அகண்ட அண்டத்தையும் ஆதி சக்தியின் இயக்கத்தையும் கண்டுணர்ந்த “அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

agastyamala idol

அகண்ட அண்டத்தையும் ஆதி சக்தியின் இயக்கத்தையும் கண்டுணர்ந்த “அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

 

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பல மைல் உயரத்தில் விமானத்தில் சென்று காந்தப் புலனறிவை உயரத்திலிருந்து பாய்ச்சி நீர் எங்கு அதிமாக உள்ளது? எந்தப் பாறை உள்ளது? என்று கண்டுணருகின்றனர் விஞ்ஞானிகள்.

 

அவர்கள் பூமி தன் ஆத்மாவாக எடுப்பதைத்தான் அவ்வாறு கண்டுணர்ந்து அதன் மூலமாகத்தான் இதையெல்லாம் அறியும் நிலை பெறுகின்றனர்.

 

மகரிஷிகள் பண்டைய காலங்களில் அவர்களது நுகரும் சக்தியால் இப்பூமிக்குள் இருக்கும் வெப்ப நிலையையும் அது அனைத்தும் ஆவியாக மாறித் தாவர இனங்களாக மாறி பரமாத்மாவில் தாவர இனச்சத்து சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டுக் கலப்பதை அறிந்துணர்ந்தார்கள்.

 

தம் உடலில் உள்ள உணர்வின் இயக்கத்தைக் கண்டறிந்த மகரிஷிகள் தம் எண்ணத்தைப் பூமிக்குள் செலுத்தி அதற்குள் இருக்கும் தாவர இனச்சத்தையும் பாறைகளின் நிலையையும் நுகர்ந்தறிந்தார்கள்.

 

இன்றைய விஞ்ஞானிகள் “இயந்திரத்தின் துணை கொண்டு” கண்டுணர்கின்றனர்.

 

அன்றைய நிலையில் மகரிஷிகள் பூமிக்குள்ளிருக்கும் வெப்ப நிலைகளையும் மாற்றங்களையும் காடுகள் உருவாகின்றதையும் “தம் உணர்வின் ஆற்றலால்” கண்டுணர்ந்தார்கள்.

 

1.ஒரு உயிரணு தனக்குள் நுகர்ந்து உணர்ந்து உடலாகும் நிலையும்

2.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையும்

3.மனிதனானபின் தன் ஆற்றல்மிக்கச் சக்தியால் தாம் கண்டுணரும் சக்தி பெற்று,

4.இந்த பூமிக்குள் இருக்கும் செயலாக்கத்தைத் தன் உடலில் இருக்கும் உணர்வலைகளைச் செலுத்தி

5.அதையெல்லாம் அறிந்து கொண்டனர்.

 

அகத்தியர் என்பவர் முதல் மனிதனாக

1.இயற்கையின் மாற்றம் எவ்வாறு ஆகின்றது?

2.இயற்கையின் அணுவின் ஆற்றல் எவ்வாறு ஆகின்றது?

3.அணுவின் வளர்ச்சி எவ்வாறு ஆகின்றது? என்ற நிலைகளைக் கண்டுணர்ந்தார்.

 

பூமிக்குள் நடக்கும் செயல்களையும் உறைந்த நிலைகளும் விண்ணின் ஆற்றல்களையும் வேறு பிரபஞ்சத்தில் ஏற்படும் சில நிலைகளையும் அவர் அறிந்துணர்ந்தார்.

 

நமது பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களையும் பூமியிலிருந்து வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரமாத்மாவாக மாறுகிறது என்ற நிலையையும் அவர் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.

 

அவர் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வின் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இன்றும் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.

 

விண்ணுலகின் ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் முதல் மனிதனான அகத்தியர் புழுவிலிருந்து மனிதனாக மாறிப் பேரண்டத்தின் சக்தியையும் பூமிக்குள் இருக்கின்ற சக்தியையும் பூமிக்குள் இருக்கும் உணர்வலைகளையும் கண்டுணர்ந்தார்.

 

தனக்குள் (மனித உணர்வுக்குள்) கண்டுணர்ந்ததைச் சக்தி வாய்ந்ததாக மாற்றி

1.தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி

2.எதனையும் அறிந்திடும் ஆற்றல்மிக்க உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு

3.தனக்குள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவர் அகத்தியர்.

 

“அணுவின் ஆற்றலை அறிந்தவர்” என்று சொல்வார்கள். இன்று கதைகளில் வரும் அகத்தியர் இவரல்ல.

 

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன் முதல் மனிதனாக விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவரே அகத்தியர். சந்தர்ப்பவசத்தால் அவருக்கு இத்தகைய ஆற்றல் கிடைக்கின்றது.

 

1.அவர் கற்றுணர்ந்த இந்த உணர்வுகள்

2.அவர் உடலிலே விளைந்த ஆற்றல்மிக்க சக்திகள்

3.இன்றும் பூமியிலே பரமாத்மாவில் கலந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

 

அதை நுகரவே இந்த உபதேசம். நுகர்ந்தால் அவரைப் போன்று நாமும் மெய்ஞானியாக முடியும். அவர் ஈர்ப்பு வட்டத்தில் நாம் இணைந்து வாழலாம்.

Leave a Reply