அடுத்தடுத்து வரிசையில் இருக்கும் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்டு வரும் தூசிகளில் மோதும் பொழுது மின் கதிர்களாகச் சிதறுகின்றது. ஒளிக்கற்றைகள் பரவுகின்றது.

 

இருப்பினும் இவைகள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவிக் கலந்து இயக்கச் சக்தியாக, கதிரியக்கமாக மாறுகின்றது.

 

இப்படிக் கதிரியக்கமாக மாறியதைத்தான் விஞ்ஞானி செயற்கையான காந்தப்புலனில் இணைக்கின்றான். அதன் உணர்வுக்கொப்ப அதன் இனத்தைக் கவர்ந்தறியும் சக்தியாக விஞ்ஞானி மாற்றுகின்றான்.

 

மின்னலின் தன்மை கடல் பகுதியில் பாய்ந்தால் அது மணலாக மாறுகின்றது. அதைப் பிரித்து “யுரேனியமாக…” எடுக்கின்றான் விஞ்ஞானி.

1.அதனுடன் பல பொருட்களை இணைத்துத்

2.தனித்தன்மை கொண்ட கதிரியக்கமாகவும்,

3.லேசர் (LASER) இயக்கம் என்ற உணர்வின் வேகத் துடிப்பாகவும்

4.ஒன்றை ஊடுருவிப் பிளந்து செல்லும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.

 

மின்னல் எப்படிக் கடினமான பொருட்களையும் பிளந்து செல்கின்றதோ அதே போன்று யுரேனியத்தைப் பயன்படுத்தி எதிர்நிலை கொண்ட பொருட்களில் மோதச் செய்து லேசர் ஒளி இயக்கமாக, எதைக் குறி வைத்து எதை இணைத்துச் செலுத்துகின்றானோ அப்பகுதிகளுக்குச் செல்ல வைக்கின்றான் விஞ்ஞானி.

 

1.இப்படி நாம் விஞ்ஞான அறிவால் தெரிந்து கொள்கின்றோம்.

2.விஞ்ஞானத்தை… “நம்புகின்றோம்”,

3.அது புற நிலைக்குப் பயன்படுகின்றது,

4.மனிதனின் “உடல்… வாழ்க்கைக்குத்தான்” பயன்படுகின்றது.

5.ஆனால் இதனின்  விஷத்தன்மைகளோ மனிதனை உருக்குலைக்கச் செய்கின்றது.

 

தாயின் கருவில் சிசுவாக இருந்தபொழுது விஷத்தை வெல்லும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியர், உணர்வின் அணுக்களின் உண்மையினைக் காணும் திறன் பெற்றார். இதனின் பேருண்மைகளை அறிந்த அகஸ்தியர் தமக்குள் அதை உருவாக்கினார்.

 

ஏதுமறியாத பாலபருவமாக அகஸ்தியர் இருந்தாலும் இதனின் உணர்வின் இயக்கம் அவருள் ஞானமாக வளரத் தொடங்குகிறது.

 

உதாரணமாக புழு ஒன்றும் அறியாத நிலையில் இருக்கின்றது. ஒரு விஷம் கொண்ட குளவி அதைத் தன் விஷத்தால் கொட்டி மண்கூட்டில் அடைத்து விடுகின்றது.

 

புழு குளவியாக ஆனபின் தாய்க் குளவியைப் போன்றே அந்த உணர்வின் செயலாக்கங்களில் இயங்கத் தொடங்குகின்றது.

 

இது போன்றுதான் அகஸ்தியர் தாயின் கருவில் இருக்கும் பொழுது அவருக்குள் விளைந்த உணர்வுகள்

1.அவருடைய குழந்தைப் பருவத்தில் ஞானத்தைப் பிரதிபலிக்கும் நிலையாகவும்,

2.அறியச் செய்யும் உணர்வின் தன்மை வளரும் நிலையாகவும் அங்கே வருகின்றது.

 

அவர் அறியாத பருவத்தில் இருந்த பொழுது உணர்ந்த உண்மைகளை, சொல்லால் வெளிப்படுத்த முடியவில்லை.

 

ஆகவே, உணர்வின் ஒலிகளுக்கொப்ப “அ…” “உ…” “எ…” “ஏ…” என்று இது போன்ற ஒலியின் ஓசைகளை அறிந்து ஒன்றுடன் ஒன்று அடக்கி அதன் சுருதிகள் மாறுவதை இசையின் தன்மையால் அறிந்தார்.

 

உணர்வின் அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றினுள் ஒன்று கலக்கும் பொழுது அதனின் செயல்களையும் அதனின் இசைகளையும் அதனின் ரூபங்களையும் அறிந்தார்.

 

அகஸ்தியர் “பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்…” கண்டுணர்ந்தவை இவை.

 

அண்டத்தையும் அதனின் விரிந்த பரப்பையும் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் மின் கதிரியக்க உணர்வின் நிலைகளையும் அகஸ்தியர் அறிந்துணர்ந்தார்.

 

அதன் தொடர் கொண்டு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றது? என்ற நிலையையும் கண்டுணர்கின்றார்.

 

அதே சமயம் மின்னல் தாக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதி ஆவிகளாகச் சுழல்கின்றன. சனிக் கோளுக்கு மேல்தான் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

 

அவைகளிலிருந்து வெளிவருவதைக் கவர்ந்து அடுக்கு வரிசையில் வரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது கலவைகள் மாறுகின்றன. ஆவியின் தன்மை எடையற்றதாக மாறுவதை சனிக்கோள் தனக்குள் கவர்ந்து அதை நீருள்ளதாக மாற்றுகின்றது.

 

விஷத்தன்மை கொண்ட கேது ராகு இவைகளின் இயக்கத்தால் சூரியன் தனக்குள் இரைக்காக எடுத்துக் கொள்ளும் உணவினை மற்ற கோள்கள் இடைமறித்துத் தனது நிலைக்கு மாற்றி தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

 

அப்படிக் கவர்ந்து ஒவ்வொரு கோளின் நிலையும் அமைகின்றது. ஒவ்வொரு கோளிலும் பல உப கோள்கள் வளர்வதையும் அறிந்துணர்ந்தார் அகஸ்தியர். ஆனால் வெளியில் சொல்ல இயலவில்லை.

 

1.அகஸ்தியர் கண்களால் பார்த்து

2.உணர்வால் நுகர்ந்து

3.அவரினுள் பதிவாகி

4.அந்தப் பதிவின் நிலைகொண்டு தம்முள் விளைந்த ஆற்றலை வெளிப்படுத்தினார்.

 

அது இன்றும் உண்டு.

 

யாம் உபதேசித்த உணர்வை மீண்டும் நினைவுபடுத்தினால் அவர் கண்ட பேருண்மைகளையும், அவர் பெற்ற ஒளியான உணர்வுகளையும் “எல்லோரும் பெறலாம்”.

 

எல்லோரும் பெறக்கூடிய நிலையைத்தான் அகஸ்தியரின் உணர்வைப் பெற்ற பின் வந்த ஞானியர்கள்

“தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…”

என்று பாடினார்கள்.

Leave a Reply